4 April 2013

தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறதா ???

தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறதா ???







முஸ்லிம்கள் தங்கள் பெயர்களை அரபு மொழியிலேயே சூட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தமது வழிபாடுகளை அரபு மொழியிலேயே நடத்துகின்றனர். பள்ளி வாசல்களில் தொழுகைக்காக விடப்படும் அழைப்பும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளது.

அரபு நாட்டில் அரபு மொழியில் இவை அமைந்திருந்தால் அதில் நியாயம் இருக்கும். தமிழ் நாட்டிலோ, அரபு மொழி தெரியாத இன்ன பிற பகுதிகளிலோ அரபு மொழியில் இவை அமைந்திருப்பது மற்ற மொழிகளை மட்டம் தட்டும் காரியமே என்பது இஸ்லாத்திற்கு எதிராகக் கூறப்படும் விமர்சனங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

இவையெல்லாம் அரபு மொழியில் ஏன் அமைந்துள்ளன என்பதை அறிவதற்கு முன்னால் மொழிகளைப் பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். 

ஒவ்வொரு மொழி பேசக்கூடிய மக்களும் தமது மொழியே உலகில் சிறந்த மொழி என்று நினைக்கின்றனர். அம்மொழியை பேசுவதால் தாம் தான் சிறந்த சமுதாயத்தினர் எனக் கருதுகின்றனர்.
படிப்பறிவில்லாத சாதாரண மக்கள் மட்டும் தான் இவ்வாறு நம்புகின்றார்களா? பண்டிதர்களும் பகுத்தறிவாதிகளும் கூட இப்படித்தான் நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கையை இஸ்லாம் எதிர்க்கிறது. மனிதன் தான் நினைக்கின்ற கருத்தை மற்றவர்களுக்குக் கூறுகின்ற ஒரு சாதனம் தான் மொழி. இதைத் தவிர மொழிக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடு.

எல்லா மொழிகளும் சமமான மதிப்புடையவை தான். எந்த மொழியும் மற்ற எந்த மொழியையும் விட தாழ்ந்ததுமில்லை, உயர்ந்ததுமில்லை. எந்த மொழி பேசுபவர்களும் மற்ற மொழி பேசக்கூடியவர்களை விட சிறந்தவர்களுமல்லர், தாழ்ந்தவர்களுமல்லர் என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.
தமிழகத்தில் பிறந்து தமிழ் மொழி பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு யாரும் தமிழகத்தில் பிறக்கவில்லை. பெற்றோர்களும் சுற்றத்தாரும் நம்மீது தமிழைத் திணித்ததால் தமிழ் பேசுகிறோம். வேறு எங்காவது நாம் பிறந்திருந்தால் அங்குள்ள மொழியில் நமது கருத்தைத் தெரிவிப்போம். எனவே இதில் பெருமையடிக்கவோ சிறுமையாகக் கருதவோ இடமில்லை என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசும் சமுதாயத்தில் பிறந்தார்கள். உலகிலேயே அரபுகள் போன்று மொழி வெறி பிடித்தவர்கள் அன்றைக்கு இருந்ததில்லை. 

தம்மை அரபுகள் எனக் கூறிக் கொண்டே அந்த சமுதாயம் ஏனைய மொழி பேசுவோரை அஜமிகள் (வாயில்லாத ஜீவன்கள்) என்று குறிப்பிடுவர். மற்ற மொழி பேசும் மக்களை மக்களாகக் கூட அவர்கள் கருதுவதில்லை. மற்றவர்களின் மொழியை வாயில்லா ஜீவன்களின் சப்தமாகத் தான் அவர்கள் மதித்தார்கள்.
மொழி வெறி பிடித்து அலைந்த அந்தச் சமுதாயத்தில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் அரபு மொழி பேசுகின்ற எவருக்கும் அரபு மொழி பேசாத எவரையும் விட எந்தச் சிறப்பும் கிடையாதுஎன்று பிரகடனம் செய்தார்கள். தமது தாய் மொழியே அரபு மொழியாக இருந்தும் தமது மொழிக்குக் கூட எந்தச் சிறப்பும் கிடையாது என்று பிரகடனம் செய்த ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்.
இறைவனின் பார்வையில் எந்த மொழியும் வேறு எந்த மொழியையும் விட சிறந்ததில்லை என்பதை இன்னும் தெளிவாக இஸ்லாம் அறிவிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடவுளின் தூதர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும். அவர்கள் மட்டும் தான் கடவுளின் ஒரே தூதர் என்று முஸ்லிம்கள் நம்பக் கூடாது. மாறாக நபிகள் நாயகத்துக்கு முன் அவர்களைப் போலவே எண்ணற்ற இறைத் தூதர்கள் வந்துள்ளனர் என்றும் முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அரபுச் சமுதாயத்தில் தோன்றியது போலவே மற்றவர்களும் அரபுச் சமுதாயத்தில் தான் தோன்றினார்களா? இல்லவே இல்லை.

நபிகள் நாயகத்திற்கு முன்னர் அனுப்பப்பட்ட பல்லாயிரக் கணக்கான தூதர்கள் தத்தமது மொழியிலேயே இறைச் செய்தியை எடுத்துரைத்தார்கள். அந்த மொழியிலேயே வேதங்களும் அருளப்பட்டன.

எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தினர் பேசும் மொழியுடையவராகவே நாம் அனுப்பி வந்திருக்கிறோம். (திருக்குர்ஆன் 14:4)

என்று திருக்குர்ஆன் கூறுகிறது. நபிகள் நாயகத்திற்கு முன் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் பேசும் தூதர்கள் வந்துள்ளனர். அவர்கள் யாரென நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் தமிழில் தான் இறைச் செய்தியை எடுத்துரைத்தனர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

கடவுளின் பார்வையில் மொழிக்கு என எந்தச் சிறப்பும் கிடையாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். 
கடவுளிடம் ஒரு முஸ்லிம் தனது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திக்கும் போது அவனுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் பிரார்த்தனை செய்யலாம். திருமணம் போன்ற சடங்குகளை தாய் மொழியிலேயே நடத்திக் கொள்ளவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.


அஷ்ரஃப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home