21 November 2013

போலீஸ் பக்ருதீனை பிடிப்பதற்கு உதவிய 238 போலீசாருக்கு முதல்வர் பரிசு : விடை கிடைக்காமல் தொங்கும் கருணாநிதியின் வினாக்கள்.....!!



போலீஸ் பக்ருதீனை பிடிப்பதற்கு உதவிய 238 போலீசாருக்கு ரூ. 2 கோடியே 53 லட்சம் பரிசுத் தொகையை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். ஆனால் இந்தக் கைது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுப்பிய சந்தேக வினாக்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
பரிசு குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொலை வழக்குகளில் புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க ஏதுவாக குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் நரேந்திரபால் சிங், தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளான போலீஸ் பக்ருதீன் 4.10.2013 அன்றும், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் ஆந்திர மாநிலம், புத்தூரில் தனிப் படையினரின் தீவிர முயற்சியின் பலனாக 5.10.2013 அன்றும் கைது செய்யப்பட்டனர். மேற்படி தலைமறைவு எதிரிகளை கைது செய்வதற்காக தங்களது உயிரைப் பணயம் வைத்து, மிகுந்த கடமை உணர்வுடனும், துணிச்சலுடனும் போராடி பணியாற்றிய சிறப்பு குழுவைச் சேர்ந்த 22 காவல் துறையினருக்கு கடந்த 9.10.2013 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா பரிசுத் தொகைக்கான காசோலைகளையும், 20 காவல் துறையினருக்கு ஒருபடி பதவி உயர்வையும் வழங்கி பாராட்டினார்.
மேலும், இது போன்ற குற்றவாளிகளைப் பிடிப்பதில் கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை மிகவும் இன்றியமையாதவை ஆகும். இதனைக் கருத்தில் கொண்டு இவ்வழக்கு தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாகப் பணியாற்றி நுண்ணறிவு தகவல்கள் அளித்து, கடமை உணர்வுடன் செவ்வனே பணியாற்றிய காவல் துறையினருக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா 14.10.2013 அன்று அறிவித்ந்தார்.
அதன்படி, தலைமறைவு எதிரிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட காரணமாக அமைந்த 238 காவல் துறையினருக்கு 2 கோடியே 53 லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கி அவர்களின் சிறப்பான செயல்பாட்டினைப் பாராட்டினார். அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா பரிசுத் தொகைக்கான காசோலைகளை பெற்றுக் கொண்ட காவல்துறையினரிடம், அனைவருக்கும் எனது பாராட்டுதல்களையும், உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துத் தலைவர்கள் கொலை வழக்குகளில் உண்மையில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? போலீஸ் பக்ருதீன் குழுவினர்தான் இதைச் செய்தனரா? யார்தான் உண்மையான குற்றவாளிகள்? தமிழக அரசுதான் கூற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிஎழுப்பிய சந்தேக வினாக்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவர் விடுத்த கேள்வி-பதில் அறிக்கை இங்கே நினைவு கூரக்கத்தக்கது.
கேள்வி: இந்து இயக்கங்களின் தலைவர்களையெல்லாம் கொலை செய்தது, அண்மையில் பிடிக்கப்பட்ட போலீஸ் பக்ருதீன் குழுவினரா? கருணாநிதி: ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்பது புரிகிறது. கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், குறிப்பாக இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வேலூர் வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ், தென்காசியில் குமார பாண்டியன், டாக்டர் அரவிந்த் ரெட்டி போன்றவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
இந்தக் கொலைகளில் காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பரவலாகப் பேசப்பட்டது. காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கும் முதல்வரோ அப்போது கொடநாட்டில் இருந்தார். எனவே போலீஸ் டி.ஜி.பி. ஒரு நீண்ட அறிக்கையினை 27-7-2013 அன்று விடுத்தார்.
அதில், 23-10-2012 அன்று வேலூரில் பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலாளர், மருத்துவர் அரவிந்த ரெட்டி என்பவர் பணப் பரிமாற்றப் பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், வேலூரைச் சேர்ந்த வசூர் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், எம்.எல்.ஏ. ராஜா, பிச்சைப் பெருமாள் மற்றும் தரணி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுஎன்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது தீவிரவாதிகள் சிலரைக் கைது செய்த பிறகு, “போலீசார் நடத்திய விசாரணையில், பா. ஜனதா மற்றும் இந்து அமைப்புப் பிரமுகர்கள் பரமக்குடி முருகன், வேலூரில் டாக்டர் அரவிந்த் ரெட்டி, வெள்ளையப்பன், மதுரையில் சுரேஷ், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகிய ஐந்து பேரைக் கொலை செய்ததை போலீஸ் பக்ருதீன் ஒப்புக் கொண்டார்என்று செய்தி தெரிவித்திருக்கிறார்கள்.
டாக்டர் அரவிந்த் ரெட்டியைக் கொலை செய்தது, தற்போது கூறுகிற போலீஸ் பக்ருதீனா? அல்லது ஏற்கனவே 27-7-2013 அன்று டி.ஜி.பி. அறிக்கையில் சில பேர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிக்கை விடுத்தாரே; அவர்களா? எது உண்மை? அப்படியென்றால் அவர்கள் மீது போடப்பட்டது ஊரை ஏமாற்றுவதற்காக போடப்பட்ட பொய் வழக்கா ?
வேலூர் மாவட்டப் போலீசார் இந்த வழக்கை விரைந்து முடித்து, நல்ல பெயர் எடுப்பதற்காக, ரவுடி வசூர் ராஜா உட்பட ஆறு பேரைப் பலிகடா ஆக்கி விட்டதாகவும், அவரை நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து டாக்டர் அரவிந்த் ரெட்டியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்து, வழக்கை முடித்து விட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதிலே எது உண்மை ? அது போலவே, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முருகன் என்பவர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தார். 19-3-2013இல் அவர் கொலை செய்யப்பட்டார். சொத்து விற்பது தொடர்பான தகராறில் அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி, ராஜா முகமது, மனோகரன், சாகுல் ஹமீது, ரபீக் ராஜா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, பின்னர் அவர்கள் பிணையில் உள்ளார்கள். இந்த நிலையில் இந்த முருகனைக் கொலை செய்ததும், போலீஸ் பக்ருதீன் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று சொல்லப்படுகிறது. இதில் உண்மையான குற்றவாளிகள் யார்? ராஜா முகமது தரப்பினர் பலிகடா ஆக்கப்பட்டவர்களா ?
என்னுடைய இந்தச் சந்தேகத்தை உறுதி செய்திடும் வகையில், 16-10-2013 தேதிய ஒரு நாளிதழில் ஒரு முழுப் பக்கத்திற்கு போலீஸ் வழக்குகளும்…. பொலபொலத்துப் போகும் தீர்ப்புகளும்…” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது.
அதன் தொடக்கமே, “போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் இவர்களை வளைத்துப் பிடித்துப் பாராட்டு வாங்கியிருக்கும் காவல்துறை, வேலூர் அரவிந்த் ரெட்டி, பரமக்குடி பா.ஜ.க. முன்னாள் கவுன்சிலர் முருகன் கொலை வழக்குகளில் பொய்யான குற்றவாளிகளைக் கணக்குக் காட்டிய குற்றத்துக்கு என்ன பரிகாரம் தேடப் போகிறது எனத் தெரியவில்லைஎன்று எழுதியிருக்கின்றது.
போலீஸ் பக்ருதீன் கைது பற்றியும் சந்தேகம் உள்ளது. இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர், அப்துல் ரஹிம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், போலீஸ் பக்ருதீன் கைதில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், டி.கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிமுறைகள், பக்ருதீனைக் கைது செய்தபோது பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தபோது, அட்வகேட் ஜெனரல், 4ஆம் தேதி இரவு சென்னை பெரியமேட்டில் பக்ருதீன் கைது செய்யப்பட்டார் என்றும், சட்டப்படியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ரவீந்திரன் ஆகியோர் திருவல்லிக்கேணியில் பக்ருதீனைக் கண்டுபிடித்தார்கள் என்றும், அவனைப் பின் தொடர்ந்த போலீசார், பெரியமேடு பகுதியில் அவனைப் பிடிக்க முயன்றனர் என்றும், இன்ஸ்பெக்டர் லட்சுமணனைத் தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது பெரியமேடு இன்ஸ்பெக்டர் வீரகுமார் பக்ருதீனைப் பிடித்தார் என்றும் செய்தி வந்தது.
இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் கூட, போலீஸ் பக்ருதீன், சாகுல் ஹமீது என்பவர் மூலம் தமிழகம் மற்றும் ஆந்திரப் போலீசாரைத் தொடர்பு கொண்டு, தான் சரணடைய விரும்புவதாகத் தெரிவித்ததாகவும், அந்தத் தகவல் தமிழக உளவுப் பிரிவு போலீசுக்குத் தெரிய வந்தது என்றும், அப்போது போலீஸ் பக்ருதீன் போலீஸ் நிலையத்துக்கோ, அதிகாரிகளின் அறைகளுக்கோ வந்து சரணடைய வேண்டாம், பெரியமேட்டுக்கு வரச் சொல்லுங்கள், நாங்கள் கைது செய்கிறோம் என்று கூறினார்கள் என்றும், அவ்வாறே பெரியமேட்டுக்கு வந்த போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
போலீஸ் பக்ருதீன் தானாகச் சரணடைந்தாரா? அல்லது போலீசார் சண்டை போட்டுப் பிடித்தார்களா? எது உண்மை? ஏனென்றால் 18-10-2013 அன்று பக்ருதீனை வேலூரில் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோதும், விசாரணை முடிந்து வெளியே அழைத்துச் சென்ற போதும், பத்திரிகையாளர்களைப் பார்த்து ஓங்கிய குரலில், “இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போலீசார் பொய் வழக்குப் போட்டுள்ளனர். நான் எந்தக் கொலைகளையும் செய்யவில்லை. என் முகத்தில் உள்ள துணியை எடுக்க வேண்டும்”” என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
ஆனால் போலீசார், பக்ருதீன் பத்திரிகையாளர்களிடம் பேசி விடாதபடி, மறைத்து அழைத்துச் சென்றனர் என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது. எனவே யார்தான் உண்மையான குற்றவாளிகள்? தமிழக அரசுதான் கூற வேண்டும் என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
மக்கள் மன்றத்தில் கருணாநிதி எழுப்பிய கேள்விகள் அப்படியே இருக்கவே, அவற்றிற்கு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டுள்ள தமிழக அரசு, எந்த விளக்கமும் அளிக்காமல் அவசர அவசரமாக பரிசுகளை வழங்கியிருப்பது மக்களிடம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தூது ஆன்லைன்
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home