பெரும்பாலானோருக்கு பிரியமான புரோட்டா
புரோட்டாவை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி! கோவில்பட்டியில் சுவாரஸ்யம் !
மக்கள் பிரச்சனைகள், சமூக பிரச்சனைகளை முன்னிறுத்தி தினந்தோறும் நாட்டின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணிகள், பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் பெரும்பாலானோருக்கு பிரியமான புரோட்டாவை எதிர்த்து நடந்த பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை மற்றும் பசுமை இயக்கத்தின் சார்பாக இந்த புரோட்டா எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டி காந்தி மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி 6 கி.மீ. தூரம் நடை பயணமாக சென்று புது அப்பனேரி கிராமத்தை அடைந்தது.
கோதுமையிலிருந்து நார்ச்சத்து பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் மைதாவையும், அதிலிருந்து தயாரிக்கப்படும் புரோட்டாவையும் தவிர்ப்போம் என பேரணியில் சென்றவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
மேலும் புரோட்டாவின் கெடுதல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டது. இறுதியியாக மெகா சைஸில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை குழி தோண்டி மூடினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன்; ‘2ஆம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையினால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் அதிகமாக பயன்படுத்த தொடங்கப்பட்டது. அதில் இருந்து புரோட்டாவும் பிரபலம் அடைந்தது. நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதில் ‘பனசாயல் பெரோசிடே’ என்னும் ரசாயனத்தை சேர்த்து வெண்மை நிறமாக்கி செய்யப்படுவதே மைதா எனப்படுகிறது. இது தவிர ‘அலோக்கான்’ என்ற ரசாயனம் கலந்து மைதா மாவு மிருதுவாக்கப்படுகிறது.
கோதுமை தீட்டப்படும் போதே 76 சதவீத வைட்டமின்களும், தாது பொருட்களும் நீக்கப்படுகின்றன. அதோடு 97 சதவீத நார்ச்சத்தும் களையப்படுகிறது. மைதாவில் செய்யும் கேக், இனிப்பு பொருட்கள் மற்றும் புரோட்டா ஜீரணத்திற்கு ஏற்றது அல்ல. இதில் நார்ச்சத்து இல்லை, நார்ச்சத்து இல்லாத உணவுகள் ஜீரணிக்க காலதாமதமாகும்.
மைதாவை சாப்பிடுவதால் இருதய கோளாறுகள், சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய் ஏற்படும். கேரளாவில் மைதாவைப் பற்றி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இங்கிலாந்து, சீனா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் மைதா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.’ என்று பேசினார்.
நன்றி
நியூ இந்தியா
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home