24 November 2013

சிறந்த Life Partner ரை தேர்ந்தெடுக்க வழிகள்.



நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்துக் கொள்ளப் போகும் லைப் பார்ட்னர்அமைவதைப் பொறுத்தே உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
உங்களவர் எப்படிப்பட்டவராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்? அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு மனதளவில் நீங்கள் எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாமா?
* நான் திருமணத்திற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண்ணம் முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே உங்களுக்கு வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும்.
* உங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
* ஒருவருடைய கல்வி மற்றும் சம்பளம் இரண்டும்தான் தம்பதியரிடையே ஈகோ பிரச்சினை ஏற்படக் காரணமாகிறது. எனவே உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்ட கல்வித் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
* வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள் உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகுமா என்பதை கவனிக்கவேண்டியது முக்கியம்.
* பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தால், தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படுகிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் எப்படிப்பட்டவர், நமக்கு ஏற்ற துணையாக இருப்பாரா என்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அப்படிப்பட்ட வாழ்க்கைதான் இனிமையாக இருக்கும்.
* உங்களுக்குப் பிடித்த மாதிரி பார்ப்பதற்கு வசீகரமாக இல்லாவிட்டாலும், ‘பரவாயில்லைஎன்று சொல்லும் அளவிற்காவது பார்க்க வேண்டும்.
* வாழ்க்கைத் துணை அழகாக இருந்து அவரிடம் நல்ல குணம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே அழகை விட குணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்குப் பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால்தான் உங்கள் வாழ்க்கையில் எந்த மனக் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
* என்னதான் இருந்தாலும் நீங்கள் 100 சதவீதம் எதிர்பார்ப்பது போன்ற வாழ்க்கைத் துணை கிடைப்பது கடினம். ஆதலால் நீங்கள் எதிர்பார்த்த அதிக பொருத்தங்களுடன் கூடிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதுடன், அட்ஜஸ்ட் செய்யும் மனப் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* நீங்கள் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைத் திருமணத்திற்கு முன்பே உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அதனால் திருமணத்திற்குப் பிறகு எந்தக் குழப்பங்களும் ஏற்படாது. நாம் மனம் விட்டுப் பேசுவதில் முக்கியமான விஷயம், நம்மைப் பற்றிய எந்த விஷயத்தையும் மறைத்துவிடாமல் சொல்லிவிடும்போது பிளாஷ்பேக் திருப்பங்களுக்கு வாய்ப்பில்லாது போய்விடுகிறது.
* உடை விஷயங்கள் சிலருக்குப் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. உங்களது வாழ்க்கைத் துணை எந்த மாதிரியான உடை உடுத்த வேண்டும் என்று நினைப்பதைப் பற்றி முதலில் பேசுங்கள். உடை கலாச்சாரத்தை மாற்றுவதற்கு பெரும்பாலும் யாரும் முன்வருவதில்லை. ஆனால் உங்களது விருப்பத்தை முதலிலேயே சொல்லி விடுங்கள்.
* பெற்றோர் அல்லது மற்றவர் நிர்பந்தத்திற்குப் பணிந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.
* திருமணம் வேண்டாம் என்று சொல்பவர்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். ஏனெனில் அவர்களுக்கு சொல்ல முடியாத பிரச்சினைகள், சில பலகீனங்கள் அல்லது திருமணத்தின் மீது தவறான நம்பிக்கைகள் இருக்கும். எனவே அவர்களிடம் மனம் விட்டுப் பேசி அவர்களது கஷ்டங்களை அறிந்துக் கொள்ளுங்கள். உங்களால் தீர்க்க முடியாவிட்டால் கவுன்சலிங் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுங்கள்.
* திருமணத்திற்கு முன்பே உங்களது வாழ்க்கைத் துணையின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
* உங்களது வாழ்க்கைத் துணை வேலைக்கு சென்று கொண்டிருந்தால், திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லலாமா, வேண்டாமா என்பதை முதலிலேயே தெரிவித்து விடுங்கள். இப்படி செய்வதால் திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
* சிலர் அமைதியான சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் குறைசொல்லும் அல்லது கோபப்படுகின்ற வாழ்க்கைத் துணை அமைந்து விடுவார்கள். இது திருமணத்திற்குப் பிறகு நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எனவே உங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்ட சுபாவம் உடையவர் என்பதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் திருமணத்துக்கு சந்தோஷமாய் சம்மதம் சொல்லுங்கள்.
தகவலுக்கு நன்றி.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home