7 October 2013

ஒரு மாத வீட்டு வாடகையை கேட்கும் புரோக்கர் கமிஷனுக்கு வேட்டு





* ஒரு மாச வாடகையை கமிஷனா கொடுக்கணும்.
*வீடு பிடிக்குதோ இல்லையோ, ஒரு வீட்ட காட்டினா ரூ.100 தனியா கொடுக்கணும்.
* வீடு, வாடகை, கன்டிஷன்களுக்கு ஓகே சொல்றவரைக்கும் ஹவுஸ் ஓனர் கிட்ட பேச முடியாது. எங்ககிட்ட தான் டீல் பண்ணனும்.
இதுதான் தற்போது வீட்டு புரோக்கர்கள் போடும் கன்டிஷன். இதற்கெல்லாம் ஓகே சொன்னால் மட்டுமே வீடு காட்ட அழைத்துச் செல்கிறார்கள்.
சென்னையில் சொந்த வீடு இல்லாத மிடில் கிளாஸ் வர்க்கத்தினர் அனைவருமே ஆண்டுதோறும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை வீடு. குழந்தைகளின் பள்ளிக்கு அருகிலும், அலுவலகத்துக்கு சென்று வர வசதியாகவும், பஸ், ரயில் நிலையத்துக்கு அருகிலும், குடிநீர் வசதியுடனும் வீடு இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள். அத்தகைய வீட்டு வாடகை குறைந்தபட்சம் ரூ.8000 தாண்டி விட்டது. வாங்கும் சம்பளத்தில் பாதியை வீட்டு வாடகைக்கே கொடுத்து விடுகிறார்கள்.
அப்படியே கஷ்டப்பட்டாலும் அந்த வீட்டில் 2 ஆண்டுக்கு மேல் தங்கி விட முடியாது. ஒவ்வொரு ஆண்டும் வாடகையை கணிசமாக உயர்த்துகிறார்கள் வீட்டு ஓனர்கள். அதிக வாடகை தர முடியாதவர்கள் அடுத்த வீட்டை தேட வேண்டியிருக்கிறது. இந்த பிரச்னையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் நடுத்தர மக்கள், வேறு வழியின்றி வீடு பார்க்க புரோக்கர்களை அணுகுகின்றனர். புரோக்கர்களும் அவர்கள் பங்குக்கு பல்வேறு கன்டிஷன்களை போடுகின்றனர். கமிஷன் அதிகமாக வாங்க வேண்டுமென்பதற்காக வீட்டு வாடகையை அதிகமாக சொல்கிறார்கள். சென்னையில் வீட்டு வாடகை உயர்வதற்கு புரோக்கர்கள்தான் முக்கிய பங்கு.
இதனால், ஒவ்வொரு முறையும் புரோக்கர்களை நாடி ஏமாந்து போகும் நடுத்தர மக்களில் பெரும்பாலானோர் தற்போது ஆன்லைனுக்கு தாவி உள்ளனர். ஒவ்வொரு ஏரியாவிலும் காலியாக உள்ள வீடுகளின் தகவல்களை கூற பல்வேறு வெப்சைட்கள் வந்து விட்டன. இவற்றில் ஒரு பட்டனை தட்டினாலே ரூ.3,000த்தில் இருந்து ரூ.1 லட்சம் வரையிலான வாடகை வீடுகளை பார்க்க முடிகிறது. அதிலும் வீட்டில் என்னென்ன வசதிகள் உள்ளன, அட்வான்ஸ், வாடகை உள்ளிட்ட தகவல்களை இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.
வீட்டு உரிமையாளரின் மொபைல் நம்பரையும் பார்க்க முடிகிறது. அவருக்கே நேரடியாக போன் செய்து, வீட்டை பார்த்து வாடகையை பேசி முடித்து விடலாம். இதனால், புரோக்கர் கமிஷன் இல்லை. அலைச்சலும் இல்லை என்பதால் ஆல்லைனில் வீடு வேட்டையை தொடங்கியிருக்கிறார்கள் மிடில் கிளாஸ் மக்கள். சென்னையில் வாடகை வீடு குறித்த தகவல்களை கூறும் வெப்சைட்களை ஒருநாளைக்கு சுமார் 10,000 பேர் பார்ப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதே போல, பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கூட வாடகை வீடு பார்ப்பதற்காக தனி சமூக பக்கங்கள் வந்து விட்டன. வாட் வீடுஎன்ற குழுவில் சுமார் 4,000 பேர் இணைந்திருக்கிறார்கள்.
இவர்கள் தங்கள் பகுதியிலோ அல்லது தங்களது வீட்டையோ வாடகைக்கு இருப்பதான தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். இவற்றில் வீட்டின் புகைப்படங்களை பார்க்க முடிகிறது. வீடு பிடித்திருந்தால் சாட்டிங் செய்தே, வாடகையை பேசி முடித்து விடலாம். இதன் காரணமாக, எதிர்காலத்தில் வீட்டு புரோக்கர்கள் தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரெண்டு முடிச்சா போதும்
ஆன்லைன் புரட்சி பற்றி வீட்டு புரோக்கர்களிடம் கேட்டதற்கு, ‘ஒரு மாசத்துக்கு 2, 3 பெரிய வீடுகளை பேசி முடிச்சாலே போதும். என் குடும்பத்துக்கு தேவையான வருமானம் கிடைச்சிடும். எல்லோராலும் ஆன்லைனில் வீடு தேடி விட முடியாது. அதனால் எங்களை நம்பி வருபவர்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள். தற்போது, நிறைய பேர் ஆன்லைனில் வீடு தேடுவது நடந்து கொண்டிருக்கிறது. பலரும் டூ&லெட் போர்டு போடுகிறார்கள்.
அதனால் நேரடியாகவே வீட்டு உரிமையாளர்களிடம் வாடகைக்கு வருபவர்கள் பேசிக் கொள்கிறார்கள். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் எங்களுக்கு வருமானம் பாதிக்கப்படும் என்பது உண்மைதான்என்கின்றனர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home