6 October 2013

சாமியார்கள் நடத்தும் ராத்திரி நிர்வாண பூஜையில் நடப்பது என்ன? திடுக்கிடும் தகவல்கள்.



உண்மை அல்லாதவற்றை உண்மை என்று நம்பச்செய்து, மக்களை ஏமாற்றி போலி ஆசாமிகள் பலன் அடைவதற்கு காரணமாக உள்ள பில்லி சூன்யம், ஏவல் வேலைகள், குறி சொல்வது போன்றவை தடை செய்யப்படுகிறது’ – இப்படி ஒரு சட்டத்தை மகாராஷ்டிர மாநில அரசு நிறைவேற்றி இருக்கிறது. இந்த ஏமாற்று வேலைகளைத் தடைசெய்ய வேண்டும் என்று தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டுப் போராடிய சமூக சேவகர் நரேந்திர தபோல்கர், இதன் காரணமாகவே படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகுதான் மகாராஷ்டிர அரசின் அறிவுக் கண் திறந்தது. நரேந்திர தபோல்கரின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட காகிதங்களில் அச்சாகி உள்ள இந்தச் சட்டம், பலவீனமான மனிதர்களின் மூட நம்பிக்கைகளுக்கும் அவர்களை சுரண்டிப் பிழைக்கும் போலி ஆசாமிகளுக்கும் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பகுத்தறிவின் தாய் பூமியான தமிழகத்திலும் வட மாநிலங்களுக்கு கொஞ்சமும் குறைவு இல்லாமல், மூட நம்பிக்கைகள், அதையட்டிய ஏமாற்று வேலைகள் சூடுபிடித்துள்ளன. அன்றாடம் செய்திகளில் வெளியாகும் சாமியார்களின் சல்லாபச் செய்திகளும் நரபலி சம்பவங்களும் நிர்வாண பூஜைகளும் இதற்கு சாட்சி.

மக்கள் இந்த அளவுக்கு மதிமயங்கிப்போகக் காரணம் என்ன? பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் குமாரதேவனிடம் பேசினோம்.
பில்லி சூன்யம், ஏவல், பெண்களை வசியம் செய்வது என்று சொல்லப்படும் விஷயங்களில் துளியளவும் உண்மை இல்லை. ஆனால், திரைப்படங்கள், ஊடகங்கள் போன்றவை இவை உண்மை என்பதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை சமீப காலங்களில் அதிகமாக உண்டாக்குகின்றன. அதன் காரணமாக படித்தவர்கள், பணக்காரர்கள், தொழிலதிபர்கள் என்று மேல்தட்டு மக்களும் தொடர்ந்து ஏமாறுகின்றனர். பில்லி சூன்யம், ஏவல் வேலைகளைச் செய்யும் நபர்களில் குற்றப் பின்னணி கொண்ட கிரிமினல்கள்தான் 90 சதவிகிதம் பேர் இருப்பார்கள். அல்லது, வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள், உழைத்து வாழப்பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியவர்களாக இருப்பார்கள்.
அடிப்படையாக அவர்கள் சில விதிகளைப் பின்பற்றுகிறார்கள். பிளாக் மேஜிக் எனப்படும் கண்கட்டு வித்தைகளில் சிலவற்றை கற்றுக்கொள்கிறார்கள். எண்ணெய் சட்டியில் கையை விடுவது, வாயில் இருந்து லிங்கம் எடுப்பது, கைகளில் விபூதி வரவழைப்பது என்று சில வித்தைகளைப் பயன்படுத்தி தாங்கள் கடவுளின் சக்திபெற்றவர்கள் என்ற எண்ணத்தை அப்பாவி மக்களிடம் விதைக்கின்றனர். அதை நம்பி பிரமித்துப்போகும் மக்கள், அந்தச் சாமியாரிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிடுகிறார்கள். பிறகு, அந்தச் சாமியார் சொல்வதுதான் அவர்களுக்கு வேதவாக்கு. அப்படி ஆன பின்புதான், அவர்களை நம்பி சொத்துக்களை ஒப்படைப்பது, பெற்ற குழந்தையை நரபலி கொடுத்து புதையலைத் தேடுவது, குழந்தை பிறக்காத பெண்கள் ராத்திரி பூஜைக்குப்போவது என்று பல பைத்தியக்காரத்தனங்களை செய்கின்றனர்.
இந்தச் சாமியார்கள் செய்யும் கண்கட்டு வித்தைகளை, உரிய பயிற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதை பகுத்தறிவு இயக்கங்கள் அறிவியல் பூர்வமாக பலமுறை நிரூபித்துள்ளன. ஒரு தேர்ந்த மேஜிக் நிபுணன், இந்த சாமியார்கள் செய்வதைக் காட்டிலும் பல அற்புதங்களைச் செய்கிறான். அவர்கள் அதை மேஜிக்காகவே செய்கிறார்கள். சாமியார்கள் தங்களின் சக்தியால் செய்கிறோம் என்று ஏமாற்றுகிறார்கள்.
உன்னைக் கொலை செய்துவிடுவேன், உன்னைத் தாக்கிவிடுவேன் என்று ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பார்த்துச் சொன்னாலே அது சட்டப்படி குற்றமாகிறது. அதுபோலவே, ‘பெண்களை வசியம் செய்ய வேண்டுமா? குடும்பத்தைப் பிரிக்க வேண்டுமா? எதிரிகளுக்கு சூன்யம் வைக்க வேண்டுமா?’ என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதையும் குற்றமாகப் பார்க்க வேண்டும். அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும்என்று கொந்தளித்தார்.
பல தலைமுறைகளாக குறி சொல்வதையே தொழிலாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த செல்வராஜிடம் பேசினோம். எங்கள் பரம்பரைத் தொழிலே குறி சொல்வதுதான். அதனால், மற்றவர்களைவிட இது எத்தனை பெரிய ஏமாற்று வேலை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எந்த ஒரு செயலையும் தொடர்ந்து ஒரே சீராக செய்யும்போது, அதில் சில நுணுக்கங்கள் நமக்குப் புலப்படும். சில பயிற்சிகள் கைவரப் பெறும். அதுதான் இந்தத் தொழிலின் முதலீடு. இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் முதலில் தங்களுக்கு என்று ஒரு பாணியை உருவாக்கிக்கொள்வார்கள். எங்கள் சமூகத்தினர் பரம்பரை பரம்பரையாக கம்பளியை உடலில் போர்த்திக்கொண்டு குறி சொல்லி வருகிறார்கள். இப்போது புதிதாக சிலர், சாட்டையால் அடித்துக்கொண்டு குறி சொல்வது, குடித்துவிட்டு குறி சொல்வது, தலையில் மிதித்து குறி சொல்வது என்று பல யுக்திகளை பயன்படுத்துகின்றனர். மற்றவர்களில் இருந்து தங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ளவே இந்த வழிமுறை. கூடவே ஆளை பயமுறுத்துகிற சாமி படங்கள், சிலைகள், பம்பை, உடுக்கையையும் பயன்படுத்துவார்கள். இதெல்லாம் உளவியல்ரீதியாக எதிராளியின் உறுதியைக் குலைத்துவிடும் தன்மை படைத்தவை.
காலம் காலமாக இதே வேலையைச் செய்வதால், சாமியாடிகளுக்கும் குறி சொல்பவர்களுக்கும் உளவியல் ரீதியாக சில கணிப்புத் திறமைகள் இருக்கும். குறி கேட்க வருபவர்கள் உட்கார்ந்திருக்கும் நிலை, அவர்களின் முகத்தில் தெரியும் வாட்டம் போன்றவற்றை வைத்து சில அடிப்படையான விஷயங்களைச் சரியாகச் சொல்வார்கள். உதாரணத்துக்கு, குறி கேட்க வந்திருப்பவரின் உடன் பிறந்தவர்கள், பெற்றோர் பெயர், மனதில் நினைக்கும் பூ போன்றவற்றை சரியாக கணித்துச் சொல்வார்கள். அப்படி சரியாக சொல்லும்போது, குறி கேட்க வந்தவரின் கண்களில் தெரியும் மாற்றங்களை, ஆச்சர்யங்களை சரியாக கணித்து பிடித்துக்கொள்வார்கள். அதன் பிறகு குறி சொல்லிகள் எதையும் கேட்கவே தேவை இல்லை. குறி கேட்க வந்தவர்களே அனைத்தையும் வரிசையாக ஒப்பித்துவிடுவார்கள். இப்படி சில அடிப்படை விஷயங்களை சரியாக கணிப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியம்தான்.
மேலும், இவர்களுக்கு பிளாக¢ மேஜிக் எனப்படும் கண்கட்டு வித்தைகள் தெரியும். உதாரணமாக ஈரச் சாணிக்குள் வெள்ளைப் பாஸ்பரஸை வைத்து, ‘இதை ஈரம் காய்வதற்குள் உன் எதிராளியின் வீட்டில் எறிந்துவிடுஎன்பார்கள். அப்படிச் செய்யும்போது, அந்தச் சாணி காய்ந்தவுடன் வெள்ளைப் பாஸ்பரஸ் தீப்பிடித்து எரியும். அதனால், எதிராளிகளுக்கு சேதமும் பீதியும் உண்டாகும்.

ஆண், பெண் வசியம் என்று கேட்டு வருபவர்களிடம், சில போதை வஸ்துகளை பிரசாதத்திலோ தீர்த்தத்திலோ கலந்து கொடுப்பார்கள். இதற்காக சில மூலிகைகளையும் பயன்படுத்துவார்கள். போதை வஸ்து தன்னுடைய வேலையை காட்டும்போது, சில நாட்களுக்கு மருந்து கொடுத்தவர் சொல்வதைக் கேட்பார். அல்லது பேயறைந்தவர் போல் திரிவார். அந்த சமயத்தைப் பயன்படுத்தி நாம் சில காரியங்களை சாதித்துக்கொள்ளலாம். ஆனால், நிரந்தரமாக யாரையும் மயக்கத்தில் வைத்திருக்க முடியாது. இதுதான் ஆண், பெண் வசியம். மாய மந்திர வசியம் மூலம் ஒரு பெண்ணை ஒரேயடியாக வசியம் செய்துவிட முடியும் என்றால், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட அழகான பெண்களை இந்நேரம் எத்தனை பேர் வசியம் செய்திருப்பார்கள்!
அதுபோல் குறி சொல்லிகள், ‘உங்களின் பிரச்னை இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்களில் சரியாகிவிடும்என்று உறுதியாகச் சொல்வார். அதற்கு பல பரிகாரங்களைச் சொல்லி லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொள்வார்கள். பொதுவாக எந்தப் பிரச்னையானாலும் அது, சில  மாதங்களில் இயல்பாகவே சரியாகிவிடும். அப்படி ஆகும்போது சாமியார் சொன்னதால்தான் சரியானது என்று நம்பிக்கை அவர்கள் மனதில் வலுக்கிறது. அதற்காக இவர்கள் சொல்வதை எல்லாம் அவர்கள் செய்கிறார்கள். பணத்தைக் கொட்டுகிறார்கள்.  தனித்தன்மை இல்லாத மனிதர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அந்த நம்பிக்கை தேவைப்படுகிறது. அவர்களை ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு பணத்தைப் பறிப்பது, தங்களின் உடல் இச்சையை தீர்த்துக்கொள்வது, நரபலி கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்கின்றனர்என்றார்.
மகாராஷ்டிர அரசின் சட்டம் பற்றியும், குறி சொல்லிகள் மீதான புகார்கள் பற்றியும் பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் இல.கணேசனிடம் கேட்டோம். உலகளாவிய அளவில் இதுபோன்ற நம்பிக்கைகள் எல்லா மதங்களிலும் எல்லா இனக் குழுக்களிடமும் உள்ளன. ஒருவரின் எதிர்காலம், அவருக்குள்ள பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை கைரேகையை பார்த்துச் சொல்வது, முகத்தைப் பார்த்துச் சொல்வது நமது நாட்டிலும் தொன்று தொட்டு இருக்கிறது. ஆனால் எல்லா துறைகளிலும் போலிகளும் கலப்படங்களும் நுழைந்துவிட்டதைப்போல், இந்தத் துறையிலும் போலிகள் வந்து விட்டனர். எல்லா துறையும் தரம் தாழ்ந்துவிட்டதைப்போல், இந்தத் துறையும் தரம் தாழ்ந்துவிட்டது. போலியைக் கண்டறிந்து அவற்றை மட்டும் களையெடுக்க வேண்டியதுதான். அந்த வேலையை சீர்திருத்தவாதிகளும் உண்மையான ஆன்மிகவாதிகளும் செய்ய வேண்டும். மாறாக சட்டம் எல்லாம் போட்டு இதுபோன்ற நம்பிக்கைகளைத் தடுத்துவிட முடியாதுஎன்றார்.
உண்மையான ஆன்மிக நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைகளுக்கும்¢ நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆன்மிகம் என்ற பெயரில், மனித மனத்தின் பலவீனங்களைக் குறிவைத்து தாக்கி பலனடையும் போலி சாமியார்களுக்கு தமிழகத்தில் எப்போது தடை விதிக்கப்படும்?
 ராத்திரி நேரத்து பூஜையில்
பொதுவாக, குழந்தை இல்லாத பெண்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரவு பூஜைகள் நடத்தப்படுகிறது. சாமியார், அவருடைய நம்பிக்கைக்குரிய உதவியாளர் மற்றும் அந்தப் பெண்என மூவர் மட்டுமே இரவு பூஜையில் கலந்துகொள்ள முடியும். இரவு பூஜையில் பங்கேற்கும் பெண்ணின் மீது குளிர்ந்த நீரை குடம் குடமாக ஊற்றுகின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு ஆடையாக களைந்துவிட்டு, நிர்வாணமாக இருக்கும் பெண்ணின் மீது எண்ணெய், சந்தனம், விபூதி என்று பலவற்றை சாமியாரும் அவருடைய உதவியாளரும் பூசுவார்களாம். இப்படிச் செய்யும்போது உணர்ச்சியால் தூண்டப்படும் அந்தப் பெண்ணிடம் சாமியாரும் அவருடைய உதவியாளரும் தங்களின் காம இச்சையை தீர்த்துக்கொள்வதில் பெரிய சிக்கல் இருக்காதாம். கணவனுக்கு இருக்கும் பிரச்னையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள், சாமியாரிடம் அடிக்கடி வரும்பட்சத்தில் அவர்களுக்கு குழந்தையும் பிறந்துவிடுகிறது. அவர்கள் மூலம் சாமியாருக்கு விளம்பரமும் கிடைக்கிறது. யாராவது ஒரு பெண் இரவு பூஜையில் ஒத்துழைக்க மறுத்து பிரச்னை செய்யும்போதுதான், சாமியாரின் வேடம் வெளி உலகுக்குத் தெரிய வருகிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home