22 September 2013

சிந்திப்போமா சில நிமிடம்!






இன்றைய நவ நாகரிக யுகம் மனிதனை மகத்தான சுபாவத்திலிருந்து மிகவும் மோசமான பாவங்களின் பால் இழுத்துச் செல்கின்றது.
ஆம்! சினிமா எனும் நூதனக்கூத்து இன்று பெரும்பாலான வீடுகளில் தலை விரித்தாடுகின்றது. இதனால் ஏற்படும் தீமைகளோ ஏராளம்! ஏராளம்.
இன்று சில பிள்ளைகளிடம் மார்க்க சம்பந்தமான கேள்விகள் ஏதும் கேட்டால்தெரியாதுஎன்று தான் சட்டென சொல்லுவார்கள். மாறாக சினிமா பற்றி கேட்டாலோ அப்பப்பா! எதுவித தடுமாட்டமுமின்றி சொல்லி விடுகின்றார்கள்.

சிந்திக்க வேண்டாமா? இந்த சீரழிந்த சினிமாவினால் மனித ஒழுக்க நெறி மாறி பாவமான காரியங்களை தூண்டி விடுகின்றன. அதில் தோன்றும் உடை, நடை, பாவனைகளை பின்பற்றி வாழவும் நேரிடும்.
மேலும், பெற்றோரும் பிள்ளைகளும் சரிசமமாக அமர்ந்து பார்க்கக் கூடாத அசிங்கமான காட்சிகளையெல்லாம் எந்தவித கூச்சமுமின்றி ரசித்துக்கொண்டிருப்பார்கள். இதனால் பிள்ளைகள் எதுவித வெட்க உணர்வுகளுமின்றி தங்கள் பாட்டில் வளர்ந்து விடுவார்கள்.

இவை மாத்திரமல்ல. குர்ஆன் மத்ரஸா, ‘டியூஷன்போன்றவற்றை கட்பண்ணி விட்டும் கூட திரைப்படம் பார்ப்பதற்காக வீட்டில் தங்கி விடுவார்கள். இதுபற்றி பெற்றோர்களோ அல்லது வீட்டிலுள்ள பெரியவர்களோ தட்டிக் கேட்பார்களா? அது தான் இல்லை. இப்படியானவர்கள் தங்களது பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை குழி தோண்டிப் புதைத்து விடுகின்றார்கள் எனக் கூறினாலும் மிகையாகாது.
தம்பிள்ளை பரீட்சையில் தோல்வி அடைந்துவிட்டால் கற்பிக்கும் ஆசிரியருக்கும்- பாடசாலைக்கும் குறைகூற முற்படுவார்கள். இது தவிர்க்கப்படவேண்டும். முதலில் பெற்றோர் பிள்ளைகள் விடயத்தில் மிக அக்கரையோடும், அவதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

மேலும், பிள்ளைகளை பேணி வளர்ப்பது என்பது நல்லவிதமான ஆடை அணிவித்து வகை வகையான உணவுகளை உண்ணக் கொடுப்பது மாத்திரம் சரியென எண்ணிவிடக் கூடாது. அல்லாஹுத் தஆலா தனது அருள்மறையாம் திருமறையில்,

விசுவாசிகளே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்என கூறுகிறான்.

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிபெரிய உத்தியோகத்திலோ- வியாபாரத்திலோ அமர்த்தி விடுவது பெரிய காரியமல்ல. மறுமையில் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பிலிருந்து காக்க கற்றுக்கொடுத்து அதன்படி வாழச் செய்வது தான் பெரிய காரியமாகும்.

பிள்ளைகளை நற்கிரியையின் பால் தூண்டவேண்டும். வீட்டிலுள்ள பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர் சன்மார்க்க நெறிகளை பேணுபவர்களாக இருப்பார்களேயானால் நிச்சயமாக அவர்களின் பிள்ளைகள் ஒருபோதும் தவறான வழிகளில் செல்லமாட்டார். நல்ல அறிவொழுக்கம் நிறைந்த மாணிக்கங்களாக திகழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, நிலையில்லாத இந்த உலகை விட்டும் நீங்க வேண்டிய நாம், அல்லாஹுத்தஆலாவால் எமக்களித்த இனிய வாழ்க்கையை ஆடலிலும் பாடலிலும் -ஆடம்பரத்திலும் கழித்துவிட்டு மறுமையில் என்ன பதிலைத் தான் சொல்லப் போகின்றோம் என்பதனை ஒவ்வொருவரும் சற்று சிந்திப்போமாக!

நன்றி : சகோதரர் அபூ பக்கர்


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home