9 June 2013

பெண்களுக்கு மட்டும் தான் பண்பாடு' கலாச்சாரம்


எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது பொட்டும், தாலியும், உடைகளும்தான் அலசப்படுகின்றன. ஏன் எமது நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே இல்லையா?



ஆனால் பட்டிமன்றங்களும், பெண்களின் பொட்டும், தாலியும், உடையும்தான் விவாதத்துக்கான கரு என்று சொல்லிக் கதைத்துக் கொண்டு இருக்கின்றன. அதையும் தாண்டிப் போவதானால் பெண்களின் மறுமணம் பற்றிப் பேசுகின்றன.

ஆனால் ஆண்களின் மறுமணம் பற்றிப் பேசுவதில்லை. ஆண் மறுமணம் செய்து கொள்வது அதிசயமான விடயமே இல்லையாம். மனைவி இறந்த வீட்டுக்குள்ளேயே அவனுக்கு மறுமணம் பேசி, அவனது மனைவியின் தங்கையையோ அல்லது உறவுப் பெண்ணையோ நிச்சயித்து விடுவார்கள். ஏனென்றால் அவன் ஒரு ஆணாம்.

அவனுக்குத் துணை தேவையாம். ஆனால் பெண்ணுக்கு மட்டும் கணவன் இறந்தவுடன் பொட்டை அழித்து, தாலியைக் கழற்றி, வெள்ளைச் சேலை உடுத்த வைத்து, "இனி உனக்கு ஆசாபாசம் எதுவுமே வரக்கூடாது" என்று சொல்லி, மூலையில் தள்ளி விடுகிறார்கள்.

ஏனென்றால் அவள் ஒரு பெண்ணாம். அவளுக்குத் துணையே தேவையில்லையாம். ஆசையே வரக் கூடாதாம். பெண் ஒன்று பிறந்து விட்டாலே பொன் வேண்டும், பொருள் வேண்டும், அவளை நல்லவன் கையில் கொடுத்து விடவேண்டும். என்று சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள் பெற்றோர்கள்.

தமது ஆசைகளைக் குறைத்து, தேவைகளைத் தவிர்த்து அந்தப் பெண்பிள்ளைக்காகச் சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்றவர்களுக்கே இந்தக் கதி என்றால், நான்கைந்து பெண்களைப் பெற்றவர்களின் நிலையைச் சொல்லவே தேவையில்லை.

முதலில் எமது கலாச்சாரத்தில், பண்பாட்டில் புகுத்தப்பட்ட அடாவடித்தனங்கள் களையப்பட்டு, தேவையான நல்ல புதிய விடயங்கள் புகுத்தப்பட வேண்டும். கொட்டும் பனியில் சேலை அணிவதுதான் எமது பண்பாடு என்று சொல்லிச் சேலையுடன் செல்ல முடியுமா?

அல்லது ஆண்களால் வேட்டியுடன் செல்ல முடியுமா? சில விஷயங்கள் காலத்துக்கேற்ப நேரத்துக்கேற்ப இடத்துக்கேற்ப மாறத்தான் வேண்டும். கலாச்சாரம் என்ற முறையில் கட்டிக் காக்க நம்மிடம் எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளன. அவைகளைக் கட்டிக் காப்போம்.

அஷ்ரஃப் 




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home