31 July 2013

கல்லூரி வாழ்க்கை...



கல்லூரி வாழ்க்கை...

பள்ளிப் படிப்பிலிருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், இயல்பாகவே சில மனோரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அத்தகையப் சிக்கல்களை எவ்வாறு களையலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

கடந்த 1985ம் ஆண்டிலிருந்தே கல்லூரி மாணவர்களின் மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், 30% மாணவர்கள்(Freshers), கட்டுப்படுத்த முடியாத உணர்வெழுச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். னநலம் தொடர்பான கவுன்சிலிங் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பல மாணவர்கள், கல்லூரி என்பதைப் பற்றி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் செயற்கையான விஷயங்களைப் பார்த்து, வேறுவிதமாக கற்பனை செய்து வைத்துள்ளார்கள் அல்லது தவறான நபர்கள் சொல்லும் போலியான தகவல்களையும் நம்பி ஏமாந்து போகிறார்கள். ஆனால் உண்மை நிலை என்னவெனில், அவர்கள் கற்பனை, நிஜத்தோடு பல இடங்களில் முரண்படுகிறது.

இதன்மூலம் மாணவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். கல்லூரியின் புதிய சூழ்நிலையை அனைத்து மாணவர்களாலும் உடனே உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவர்களுக்கு சில வாரங்களோ அல்லது சில மாதங்களோ தேவைப்படுகின்றன. சிலருக்கோ, கல்லூரி சூழலைப் பழக, ஒரு வருடம்கூட ஆகிவிடுகிறது.

கல்லூரி வாழ்க்கையின் புதிய சூழலை பழகிக்கொள்ள சிரமப்படும் மாணவர்கள், பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றினால், அவர்கள் எளிதில் தயாராகிவிடலாம்.

நேர மேலாண்மை

கல்லூரி என்றாலே, கட்டுக்கடங்காத சுதந்திரம் உடையது என்று பல மாணவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் கற்பனை உலகில் மிதக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், சுதந்திரம் என்பதோடு, பொறுப்பும் சேர்ந்து வருகிறது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். கல்லூரி வாழ்க்கையில் நேர மேலாண்மை என்பது மிகவும் முக்கியம். நேர மேலாண்மை என்பது பேசுவதற்கு எளிதான விஷயமாக இருந்தாலும், நடைமுறையில் பல தவறுகளுக்குப் பின்னரே, நமக்கு கைக்கூடுகிறது.

உங்களின் ஆசிரியர்கள் பல வேலைகளைக் கொடுத்திருக்கலாம். படிப்பு அல்லாத, விளையாட்டு உள்ளிட்ட பல தனித்திறன் அம்சங்களுக்கும் நீங்கள் நேரம் ஒதுகக் வேண்டியிருக்கலாம். இதுபோன்ற சூழலில் உங்களுக்கு இயல்பாகவே அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, ஒரு திட்டமிடுநரின் உதவி உங்களுக்கு தேவையாய் இருக்கும். இதன்மூலம், நீங்கள் இரண்டையும் சிரமமின்றி நிர்வகிக்கலாம்.

திறந்த மனதுடன் இருத்தல்

கல்லூரி என்ற ஒரு புதிய உலகத்தில் நுழையும் மாணவர், பல புதிய வித்தியாசமான நபர்களை, அதுவரை சந்தித்திராத பல மனிதர்களை சந்திக்கிறார். அவர்களுடன் சகஜமாக பழக வேண்டிய சூழல் அவருக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் அவர் திறந்த மனதுடன் இருப்பது அவசியமாகிறது.

கல்லூரி என்பது வெறும் புத்தகங்களை படிக்கும் இடம் மட்டுமல்ல. நீங்கள் ஒரு வளர்ந்த மனிதர் என்ற நிலைக்கு பக்குவப்படுவது இந்த கல்லூரி வாழ்க்கையின்போதுதான். திறந்த மனதுடன் நீங்கள் இருப்பதானது, மற்றவர்களைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்வதற்கும், ஏன், உங்களின் ஆளுமைப் பற்றியே நீங்கள் புரிந்துகொள்வதற்கும் உதவுகிறது.

திறந்த மனதுடன் இருப்பதென்பது, உங்களின் நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் உரிமைகளைத் துறத்தல் என்பதல்ல. பொறுப்புடனும், மரியாதைக்குரிய மனிதராக இருப்பதோடு, மற்றவர்களை புரிந்துகொள்வதும் இதில் அடங்கும்.

ஒரு தொலைபேசி அழைப்பு போதுமே!


நீங்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய சூழல் இருந்தால், உங்களின் நிலை சற்றே கடினமாகத்தான் இருக்கும். அதுவரை வீட்டுச் சூழலிலேயே பழக்கப்பட்ட நீங்கள், முற்றிலும் ஒரு புதிய, அதேசமயம் ஒரு பக்குவம் வாய்ந்த சூழலை எதிர்நோக்குகிறீர்கள். இந்த சூழலைப் பழுகுவதற்கு, ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், அந்த புதிய சூழலானது, உங்களின் வாழ்க்கைக்கு அவசியம் தேவைப்படும் புதிய அனுபவம்.

வீட்டு நினைப்பு இருந்தால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இன்றைய தகவல்தொடர்பு யுகத்தில், ஒரு தொலைபேசி அழைப்பே போதும். அவர்களின் குரலையும், ஆறுதல் வார்த்தையையும் நீங்கள் கேட்டு நிம்மதியடையலாம். உங்களின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் நீங்கள் கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

நீங்கள் பழகிய உணவின் சுவைக்கு, விடுதி உணவு முற்றிலும் புதிதாக இருக்கலாம். ஆனால், நடைமுறை வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே அம்சங்களைக் கொண்டிருக்காது. பலவிதமான அம்சங்களையும் தன்னுள் அடக்கியதே நடைமுறை வாழ்க்கை. எனவே, திறந்த மனதுடன் அனைத்தையும் ஏற்க பழகுங்கள். உங்களின் கல்லூரி வாழ்க்கை அற்புதமாக அமையும்.

இறுதியாக மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி பக்கத்தின் சார்பாக சிறு அறிவுரையை சொல்ல விரும்புகிறோம். இந்த 4 ஆண்டுகள் கல்லூரி வாழ்க்கை தான், உங்களின் 60 ஆண்டுகால எதிர்கால வாழ்கையை தீர்மானிக்கிறது.

கல்லூரி வாழ்கையில் பல எண்ண சிதறல்கள் ஏற்படும். உங்களின் ஒரே குறிக்கோள் படிப்பு என்பது மட்டுமே இருக்க வேண்டும். நீங்கள் இந்த 4 ஆண்டு கல்லூரி படிப்பை கஷ்டப்பட்டு படித்தீர்கள் என்றால்,60 ஆண்டுகள சிரமப்படாமல் வாழலாம்.எனவே உங்களின் கல்லூரி படிப்பை எதிர்கால வாழ்கையின் முதலீடாக மாற்றுவது மாணவர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது.


Top of Form

Bottom of Form

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home