7 October 2013

இதய பலவீனத்தை துவக்கநிலையில் கண்டறிந்து தீர்வு காணலாம்



இதய பலவீனத்தால் ஏற்படும் பாதிப்புகளை சீராக்க துவக்கநிலையில் கண்டறிந்தால் நிரந்தர தீர்வு ஏற்படும் என்கிறார் இதய நல சிகிச்சை நிபுணர்  லாரன்ஸ் சேசுராஜ் கூறியதாவது:

பொதுவாக இதயம், ரத்தத்தை உடல் முழுவதும் வினியோகிக்கும் ஒரு பம்ப்பாக உள்ளது. இதயம் இயல்பாக, இதயத்திற்கு வந்தடையும் ரத்தத்தில் 60  முதல் 80 சதவீதம் ரத்தத்தை வெளியேற்றும். அவ்வாறு வெளியேற்றும் அளவு 50 சதவீதத்திற்கு கீழே குறைந்தால் இதய பலவீனமாக  கருதப்படுகிறது. 35 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தால், தீவிரமான அளவில் பலவீனமாகியுள்ளது என்று கூறலாம். இதயம் பலவீனமானால் ரத்தம்  செல்வது குறைகிறது. இதனால் ரத்த சுழற்சி பாதிக்கப்பட்டு ரத்தம் ஒரே இடத்தில் தேங்கி கை, கால்கள் வீங்கலாம். சிறிது தூரம் நடந்தாலே மூச்சு  வாங்கும், வயிறு வீங்கும்.

இரவு நேராக படுத்தாலும் மூச்சு வாங்கும். ஓய்விலிருக்கும் போதே மூச்சு வாங்கும். சிறுநீர் அளவு குறைவாக வெளியேறும். பலவீனத்தின் அளவிற்கு  தகுந்தாற்போல் அறிகுறிகள் அதிகமாகும். இதயம் பலவீனமாவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இதய ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு  காரணமாக மாரடைப்பு ஏற்படுவது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இது தவிரவும் அதிக அளவு மது அருந்துதல், சந்ததி ரீதியான  பாதிப்புகள், ஊட்டச்சத்து குறைவு, இதயத்தில் ஏற்படும் தொற்று நோய் தாக்கம், இதய வால்வ்களில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவையும்  காரணமாக உள்ளது.

அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இல்லாவிட்டால் இதய பலவீனம் அதிகமாகி ஓய்விலிருக்கும் போதே  மூச்சு வாங்குவது, அல்லது திடீர் மரணமே கூட ஏற்பட வாய்ப்புள்ளது. துவக்கநிலையிலேயே மருத்துவரை அணுகுவதன் மூலம் என்ன காரணத்தால்  அந்த அறிகுறிகள் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கலாம். இதய பலவீனத்திற்கான சரியான காரணத்தை கண்டுபிடித்து உரிய சிகிச்சைகள் அளிப்பதன்  மூலம் துவக்கநிலையிலேயே குறைபாட்டை நீக்கி, இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம். அல்லது குறைபாடு மேலும் அதிகரிக்காமல் பார்த்து  கொள்ளலாம்.

இதய பலவீனத்திற்கு முதல்கட்டமாக மருத்துவரின் அறிவுரைபடி தேவையான அளவுக்கு மட்டுமே நீர் அருந்துதல், உப்பின் அளவை  கட்டுப்படுத்துதல், உணவு முறை கட்டுப்பாடுகள் போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும். இதனுடன் மருத்துவரின் அறிவுரைப்படி அளிக்கப்படும்  மருந்துகளை சாப்பிடுவதன் மூலமும் இந்த நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இவ்வாறு மருந்தின் மூலம் மற்றும் உணவு பழக்கம்  மூலமும் கட்டுப்படாத இதய பலவீனத்திற்கு இதய மாற்று அறுவை சிகிச்சையே தீர்வாக இருந்து வந்தது.

ஆனால் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னரே பதிவு செய்து


சரியான இதயம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய தேவை உள்ளது.  இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்னரும் கூட, மாற்று இதயம் உடம்போடு பொருந்துவதற்காக தொடர்ந்து மருத்துகள் சாப்பிட வேண்டும்.  தற்பொழுது இந்த இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக பல நோயாளிகள் சிஆர்டி சிகிச்சையின் மூலம் பயனடைந்துள்ளனர். இந்த  சிகிச்சையில் இதயத்தை 3 ஒயர்கள் மூலம் இதயத்தின் செயல்பாட்டை சீராக்குவதன் மூலம் இதயத்தின் பம்ப் செயல்பாட்டை அதிகரிக்க முடியும்.  இவ்வாறு சிகிச்சை மேற்கொள்பவர்களில் 70 சதவீதத்திற்கு மேற்பட்டோர் நலம் பெற வாய்ப்புள்ளது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home