ஒவ்வொரு போஸ்டருக்கும் ஒரு வழக்கு!
தொடர்ச்சியாக அ.தி.மு.க போஸ்டர் களைக் கவனித்து
வருபவர்களுக்குப் பரிச்சய மான பெயர்தான் கிரம்மர் சுரேஷ். 'காவிரியை
வெச்சுக்க... எங்கம்மா வேணும்’ என்று ஒரு குழந்தை அழுதுகொண்டு சொல்கிற
மாதிரியான போஸ்டராகட்டும் உலகத் தலைவர்களுக்கெல்லாம் ஐநா சபையில் ஜெயலலிதா
பாடம் நடத்துவது போன்ற போஸ்டராகட்டும் வித்தியாசமான முறையில் தமிழகத்தில்
போஸ்டர் புரட்சி நடத்தி வருபவர் மதுரையைச் சேர்ந்த கிரம்மர் சுரேஷ்.
தற்போது பெரிய பதவியில் இல்லா விட்டாலும் மதுரை
அ.தி.மு.கவில் மத்திய தொகுதிப் பொறுப்பாளராக மட்டுமல்ல, ஒரு மிஷனரி
பள்ளியின் தாளாளராகவும் செயல்படும் கிரம்மர் சுரேஷை அவருடைய அலுவலகத்தில்
சந்தித்தேன்.
''என்னை வெச்சு காமெடி பண்ணிடா தீங்க'' என்று
சிரித்துக்கொண்டே சொன்ன கிரம்மர் சுரேஷ், ''பிரிட்டிஷ் காலத்தில் மதுரை
மக்களுக்கு சேவை செய்ய வந்த மிஷனரியைச் சேர்ந்தவர் கிரம்மர் என்பவர். இவர்
ஏழை மக்களுக்கு ஒரு ஊரையே உருவாக்கிக் கொடுத்தார். அந்தப் பகுதிக்கு பெயர்
கிரம்மர்புரம். என் பெயர் சுரேஷ்குமார். ஏழைகளுக்கு சேவை செய்த அந்த
மிஷனரியின் நினைவாக கிரம்மரை என் பெயரோடு சேர்த்து கெஜட்டில் பதிவு
செய்துவிட்டேன்.
எனக்கு சிறு வயதிலிருந்து அரசியலில் ஆர்வம் வரக் காரணம்
மறைந்த சபாநாயகர் பி.டி.ஆர். ப்ளஸ் டூ படிக்கும்போதே எங்கள் பகுதியின்
தி.மு.க தொண்டர் அணிச் செயலாளராகப் பணியாற்றினேன். கல்லூரி படிக்கும்போது
பகுதி மாணவர் அணிச் செயலாளராக இருந்தேன். 89ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்
பொன்.முத்துராமலிங்கத்துக்காக தேர்தல் பணியாற்றினேன். பி.டி.ஆர் தன்
மகனென்றே மற்றவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அந்த அளவுக்கு
என்மீது பாசம். ஆனால், அப்படிப்பட்ட உத்தமரை தி.மு.கவில் ஒதுக்க
ஆரம்பித்தார்கள். நான் அழகிரியோடும் நெருக்கமாக இருந்தேன். ஆனால், அவரோ
2006 தேர்தலில் மத்திய தொகுதியில் போட்டியிட்ட பி.டி.ஆரை எதிர்த்து வேலை
செய்யும்படி சொன்னார். தி.மு.க வேட்டி கட்டிக்கொண்டு என்னால் கட்சிக்கு
துரோகம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டேன். அழகிரியின் கோபத்துக்கு
ஆளானேன். பி.டி.ஆருக்காக கடுமையாக வேலை செய்து வெற்றி பெற்றார். அமைச்சராக
திரும்பி வரும்போது ரயிலில் இறந்தார். மனம் வெறுத்துப்போனேன்.
அதற்குப் பின் அவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில்
பி.டி.ஆர் மகன் அல்லது மனைவிக்கு சீட் தருவதாகச் சொல்லி ஏமாற்றி கொஞ்சமும்
தகுதியில்லாத நபருக்கு சீட் கொடுத்து எம்.எல்.ஏவாக்கினார்கள். இதனால்
எனக்கு தி.மு.க மீது வெறுப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க.வில் சேர முடிவு
செய்தேன். அப்போதே 'இலையோடு இணையவரும் இளைஞர் படை’னு போஸ்டர் ஓட்டினோம்.
அதில் பி.டி.ஆர் படத்தையும் போட்டேன்.
அ.தி.மு.கவில் சேர்ந்தவுடனே கவுன்சிலருக்குப் போட்டியிட
சீட்டும் கொடுத்தார்கள். கடுப்பான தி.மு.கவினர் ஒரு வீட்டில் புகுந்து
நகைகளையும் பணத்தையும் திருடியதாக என்மீது வழக்கு போட்டார்கள். ஒரே
நேரத்தில் மூன்று போலீஸ் ஸ்டேஷன்களில் ஆஜராகச் சொல்லி டார்ச்சர்
செய்தார்கள். எல்லாவற்றையும் சட்ட ரீதியாக சந்தித்து விடுதலையானேன். அந்த
நேரத்தில்தான் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் வித்தியாசமான வாசகங்கள் போட்டு
போஸ்டர் போட ஆரம்பித்தேன். தி.மு.க ஆட்சிக்கு எதிராக ஒவ்வொரு போஸ்டர்
ஓட்டும்போதும் ஒவ்வொரு வழக்காக போட்டார்கள்.
இப்போதும் அ.தி.மு.கவில் எந்த பிரதிபலனையும்
எதிர்பாராமல்தான் பணியாற்றுகிறேன். என்னுடைய போஸ்டரைப் பற்றி விஜயகாந்தே
தன்னுடைய கட்சிக் கூட்டத்தில் காவிரி என்ன உங்க சொத்தா என்று விமர்சனம்
செய்கிறாரென்றால், அதன் வீச்சு எப்படியிருக்கிறது என்பது தெரியும்.
தமிழ்நாட்டில் பல ஊர்களில் இருந்து போன் செய்து போஸ்டர் பற்றி
விசாரிப்பார்கள். ஆனால் ஒன்று, என்னுடைய போஸ்டரில் ஆபாசமான வார்த்தைகளோ,
தனி நபர் தாக்குதல்களோ இருக்காது'' என்றார்.
''போஸ்டர்களை உருவாக்க சம்பளம் கொடுத்து ஒரு கிரியேட்டிவ் டீம் வைத்திருக்கிறீர்களாமே?''
''அதெல்லாம் இல்லை, நானே பிரஸ்ஸுக்கு சென்று அங்கேயே
வாசகங்களை எழுதி, டிசைன் செய்கிறவரிடம் கொடுத்து, படங்களைப் பொருத்தமாக
போட்டு போஸ்டராக்கி விடுவோம். வெளியூரில் சென்று ஓட்டுவதற்கு ஆட்களை காரில்
அனுப்பி வைப்பேன். சில நேரம் நானும் சென்றிருக்கிறேன். இப்போ நம்ம போஸ்டரை
காப்பி பண்ணி பல ஊர்களிலும் அவங்க பேரைப் போட்டு ஒட்டுறாங்க' என்கிறார்.
போஸ்டர் ஒட்டியே பேர் வாங்கிட்டீங்களே பாஸ்!
செ.சல்மான்
படங்கள் : பா.காளிமுத்து
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home