3 November 2014

ஒரு போட்டோவை வைத்து போலீஸ் நடத்தும் விபரீத விளையாட்டு!


(வாட்ஸ் அப்'பில் வலம் வரும்க் பெண்ணின் புகைப்படம்!)
*
'டியர் ஃப்ரெண்ட்ஸ் இப்போ ஒரு லேடியோட போட்டோ அனுப்பி இருக்கிறேன். அந்த லேடி சென்னையில் என்ன பண்றாங்கன்னா, கேஸ் கனெக்ஷன் செக் பண்ணுகிற மாதிரி தனியாக லேடீஸ் இருக்கிற வீடுகளாகப் பார்த்து வருவாங்க. சமையல் அறைக்குள் சென்று கேஸ் செக் செய்வது போல் பார்த்துவிட்டு கர்ச்சீப்பில் குளோரோஃபாம் வைத்து அதை வீட்டில் இருக்கும் பெண்ணின் மூக்கில் வைத்துப் பொத்திவிடுவார். வீட்டில் இருப்பவர் மயக்கமடைந்ததும் நகை, பணம் அத்தனையையும் திருடிக்கொண்டு எஸ்கேப் ஆகிடுவார்.


என்னுடைய ஃப்ரெண்ட் மகேஷ்குமார், துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவருடைய ஸ்டேஷன்ல நடந்த கேஸ் இது. அவர் எனக்கு இந்த லேடியோட படத்தை அனுப்பியிருக்காரு. உங்க வீட்டுல இருக்கும் லேடீஸ்கிட்ட இந்தப் படத்தைக் காட்டி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்க. சென்னையில்தான் இப்போ இதுமாதிரி திருட்டு அதிகமாகியிருக்கு. யார் வந்தாலும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கதவைத் திறக்காதீங்க. இந்த லேடி ரொம்பவும் ஸ்டைலா இருப்பாங்க. இங்கிலீஷ் பேசுவாங்க. கவனமா இருங்க. இதை உங்களோட ஃப்ரெண்ட்ஸுக்கும் ஷேர் பண்ணுங்க. தேங்க்ஸ் டூ ஆல்!’ என்று ஆடியோ வாய்ஸுடன், ஒரு பெண்ணின் படமும் சேர்ந்து வந்து வாட்ஸ்அப் மெசேஜில் விழுந்தது. கிட்டதட்ட ஒரே நாளில் பல லட்சக்கணக்கானவர்கள் அந்தப் படத்தை ஷேர் செய்ய ஆரம்பித்தனர்.
இது எந்த அளவுக்கு நிஜம் என்று அறிய நாம் விசாரணையில் இறங்கினோம். அந்த வாய்ஸ் மெசேஜில் சொல்லப்பட்டு இருக்கும் துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாரை சந்தித்தோம். 'எனக்கும் அந்த மெசேஜ் வந்தது. கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் முனுசாமிதான் அதை எனக்கு அனுப்பினாரு. ஆரம்பத்துல வந்த வாய்ஸ்ல என்னோட பெயர் எங்கேயும் இல்லை. பாதுகாப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராக இருக்கும் என்னோட ஃப்ரெண்டு ஜெயசீலன் என்பவர்தான் என்னோட பெயரை சேர்த்து இந்த ஆடியோவை அனுப்பியிருக்காரு. அவரும் தப்பா நினைச்சு எதுவும் பண்ணலை. ஒரு அலர்ட் ஆக இருக்கட்டுமே என்றுதான் செஞ்சிருக்காரு. இந்த சம்பவம் எங்கு நடந்தது, அந்தப் பொண்ணு யாருன்னு எனக்குத் தெரியாது. எனக்கு ஏகப்பட்ட போன் கால் வந்துட்டே இருக்கு. எங்க ஸ்டேஷன்ல அப்படி எந்த வழக்கும் இல்லை. அந்த லேடியும் எனக்கு யாரென்று தெரியாது'' என்று ஆரம்பத்திலேயே முழுமையாக மறுத்தார்.
அவர் குறிப்பிட்ட கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் முனுசாமியிடம் பேசினோம். ''எனக்கு ஒரு குரூப்ல இருந்து இந்த ஆடியோவும் போட்டோவும் வந்தது. ஆனால், அதில் மகேஷ்குமார் பெயர் இல்லையே... அவர் பெயரை இதில் யார் சேர்த்தாங்கன்னு எனக்குத் தெரியாது'' என்று முடித்துக் கொண்டார். அதாவது அவருக்கும் இது பற்றிய முழுமையான நியூஸ் தெரியவில்லை. பொத்தாம் பொதுவாகத்தான் தெரிந்துள்ளது.
பாதுகாப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசீலனுக்கு இதுபற்றி முழுமையாகத் தெரியும் என்று நினைத்து அவரிடம் கேட்டபோது, ''நான் எனக்கு வந்த மெசேஜை மட்டும்தான் அனுப்பினேன். மகேஷ்குமார் பெயரை நான் சேர்க்கவே இல்லை!'' என்று மறுத்தார். பிரச்னையில் சம்பந்தப்பட்ட மூவருமே இதனை மறுத்த நிலையில் நமக்கு குழப்பம் அதிகம் ஆனது. அதற்குள் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வந்தது. அதில், ''வெரி வெரி சாரி மகேஷ்... உன்னோட பெயரை அந்த மெசேஜ்ல சேர்த்ததால உனக்கு நிறைய பிரச்னை வந்திருச்சு. ஒரு அலர்ட்டாக இருக்கட்டுமே என உன்னோட பெயரை நான்தான் சேர்த்தேன். அதில் உனக்கு இவ்வளவு பிரச்னை வரும் என நான் நினைக்கலை. இது எல்லாமே என்னோட தவறுதான். என்னை மன்னிச்சிடு மகேஷ்!'' என்று உருக்கமாகப் பேசிருக்கிறார். ஆக, எங்கிருந்தோ வந்த லேடி போட்டோவுடன் ஆடியோவை சேர்த்து அனுப்பியது ஜெயசீலன் என்பது உறுதியாகியிருக்கிறது.
நாம் இவர்களிடம் விசாரித்து வந்த நிலையில் இன்னொரு ஆடியோ மெசேஜ் நமக்கு வந்தது. அதில், 'நான் ஐ.டி துறையில் பணியாற்றுகிறேன். நானும், எனது மகளும் 'வாட்ஸ்அப்’ பயன்படுத்துகிறோம். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு என்னுடைய தோழி ஒருத்தி, என்னுடைய புகைப்படத்துடன் கூடிய மெசேஜ் ஒன்றை வாட்ஸ்அப்பில் பார்த்ததாகவும், அதில் நான் மோசடிப் பெண் போலவும், என்னிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் சொல்லப்பட்டு இருப்பதாகச் சொன்னார். அதன் பிறகுதான் நான் அதைப் பார்த்தேன். இந்தத் தகவலால் நானும், என் குடும்பத்தினரும் கடுமையான மனவேதனை அடைந்துள்ளோம். இதுகுறித்து எனக்கும் பல போன்கள் வருகின்றன. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி 'தானே’ சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளேன். அந்தப் புகாரின் எண் 025429804. இந்தத் தகவலைப் பரப்பியவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல் எந்த நோக்கத்துக்காகப் பரப்பிவிடப்பட்டது என்று தெரியவில்லை. நான் குற்றமற்றவர் என்ற இந்த மெசேஜையும் தயவு செய்து ஷேர் செய்யுங்கள்' என்று அதில் சொல்லப்பட்டு இருந்தது.
அந்தப் பெண் புகார் அளித்துள்ளதாகச் சொல்லப்படும் 'தானே’ ஸ்டேஷனுக்கு தொடர்புகொள்ள முயற்சித்தோம். மகாராஷ்டிர மாநிலம் தானே சைபர் க்ரைம் எஸ்.பி திவாரியிடம் பேசினோம். ''வாட்ஸ் அப்பில் குறிப்பிட்டுள்ள அந்த இளம்பெண் எங்களிடம் குறிப்பிட்ட அந்த தேதியில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. யாரோ இதில் விளையாடி இருக்கிறார்கள். விசாரித்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.
சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமாரின் கவனத்துக்கு இதனைக் கொண்டு சென்றோம். 'வாட்ஸ்அப்பில் வரும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மையானவை என்று சொல்ல முடியாது. எதையும் உறுதிப்படுத்தாமல் இன்னொருவருக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் பெயர் இதில் எப்படி வந்தது என்று விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண் இங்கே புகார் கொடுத்தால் நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்'' என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.
மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படும் 'நேஷனல் சைபர் சேஃப்ட்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ஸ்’ என்ற அமைப்பின் கூடுதல் இயக்குநர் அமர்பிரசாத் ரெட்டியிடம் இதுபற்றிக் கேட்டோம். 'ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பெண்களை இழிவுப்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. வாட்ஸ்அப்பில் வரும் இந்த போட்டோவில் உள்ள பெண்ணைப் பிடிக்காத யாரோ ஒருவர் கிளப்பிவிட்ட வதந்திதான் இது.
சமூக வலைத்தளங்களில் பெண்கள் தங்களது விதவிதமான படங்கள் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் சாதாரணமாக எடுக்கப்படும் படங்கள் நாம் பார்ப்பதற்கு மட்டும்தான். அதை நமது நண்பர்களும், உறவினர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் பகிர்கிறோம். ஆனால், அது எத்தனை லட்சம் பேர் பார்ப்பார்கள் என்பதை யாரும் உணர்வதில்லை. அப்படிப் பார்ப்பவர்களை எல்லாம் நான் கண்காணிக்க முடியுமா? கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர், தாங்கள் ஹாஸ்டலில் இரவு உடைகளில் இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். உங்களோட பர்சனல் போட்டோ ஊருக்கெல்லாம் எதுக்கு காட்டுறீங்க? இதுதான் தேவையில்லாத பல பிரச்னைகளுக்குக் காரணமாகிறது. சுற்றி இருப்பவர்களைக் குற்றம் சொல்வதைவிட நாம் எச்சரிக்கையாக இருப்பதுதானே நல்லது'' என்று எச்சரித்தார்.
கண்ணுக்குத் தெரியாத எதிரி உங்களைச் சுற்றியும் இருக்கலாம்... உஷார்!
- எஸ்.மகேஷ்
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home