15 October 2013

அப்துல் கலாம் பிறந்தநாள்


அக்டோபர் 15, பிறந்தநாள்..
ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம். இதுதான் கலாமின் முழுப் பெயர். அக்டோபர் 15,1931-ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். தந்தை ஜெயுனுல்லாபுதீன், தாய் ஆஷியம்மா. தந்தையார் படகு கட்டும் தொழில் செய்துவந்தார். கலாம் படிக்கும் காலத்தில் செய்தித்தாள் போட்டும், புளியங்கொட்டை விற்றும் வீட்டுக்கு உதவினார். நேர்மையான பண்பை தன் அப்பாவிடம் இருந்து பெற்றதாக சிலாகிப்பார் கலாம்.
 உயர்நிலைக் கல்வியை முடித்தப் பின், திருச்சியில் ஒரு கல்லூரியில் இயற்பியல் துறையில் பயின்றார். எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் ஏரோனாடிக்கல் பொறியியல் துறையில் இடம் கிடைத்து, பணம் கட்ட முடியாமல் இருந்தபொழுது இவரின் சகோதரிதான் நகைகளைக் கொடுத்து படிக்க அனுப்பினார். கல்லூரி வந்த சில நாட்களிலேயே, தொழிலில் ஏற்பட்ட பாதிப்பில் அப்பா, திரும்ப ஊருக்கு வரச்சொல்லியதால் தன் புத்தகங்களை  எடைக்கு போட்டு பணம் திரட்டப்போன இடத்தில் புத்தகங்களை வாங்காமல் பணத்தை மட்டும் கொடுத்து மேலே படிக்கச் சொன்ன பேப்பர்காரரை இன்னமும் நன்றியோடு குறிப்பிடுவார் கலாம்.
கல்லூரியில் உணவுச் செலவை குறைக்க சைவத்துக்கு மாறினார். அதுவே இப்போதும் தொடர்கிறது. பொறியியல் கல்வியை முடித்ததும் விமானி ஆகவே ஆசைப்பட்டார். ஆனால், ஓர் இடம் பின்தங்கி வாய்ப்பை இழந்தார். கண்ணீரோடு நின்றவரை சுவாமி சிவானந்தரின் ''இதைவிட பெரிதான ஒன்றுக்காக நீ அனுப்பப்பட்டு இருக்கிறாய்'' என்ற வரிகள் உத்வேகப்படுத்தின.
விக்ரம் சாராபாயின் ஊக்கத்தில் இந்திய விண்வெளிக் கழகத்தில் இணைந்தார். அங்கேதான் முதல் சுதேசி விண்கலமான எஸ்.எல்.வியை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ரோகினி, திரிசூல், ப்ரித்வி, ஆகாஷ் என இந்தியாவின் விஞ்ஞான வலிமையை உலகுக்கு உரக்கச் சொல்லும் ஏவுகணைகளை உருவாக்கி 'இந்தியாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத் தந்தை’ என அழைக்கப்பட்டார்.
புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.திருக்குறள், குரான் எப்பொழுதும் உடன் இருக்கும். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள் பிடிக்கும். வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.
பிடித்த நிறம் கருநீலம். ஆடைகள் அதே நிறத்தில் இருக்கும். எளிமையான ஆடைகளையே அணிவார். எஸ்.எல்.வி-3 வெற்றிக்குப் பிறகு இந்திரா காந்தி, கலாமைச் சந்திக்க நினைத்தார். அப்பொழுது ''என்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே'' என கலாம் சொல்ல, ''வெற்றி என்கிற அழகான ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்!' என  மூத்த விஞ்ஞானி சதீஷ் தவான் சொன்னார்.
இந்தியா முழுக்க மாணவர்களை சந்திப்பதிலும் பாடம் நடத்துவதிலும் தன் நேரத்தை செலவழித்து வந்தார். தன்னிடம் அற்புதமான ஒரு கேள்வி கேட்டதற்காக தமிழ்நாட்டு சுட்டி ஒருவரை டெல்லி வரை அழைத்து மரியாதை செய்தார்.  
ஜனாதிபதியாக இருந்தபோது, ராஷ்ட்ரபதி பவனில் இருக்கும் மொகல் தோட்டத்தை மக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டார். தன் பதவி ஏற்பு விழாவுக்கு சுட்டிகளை வரவழைத்தார். பதவிக் காலம் முடிந்து வெளியேறும்போது எந்த பரிசுப் பொருளையும் எடுத்து செல்லவில்லை. இரண்டே சூட்கேஸ்களில் அவரின் அத்தனை உடமைகளும் அடங்கிவிட்டன. தன் உறவினர்கள் டெல்லி வந்து தங்கியபோதுது அதற்கான செலவை ஜனாதிபதி மாளிகை கணக்கில் வைக்காமல் தானே செலுத்தினார்.
இந்தியாவின் உயரிய கௌரவமாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது பெற்றவர். ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் கிலோ கணக்கில் செயற்கை கால்களை அணிந்துகொண்டு இருந்த சுட்டிகளுக்கு வெறும் நானூறு கிராம் எடையில் செயற்கை கால்களை வடிவமைத்துத் தந்தார்.
தான் எழுதிய அக்னிச் சிறகுகள் நூலில் ''என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்த பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
- பூ.கொ.சரவணன்
ஓவியம்: ஹாசிப்கான்
***************************************************************************




அப்துல் கலாம் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

''
அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக மலிந்துவிட்ட இந்தக் காலத்தில், நீங்கள் ஏன் ஓர் அரசியல் கட்சி துவங்கக் கூடாது? இளைஞர்கள் நாங்கள் உங்களுக்குத் தார்மீக ஆதரவு அளிப்போமே?''

''
நண்பர்களே, ஊழலை ஒழிப்பதற்காகப் பல சட்டங்கள் இருக்கின்றன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்தின் முன் நிறுத் தப்படுகிறார்கள். சிலர் தண்டிக்கப்படுகிறார் கள். லஞ்சம் எங்கே இருந்து ஆரம்பிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஆண், பெண்கள்தான் தங்கள் பணிகளின்போது ஊழலில் ஈடுபடு கிறார்கள். ஆனால், ஊழல் என்பது எனக்கு இழுக்கு என்று ஒவ்வொருவரும் நினைக்கக் கூடிய சூழ்நிலை வர வேண்டும். அது எப்படிச் சாத்தியமாகும்? இந்தியாவில் 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகள் லஞ்சத்தில் ஈடுபட்டு இருக்கும் என்று வைத்துக்கொண்டால் கூட, அந்த வீடுகளில் எப்படி லஞ்சத்தை ஒழிப்பது? இளைஞர்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும்போது, அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? லஞ்சத்தால் வரும் இழிவுகளை எப்படி அந்தக் குழந்தைகளால், இளைஞர்களால் தாங்கிக்கொள்ள முடியும்? ஊழலால் வரும் பணத்தில் எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்களால் துரதிர்ஷ்டவசமாக லஞ்சத்தில் ஈடு படும் பெற்றோர்களை மாற்ற முடியுமா என்பது தான் கேள்வி. மாற்ற முடியும் என்பதுதான் எனது நம்பிக்கை. ஏனென்றால், அன்பு, பாசம் என்ற மிகப் பெரிய ஆயுதம், இளைய சமுதாயத்தின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் லஞ்சம் வாங்கும் தங்களின் பெற்றோர்கள் மீது பிரயோகிப்பார்கள் என்றால், லஞ்சத்தைவிட்டு பெற்றோர்களால் கண்டிப்பாக வெளியே வர முடியும். ஏனென்றால், தான் பெற்ற பிள்ளைகள் அவமானமாக நினைக்கும் ஓர் இழி செயலான ஊழலைச் செய்ய, எந்த ஒரு பெற்றோருக்கும் மனம் வராது. ஒவ்வொரு குடும்பமும், அந்தக் குடும்பத்தில் உள்ள இளைய சமுதாயமும், லஞ்சத்துக்கு எதிராக தங்கள் குடும்பத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தால், நல்ல சமுதாயம் உருவாகும். சமூக உணர்வோடு கூடிய நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். நாடு, ஊழலில் இருந்து விடுபடும். அதை விடுத்து, ஒரு தலைவனால் மட்டுமே, அல்லது ஒரு கட்சியால் அல்லது மீடியாவால் அல்லது சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நாடு மாற வேண்டும் என்றால், ஒவ்வொரு வீடும் மாற வேண்டும்.

இதற்காகத்தான் இளைய சமுதாயத்துக்காக ஓர் இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். அதில் தலைவர் என்று யாரும் இல்லை. அது ஓர் இளைஞர்கள் இயக்கம். அந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், 'என்னால் எதைக் கொடுக்க முடியும்அல்லது 'உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்என்ற எண்ணத்தை, இளைஞர்கள் மனதில் உருவாக்குவதுதான். 10 இளைஞர்கள் ஒன்று கூடி இந்த உணர்வை வளர்த்து, அதைச் செயல்படுத்துவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம். எந்த ஊரிலும் இதை ஆரம்பிக்க முடியும். 'எனக்கு வேண்டும்என்ற சுய நல எண்ணம்தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. அந்த எண்ணத்தை மாற்றி, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனத்தை, வீட்டை, குடும்பத்தைத் தூய்மையானதாக மாற்றினால் நாடு மாறும்.

'
நான் என்றென்றைக்கும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்என்ற மனநிலை நம் இளைஞர் களுக்கு வரும் என்றால், அந்த மனநிலை, 'எனக்கு வேண்டும்... எனக்குத்தான் வேண்டும்என்ற எண்ணத்தைச் சுட்டெரிக்கும். இளைஞர்களே நீங்கள் எல்லோரும் இப்பணிக்குத் தயாரா? வாருங்கள் நண்பர்களே!''

விகடன் மேடையில் - அப்துல் கலாம்
(
ஆனந்த விகடன்; 18.மே.2011)




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home