25 May 2013

மருத்துவ உலகின் புதிய சாதனை..!




கல் உடைக்கும் மெஷினில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று ஆபரேஷன் செய்து போலந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். உயிர் காக்கும் சிகிச்சையாக முகம் மாற்றப்பட்டிருப்பது இது முதல் முறை.போலந்து நாட்டின் ரஸ்லா பகுதியை சேர்ந்தவர் கிரஸ்கோர்ஸ் (33). கல் உடைக்கும் ஆலையில் வேலை செய்தார். கடந்த ஏப்ரல் 23 ம் தேதி மெஷின் உதவியுடன் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராதவிதமாக கை நழுவியதில் மெஷின் அவரை நோக்கி பாய்ந்தது. டிரில்லிங் செய்துகொண்டிருந்த கூரிய முனைகள் அவரது முகத்தை குத்தி கிழித்தன. முகம் சின்னாபின்னமானது. மூக்கு, பல், தாடை பகுதி நொறுங்கியது. உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்றே கண்டுபிடிக்க முடியாத அளவு இருந்தது அவரது நிலைமை.

ரஸ்லாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு பார்வை திரும்பியது. ஆனால், முகத்தின் தோல் பகுதிகள் முழுவதுமாக சேதம் அடைந்திருந்ததால் சதை அழுகத் தொடங்கியது. நோய்த் தொற்று அதிகமாவது உயிருக்கு ஆபத்து என்பதால், உடனடியாக க்ளிவைஸ் நகரில் உள்ள கேன்சர் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையத்துக்கு கொண்டு வரப்பட்டார். வேறொருவரின் முக தோலை பொருத்தி முகம் மாற்று ஆபரேஷன் செய்தால் மட்டுமே அவரை பிழைக்க வைக்க முடியும் என்ற நிலை உருவானது.

அந்த நேரத்தில், விபத்தில் சிக்கிய 30 வயது வாலிபர் ஒருவர் மூளைச்சாவு அடைந்தது கிரஸ்கோர்ஸின் நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது இதயம், கல்லீரலை தானம் செய்ய முன்வந்த உறவினர்கள் கிரஸ்கோர்சுக்கு ‘முகம்’ அளிக்கவும் ஒப்புக்கொண்டனர். படிவங்களில் இரு தரப்பிலும் கையெழுத்துகள் பெறப்பட்டு, கடந்த 15 ம் தேதி ஆபரேஷன் தொடங்கியது. எலும்புகளை சீரமைத்த பிறகு, ‘புதிய முகத்தை’ ஒரு போர்வை போல கிரஸ்கோர்சின் முகத்தில் டாக்டர்கள் பொருத்தி தையல் போட்டனர். 27 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது.

இத்தகவல்களை ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று வெளியிட்டது. ஆபரேஷன் டீம் தலைவர் ஆடம் மேசிஜெஸ்கி மேலும் கூறியதாவது,

பிரான்சில்தான் முதல்முறையாக முகம் மாற்று ஆபரேஷன் 2005&ல் செய்யப்பட்டது. அதன் பிறகு பெல்ஜியம், ஸ்பெயின், துருக்கி, அமெரிக்கா என பல நாடுகளிலும் 20 ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. ஒருவரது முகத்தை மாற்ற முடிவு செய்த பிறகு, பல வாரங்கள் அல்லது மாதக்கணக்கில் காத்திருந்தே இந்த ஆபரேஷன் செய்யப்படுவது வழக்கம். உயிர் காக்கும் சிகிச்சையாக, விபத்து நடந்த மூன்றே வாரத்தில் முகத்தை மாற்றியது உலக சாதனை. போலந்தில் முகம் மாற்று ஆபரேஷன் இது முதல்முறை. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. வென்டிலேட்டர் உதவியில்லாமல் தானாக மூச்சு விடுகிறார். தலை, கையை அசைக்கிறார். 8 மாதத்தில் அவரது புதிய முகம் முழு இயக்கமும் பெற்றுவிடும்.
இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home