9 April 2013

"பசுமைப் புரட்சி - தோட்டக்கலை"



பெங்களூருவின் பசுமைப் புரட்சிக்கான முதல் வித்து- ஜேனட் யக்னேஷ்வரன்!

பூங்கா நகரம்என்கிற பெருமையுண்டு பெங்களூருக்கு. இன்று திரும்பின பக்கமெல்லாம் பச்சைக்கம்பளம் விரித்தது போல அழகாக வரவேற்கும் அந்த நகரத்தின் 10 வருடங்களுக்கு முந்தைய நிலைமையே வேறு! மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பொட்டல்வெளியாக மாறிக்கொண்டிருந்த அந்த நகரத்தை மீட்டு, அழகு நகரமாக, பசுமைப் பிரதேசமாக மாற்றிய புண்ணியம் ஜேனட் யக்னேஷ்வரனையே சேரும். கணவரின் நினைவாக அவர் தொடங்கிய ட்ரீஸ் ஃபார் ஃப்ரீஅமைப்புதான், இன்றைய பெங்களூருவின் பசுமைப் புரட்சிக்கான முதல் வித்து!

‘‘முப்பது முதுகலை டிகிரி, 14 டிப்ளமோ, இன்னும் எக்கச்சக்க படிப்புகள் படிச்சு, லிம்கா சாதனைப் புத்தகத்துல இடம்பிடிச்சவர் என் கணவர் யக்னேஷ்வரன். 10 வருடங்களுக்கு முன்னாடி, சிறுநீரகம் செயலிழந்து இறந்துட்டார். அந்தத் துக்கத்துலேருந்து மீண்டு வர்றது எனக்கு அத்தனை எளிதானதா இல்லை. இறந்த பிறகும் தன்னோட உடலை ஆராய்ச்சிக்கு தானமா கொடுத்த அவரைக் கவுரவப்படுத்தற மாதிரி ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அந்த நேரம் என் துயரத்துக்கும் ஒரு மருந்து தேவைப்பட்டது.

பெங்களூருல மரங்கள் பெருவாரியா வெட்டப்பட்டுக்கிட்டிருந்த நேரம் அது. லேன்ட்ஸ்கேப்பிங் பண்ணிட்டிருந்ததால, ‘மரங்களை வெட்டறதைத் தடுக்க ஏதாவது செய்யக் கூடாதான்னு மக்கள் என்னைக் கேட்க ஆரம்பிச்சாங்க. பெருகிட்டிருக்கிற போக்குவரத்தைக் கட்டுப்படுத்த, சாலைகளை அகலப்படுத்த, மரங்களை வெட்ட வேண்டிய கட்டாயத்துல இருக்கிற அதிகாரத்தோட சண்டை போட்டுப் பலனில்லைன்னு தெரிஞ்சது. மரங்களை வெட்டறவங்களோட போராடறதுக்குப் பதில், புதுசா மரங்களை நடறதுதான் சிறந்ததா பட்டது எனக்கு.

மரங்கள் வெட்டப்படறதை நினைச்சுக் கவலைப்பட்ட மக்களுக்கே, புதுசா மரங்கள் நடறதை ஏத்துக்க முடியலை. மரங்கள்லேருந்து குப்பைகள் விழுமே, டூ வீலர், கார்களை நிறுத்த இடமிருக்காதேன்னு யோசிச்சவங்கதான் அதிகம். ட்ரீஸ் ஃபார் ஃப்ரீஎன்ற அமைப்பைத் தொடங்கினேன். ஆரம்ப காலத்துல வீடு, வீடா போய், ‘மரம் நட ஒரு சின்ன இடத்தை மட்டும் கொடுங்கநாங்க நட்டுட்டுப் போற மரத்துக்கு தண்ணீர் விட்டுப் பார்த்துக்கோங்கன்னு தேடிப் போய் கேட்டுத்தான் விழிப்புணர்வைக் கொண்டு வந்தேன். இப்ப, மக்களே எங்களை அணுகி, மரம் நட்டுத் தரச் சொல்லிக் கேட்கற அளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்திருக்கறதுல சந்தோஷம்’’ என்கிற ஜேனட், மரங்களுக்கு இழைக்கிற கொடுமைகளைப் புரிய வைத்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைகளுக்கும் போதிக்கிறார்.

ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு மா, சப்போட்டா மாதிரியான பழ மரங்களை நட்டுத் தருவதாகவும், அதன் மூலம் அவர்களுக்கு வருமானம் பெருகும் என்றும் சொல்கிற ஜேனட், மரக்கன்றுகளை யாருக்கும் தானமாகத் தருவதில்லையாம். விருப்பமுள்ளோருக்கு, அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று, தம் குழுவினரே நட்டுக் கொடுத்து விட்டு வருவதாகச் சொல்கிறார். இப்போதைக்கு பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மட்டுமே இந்தச் சேவையைச் செய்கிறவர், விரைவில் விரிவுபடுத்தும் திட்டத்திலும் இருக்கிறாராம்.

மரங்கள் நடுவதில் முன்னோடியான திம்மக்காவை சந்தித்ததைத் தன் வாழ்க்கையின் வசந்தகால அனுபவமாகக் குறிப்பிடுகிறார் ஜேனட்.‘‘எங்கக் குழு மொத்தமும் திம்மக்காவோட இருப்பிடத்துக்கே போயிருந்தோம். 3 கி.மீ. தூரத்துக்கு வெறும் மரங்கள் அடர்ந்த பாதையில, பறவைகளோட கிரீச் சத்தத்தையும், பட்டாம்பூச்சிகளோட பட்டு ஸ்பரிசத்தையும், இலைகள் உரசற ஒலியையும் கேட்டபடி, நடந்த அந்த அனுபவத்தை இப்ப நினைச்சாலும் சிலிர்க்குது. எங்க அமைப்போட முதல் ஆண்டுவிழாவுக்கு திம்மக்காவை சிறப்பு விருந்தினரா அழைச்சிருந்தோம். 3 நாள் எங்களோட தங்கியிருந்தாங்க. அவங்களோட உழைப்பும் உற்சாகமும்தான் எங்களுக்கான ஊக்கம்’’ என்கிற ஜேனட், வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.

‘‘மாட மாளிகையோ, ஓலைக் குடிசையோஉங்க வீட்டைச் சுத்தி கொஞ்ச இடத்தையாவது பசுமைக்கு ஒதுக்குங்க. உங்க ஆரோக்கியம், உங்க வீடு எத்தனை பெரிசு, எத்தனை பெட்ரூம் இருக்குங்கிறதைப் பொறுத்த விஷயமில்லை. உங்க வீட்டைச் சுத்தி பசுமைக்கு எவ்வளவு இடம் இருக்குங்கிறதைப் பொறுத்தது. உங்க ஆரோக்கியத்தைக் காப்பாத்தற செலவில்லாத, சிம்பிளான டாக்டர், மரங்கள் மட்டுமே... 



அஷ்ரஃப் 

நன்றி ஆந்தை ரிப்போர்டர்


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home