1 November 2013

மந்திர வார்த்தை




மந்திர வார்த்தை என்றவுடன் 'ஏதாவது விஷேசம் இருக்குமோ?' என்ற எண்ணத்துடன் நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கப் போகின்றீர்கள். உண்மையில் விஷேசம் இருக்கவே இருக்கின்றது. ஆனால் இது ஒன்றும் யாருக்கும் தெரியாத விஷேசம் அல்ல. அனைவருக்கும் தெரிந்த ஆனால் யாருமே பயன்படுத்தாத ஒரு மந்திரம் தான் இது.

கணவன் மனைவி உறவு என்று வந்து விட்டாலே சின்னச் சின்னப் பிரச்சினைகள் சின்னச் சின்ன சண்டைகள் என்பன சர்வசாதாரணமானது என்பதை பலரும் அனுபவத்தினூடாக புரிந்து வைத்திருப்பர். ஆனால் சர்வசாதாரணமானது தானே என்ற உணர்வில் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவரது மனம் நோகும் படி நம்மையறியாமலே ஏதாவது நடந்து விடுகின்றது.அல்லது நகைச்சுவையாக ஆரம்பித்த விடயமொன்று விவகாரமாக மாறி முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி விடுகின்றது.

பிரச்சினை என்று வந்து விட்டாலே இருவரும் 'நான் நிரபராதி' என்ற தற்காப்பு உத்தியைக் கையாள ஆரம்பித்து விடுவர். மட்டுமல்ல 'நீ குற்றவாளி' என்ற தாக்குதல் முறைமையையும் பயன்படுத்த முற்படுவர். கணவன் மனைவி உறவில் இந்த நிலை எப்போது தோற்றம் பெறுகின்றதோ அப்போது அவர்களது அன்பின் அத்திவாரம் ஆட்டம் காண ஆரம்பிக்கும், ஒருவரின் மீது அடுத்தவருக்கு இருந்த ஈர்ப்பு குறையத் தொடங்கும்.

மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருவரும் தாங்கள் 'சேம் சைட்' என்பதை மறந்து தமது பக்கத்திலேயே 'மூர்க்கத்தனமாக' கோல் போடத் தொடங்கி விடுவர். இப்படியான ஒரு நிலை ஏற்பட்டால் எதிரணியிலிருக்கும் இப்லீஸுக்கு சொல்லவா வேண்டும்?! கொண்டாட்டம்தான்.

திருமணம் முடித்து கணவன் மனைவியாக வாழ்கின்றவர்களே!

உங்களது வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களை ஒரு முறை மீட்டிப் பாருங்கள். (தயவு செய்து பிரச்சினை யாரால் ஆரம்பிக்கப்பட்டது என்று சிந்திக்க வேண்டாம்)

அந்தப் பிரச்சினை எவ்வளவு காலம் நீடித்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

அப்படி பல நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு அது நீடித்ததற்கான காரணம் என்னவென்று சிந்தித்துப் பாருங்கள்.

இன்னும் சிந்தனைக்குப் படவில்லையா?!

சரி நானே சொல்லி விடுகின்றேன். நீங்கள் இருவரும் 'தப்பு அடுத்தவருடையது' என்று நினைத்துக் கொண்டு இருந்தது தான் காரணம். அப்படியான எண்ணம் உங்களது உள்ளத்தில் இருக்கும் போது ஒரு தப்பை செய்திருக்கின்றார் என்று உங்களால் கருதப்படுகின்ற உங்களது கணவனை அல்லது மனைவியை தூய்மையான மனதுடன் அணுக உங்களால் முடியாது போய்விடும். நாளாக நாளாக அந்த இடைவெளி இன்னும் அதிகரிக்கும்.

இங்கு நாங்கள் சொல்கின்ற மந்திர வார்த்தையை நீங்கள் பயன்படுத்தினால் உடனடியாக பிரச்சினை தீர்ந்து விடும். உண்மையில் தப்பு யாருடைய பக்கம் இருக்கின்றதோ அவர் உடனடியாக முன்வந்து அதனை ஏற்றுக் கொள்வார். இருவருக்குமிடையில் இருக்கின்ற அன்புக்கு எந்தப் பாதிப்பும் வராது என்பது மட்டுமல்ல பலபோது அந்த அன்பு மேலும் அதிகரிக்கும். எதிர்காலங்களில் அடிக்கடி பிரச்சினைகள் வருவது தவிர்க்கப்படும்.

என்ன?! உண்மையிலேயே மந்திரம் தான் சொல்லப் போகின்றார் என்று நினைக்க வேண்டாம்.

ஏதாவது பிரச்சினைகள் வந்து அது எல்லை தாண்டுகின்றது என்பதை நீங்கள் உணர்ந்தால் உடனே பிரச்சினைக்குக் காரணம் யாராக இருந்தாலும் சரி, தப்பு உங்கள் பக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி 'ஸொரி, தப்பு என்னுடையது தான் நான் தான் இதற்கெல்லாம் காரணம், மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று (ஃபீல் பன்னி) சொல்லிப் பாருங்கள்.
அதன் பிறகு 'அற்புதம்' என்றால் என்னவென்பதை உங்களது கண்களால் பார்க்க முடியும், காதுகளால் கேட்க முடியும்.

இதனை சொல்ல முடியாத அளவுக்கு உங்களிடம் ஈகோ இருக்கின்றதென்றால் உங்களது உள்ளத்தை மென்மையாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

உங்களது ஈகோவை விட மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களுக்கு முக்கியம் என்று நீங்கள் கருதினால் மேலே சொன்ன வார்த்தைகளை கொஞ்சம் பாவித்துப் பாருங்கள்.

அதன் பிறகு சொல்லுங்கள் அது மந்திர வார்த்தையா இல்லையா என்று.

BY: ஹாலு பிலால்


கணவன் மனைவிக்கிடையில் சின்னச் சினனப் பிரச்சினை ஏற்படுவது சகஜம். என்ன பிரசசினை ஏற்பட்டாலும் அதை மூன்றாவது ஆளிடம் எத்தி வைக்க கணவனோ, மனைவியோ அவசரப்பட்டு விடக் கூடாது. ஷைத்தானும் இதைப் பெரிது படுத்தி இருவருக்கிடையில் பரிவினையை உண்டு பண்ணவே காத்திருக்கிறான். எனவே என்னுடைய கணவன்தானே.! என்னுடைய மனைவிதானே என்ற எண்ணத்தை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அதற்குச் சரியான வழி இதுதான். பிரச்சினைக்குக் காரணம் யாராக இருந்தாலும் சரி, தப்பு உங்கள் பக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி 'ஸொரி, தப்பு என்னுடையது தான். நான் தான் இதற்கெல்லாம் காரணம், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லிப் பாருங்கள். ஒரு நாள் இரவு கூட உங்களுக்கிடையில் கோபமாகக் கழிந்ததாகச் சரித்திரமே இருக்காது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home