10 September 2013

ஆண்களை அடக்கும், இஸ்லாத்தின் பெண்களுக்கான உரிமைகள்!



இஸ்லாத்தை சாராதவர்களின் பார்வையில் இஸ்லாம் என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்துவருகிறது. அப்படிபட்ட விமர்சகர்கள் எடுக்கும் முதல் ஆயுதம் 'இஸ்லாத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள்' என்பதே...



இந்த ஆயுதம் உண்மையில் கூரிய கத்தியா அல்லது அட்டை கத்தியா என தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், இறைவனின் கட்டளைகள் இறங்கிக்கொண்டிருந்த அந்த ஆரம்ப காலகட்டத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வையின் கீழ் வாழ்ந்த இஸ்லாமியப் பெண்மணிகளின் நிலையை பார்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்கும். சில இடங்களில் இஸ்லாமிய ஆண்கள் எல்லாம் பாவம் என சொல்ல வைக்கும் மேலும் எந்த இடங்களில் தான் (?) பெண்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள் என்று புரியும்! அல்லது எவ்விதத்தில் இஸ்லாமிய பெண்கள் குறைந்தவர்கள் என்ற உண்மை தெரியவரும் இன்ஷா அல்லாஹ்!

இன்றைய காலகட்டத்தில் காலையில் வேலைக்கு செல்லும் கணவன் இரவு தான் வீட்டிற்கு திரும்புகிறான். ஆனால் அவன் மனைவியோ காலை முதல் இரவு தூங்க போறதுக்குமுன் பாத்திரம் கழுவுற வரைக்கும் மிஷின்னா செயல்படணும். இது தான் இன்றைய 99 சதவீத பெண்களின் நிலை. ( மிச்சம் 1 சதவீதம் ஆளுங்க அதிஷ்ட்டக்காரங்களா இருப்பாங்க... கண்டுக்கவேண்டாம் விட்டுதள்ளுங்க பெண்ணினத்திற்காக எழுதப்படாத இந்த 'மாடா உழைக்கணும்' விதியில் இன பாகுபாடே கிடையாது! இஸ்லாமும் அதையே தான் சொல்கிறது என்கிறீர்களா? ம்ம் ஆமா.. ஆனா இல்ல

கணவனுக்கு பொருளாதார பொறுப்பும், மனைவிக்கு குடும்ப பொறுப்பும் கொடுத்து, ஆனால் சின்னதா மாற்றம்... நாம் இன்று ஆண்-பெண் சமம் என்று சொல்லக்கூடிய வீட்டுவேலைகளில் ஆண்களும் பெண்ணுக்கு உதவ வேண்டும் என்ற சமத்துவ விதி அக்காலத்திய பெண்களுக்கும் கிடைத்திருந்தது. தன் தூதனின் வழியாக கணவன் மனைவியிடத்தில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டுமென படைத்தவன் எடுத்துக்காட்ட வைத்தான்!

சமுதாயத்தை மாற்றி அமைக்கும் பொறுப்பு, மக்களின் பிரச்சனைகளை தீர்க்க கூடிய பொறுப்பு, மனைவி மக்களுக்கு பொருளாதார வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டி தொழில் செய்வது, இது போக அவ்வபோது போர் செய்ய வேண்டிய சூழலில் இருக்க கூடிய நபியோ, வீட்டிற்கு வந்தால் ஹாயாக சோபாவில் அமர்ந்து தங்கதட்டில் சாப்பிட்டு, மனைவியை கால் பிடிக்க சொல்பவரா இருந்தாரா எனில்...... ம்ஹும்.... இல்லை!

தனக்கு இருக்கும் ஓய்வு நேரத்தில் வீட்டில் கிழிந்த தன் ஆடையை தைப்பதும் , அறுந்து போன தன் செருப்பை தைக்கிறதும், மனைவிக்கு வீட்டுவேலையில் மனைவிக்கு உதவியஅக இருக்கிறதும் என இருந்ததுடன் தன் தனிபட்ட வேலைகளையும் செய்பவராக இருந்திருந்தாங்க! (நான் ஒரு முஸ்லீம் என பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஆண்களும் சுயபரிசோதனை செய்துக்க வேண்டிய இடம் இது:-) ஒரு சாம்ராஜ்யத்தை ஆளும், மக்கள் போற்றும் மனிதர், மனைவியை நடத்திய விதம் பாத்தீங்களா?

ஆணுக்கு பொருளாதார கடமை, பெண்ணுக்கு குடும்ப பொறுப்பு கடமை என இருவருக்குமுள்ள கடமைகளை தனித்தனியே வரையறுத்து கொடுத்தபோதிலும் கணவனுக்கு தொழிலில் உதவியாக மனைவியும், மனைவியின் வீட்டுச்சுமைகளில் பங்குபோடும் கணவனும் என பெண்ணின் உணர்வை புரிந்துக்கொண்டே நடந்தார்கள். இவ்வேலைகளெல்லாம் ஆண்களுக்கானதல்ல என்று பெண்களின் பக்கம் சுமையை தள்ளிவிடக்கூடிய, 'ஆணாதிக்கம் தலையெடுத்ததன் அறிகுறி எங்கும் இல்லை!

அடுத்ததாக....பெட்டை கோழி கூவி பொழுது விடியாது என்ற வாசகம் சமூகத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட பேச்சுரிமையின் பொதுவான அடையாளம். என்னதான் பெண்சம உரிமைன்னு பேசிக்கொண்டாலும் "பொம்பள (?!) பேச்ச கேக்கணுமா?" ன்னு மனசுல உறுத்தாம இருக்காது! இது ஒரு புறம் இருக்க, நவீன காலத்தில் ஏதேனும் ஒரு பொதுபிரச்சனை ஏற்பட்டால் அதை சம்மந்தப்பட்ட மக்களின் பிரதிநிதியிடம் கொண்டு செல்லவும், எதிர்த்து ஒரு வார்த்தை பேச ஆண்களுமே பேச தயங்கும், பயம் கொள்ளும் சூழலில் பிற்போக்குத்தனமான மார்க்கம் என எல்லோராலும் எள்ளிநகையாடப்படும் இஸ்லாத்தில், அக்கால கட்டத்தில், பெரிய பகுதியை ஆள கூடிய ஜனாதிபதி ஒருவர் சட்டம் இயற்ற, ஆண்களும் பெண்களும் வீற்றிருக்கும் பொது திடலில் அதை எதிர்த்து குரல்கொடுத்தார் ஒரு பெண்! ஆண்கள் அடங்கிய சபையில், ஒரு ஆணை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு அந்த பெண்ணுக்கு எதுவும் தடையாக இருக்கவில்லை.

ஆண்கள் பெண்களுக்கு கொடுக்கும் மணக்கொடையின் அளவில் உச்சவரம்பை கொண்டு வரவும், அப்படியும் அதிகமாக வாங்கும் பெண்ணிடமிருந்து வரம்புக்கு மீறிய தொகை வசூலிக்கப்பட்டு அரசுபொதுநிதியில் சேர்க்கப்படும் என்றும் சட்டம் கொண்டுவர நினைத்து, அதை பொதுமக்களுக்கு அறிவிக்க மேடையில் ஏறுகிறார் அதிபர் உமர். தான் கொண்டு வந்த சட்டத்தை பற்றி மக்களிடம் கூறுகிறார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண் "அல்லாஹ்வும், அவனது தூதரும் கொடுத்த உரிமையை நீங்கள் எப்படி பறிக்கலாம்..? உங்கள் துணைவியரில் ஒருவருக்கு ஒரு பொருள் குவியலே கொடுத்திருந்தாலும் அதை திரும்ப பெறக்கூடாது என்றல்லவா குர் ஆன் வாசகம் சொல்கிறது" என கேள்வி எழுப்பினார். தன் தவறை உணர்ந்து உமர் ரளியல்லாஹு அன்ஹு உடனே தன் கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்.

ஒரு சாதாரண பெண்மணி அதிகார பலம்கொண்ட அதிபர் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து பொதுவில் கேட்கிறார்.. எவ்வித ஈகோவும் இல்லாமல் உடனே அப்பெண்ணிடம் மன்னிப்பும் கேட்டு, சட்டத்தை திரும்பவும் பெற்றுக்கொண்டார் அதிபர்! பெண் பேச்செல்லாம் கேட்க தேவையில்லை என்றோ, அனைவர் கூடும் பொதுவான இடத்தில் பெண்ணுக்கு என்ன வேலை என்றோ யாரும் சொல்லவில்லை!

பெண்ணின் கருத்து சுதந்திரத்திற்கு தடை ஏதும் இருந்ததில்லை. ஆண்கள் இருக்கும் சபையில் ஒரு பெண்ணால் குரல் எழுப்ப முடிந்தது என்பதும் கூடவே 'சட்டமியற்றும் போது பெண்களை ஒதுக்கிவிட்டு செயல்படுவில்லை! என்பதும் கவனிக்கத்தக்கது! தீர்ப்பு கூறும் விஷயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தெளிவு, அக்கால கட்டத்தில் பெண்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்கள் போதிக்க தடுக்கப்படவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.

மேலே நான் சொன்ன அதே அதிபரின் மனைவி இரவுதொழுகைக்காக கூட்டாக தொழுகவதற்கு பள்ளிவாசல் வரக்கூடியவர். அப்படி வந்திருக்கும் போது ஒருமுறை அவரிடம் ஒருவர் வந்து 'உன் கணவர் தான் ரொம்ப ரோஷக்காரராச்சே?! பின்ன எப்படி பள்ளிவாசலுக்கு வரீங்க? இந்த விஷயம் தெரிஞ்சா அவர் கோபப்படுவாரே? அவர் ரொம்ப கோவக்காரராச்சே" என கேட்க, "அவர் எப்படி என்னை தடுப்பார்? அவர் என்னை தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்கு தொழுக வந்தால் அவர்களை தடுக்காதீர்கள்' நபி ஸல் சொல்லியிருக்காங்க!"...

கணவன் கட்டளையிட்டாலோ அல்லது கட்டுபாடுகள் விதித்தாலோ உடனே அடங்கி போக வேண்டும் என இக்காலத்திலும் நினைக்கும் நம் போன்ற பெண்களுக்கு மத்தியில்... கணவனே சொன்னாலும் கூட "படைத்தவனுக்காக தான் அடிபணிய வேண்டும், படைக்கப்பட்டவர்களுக்கல்ல" என்ற வைராக்கியத்துடன் அவர்களால் இருக்க முடிந்தது! அதுவும் அந்த உரிமைக்கான காரணமாக அவங்க சொன்னது இஸ்லாம்! நம்மில் எத்தனை பேருக்கு இந்த சுதந்திரம் இன்று கிடைத்துள்ளது? அல்லது இப்போது இந்த சுதந்திரம் கிடைக்கப்பெற்ற இக்காலத்திய பெண்களுக்கு அக்காலத்திய இஸ்லாமியப் பெண்மணிகள் எவ்விதத்தில் குறைந்தவர்கள்??? தனிபட்ட மனிதனுக்காக்க தனது உரிமையை விட்டுகொடுக்க கூடாது என்ற திமிர் தான் பெண்ணியவாதியின் அடையாளம் எனில் மேலே குறிப்பிட்ட அந்த பெண்மணி 'உரிமையை விட்டுகொடுக்காத அடிமைவர்க்கமா???'

ஹிஜாப்பின் விஷயத்திற்கு வருவோம். வழக்கம் போல் முழுதாக உடை உடுத்துவது தப்பா என்றெல்லாம் கேட்கப்போவதில்லை!

ஹிஜாப் என்பது பெண்களுக்கு மட்டுமெனில் ஆணாதிக்க மதம் என்ற வாதத்தில் உண்மை இருக்கலாம்.. ஆனால் இருவரையும் அல்லவா பார்வை தாழ்த்த சொல்லியிருக்கிறது இஸ்லாம்?? இருவரையும் அல்லவா வெட்கத்தலங்களை பேணிகொள்ள சொல்கிறது இஸ்லாம்? இதுவும் ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கா சரி ஒரு உதாரணம் சொல்லலாம்...

ஆலோசணை கேட்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோக்கி ஒரு பெண் வராங்க. நபியின் தோழர் ஒருவர் அந்த பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார். இதை எதேச்சையாக பார்த்துவிட்ட நபியோ அந்த பெண்ணை அதட்டவில்லை, முகத்தை மூடு என கட்டளையிடவில்லை, மறைவாக ஒளிந்துக்கொள் என சொல்லவில்லை! அந்த பெண்ணை பார்த்த அந்த தோழரின் முகத்தை, தன் கையால் வேறுபக்கம் திருப்பி விட்டாங்க... தவறு எங்கு நடக்கிறதோ அங்கே தான் தட்டப்பட்டிருக்கிறது.... எதெற்கெடுத்தாலும் பெண்களையே குறையாக கருதித்திரிந்ததில்லை!!

பிற்போக்கு மதமான இஸ்லாத்தில் பெண்களின் சொத்துரிமை எப்படி இருக்கும்னு நெனைக்கிறோம்?

*
இஸ்லாமிய பெண்களுக்கு சொத்துரிமையே கெடையாது?!!! -இப்படியா?

*
அவங்க கணவன் தான் சொத்துக்கு சொந்தமானவங்க - இப்படியா?

ம்ஹும்.............. !!!!!

ஒருமுறை ஜைனப் என்ற பெண் அவர்கள் பிலால் (இவுகதேன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நெருங்கிய தோஸ்த்) அவர்களிடம் " என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டுச்சொல்லுங்கள் என சந்தேகம் கேட்டிருக்கிறார்!

உம்மு ஸலமா என்ற பெண் இறைதூதரிடம் தன் கணவனான அபூ ஸலமாவின் குழந்தைகளுக்குச் செலவழிப்பதற்காக தனக்கு நன்மையுண்டா? என கேட்டிருக்கிறார்.

தன் கணவனுக்கும், தன் பராமரிப்பில் இருக்கும் அனாதைகளுக்கும், குழந்தைகளுக்கும் செலவழிக்கும் அளவுக்கு சொத்துக்கள் தனியாக நிர்வகிக்கும் உரிமை பெண்களுக்கு அப்போதே இருந்துள்ளது! மட்டுமல்லாமல் தனக்குரிய சொத்தை 'கையாளும் தகுதி' பெண்ணுக்கே உரியது என்பது மேலே சொல்லப்பட்ட சூழ்நிலைகளை கொண்டு புரிந்துக்கொள்ள முடிகிறது.

இது என் பணம் என சொன்னாலே சண்டைக்கு வரக்கூடிய கணவன் இப்போதிருக்கும் போது தன் சொந்த தனி சொத்தை/பணத்தை வச்சு, தான் தன் கணவனுக்கு செலவு செய்வது பற்றி கேள்வி எழுப்பியிருக்காங்க! பெண்ணுக்கு எதுவும் தெரியாது என்றோ, அவளுக்கு நிர்வகிக்க தகுதியோ அறிவோ இல்லை என்றோ சொல்லிவிடவில்லை. நிர்வாகத்தில் ஆணுக்கு சமமாக பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட உரிமை அல்லவா இது?

மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்தும் தனிபட்ட ஒரு பெண்ணின் எதிர்க்கும் திறனை சார்ந்த விஷயம் அல்ல! இஸ்லாம் ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கும் கொடுத்த உரிமை. இஸ்லாமிய பெண்மணிகளின் ஒட்டுமொத்த நிலையும் இதுவே! இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக கொண்ட ஆண்கள் பெண்களை நடத்திய விதமும் இப்படியே....

இக்காலத்திய பெண்களுக்கு அக்காலத்திய இஸ்லாமியப் பெண்மணிகள் எவ்விதத்தில் குறைந்தவர்கள்??? எந்த விஷயத்தில் அவர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது?

தன் பெண்மக்களிற்குச் செய்யவேண்டிய - கல்வி கொடுத்து, நற்பண்புகள் போதித்து, திருமணம் செய்விப்பது - போன்ற அனைத்து கடமைகளையும் நல்லமுறையில் எந்த குறைவுமின்றி நிறைவேற்றிய பெற்றோர், சொர்க்கத்தில் இரு விரல்களின் நெருக்கம் போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருப்பார்கள் என்ற வாக்குறுதி ஒன்று போதும் பெண்ணை அடிமைபடுத்தும் மார்க்கம் என்ற வெற்று கூச்சலை நசுக்கிவிட....

நம் வாழும் பகுதிகளில் பாரம்பரியம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவைகளை கொண்டு, படிப்பறிவும், மார்க்க அறிவும் அற்ற சிலர் உண்மையை உணராது பெண்களை கட்டுப்படுத்துவதும் உண்மைதான். ஆனால் "இன்ன இன்னவை பெண்களுக்குரிய உரிமை, இதில் தலையிட யாருக்கும் அனுமதி இல்லை" என கூறி பாதுகாப்புடன் கூடிய சுதந்திரத்தை வழங்கிய இஸ்லாம் எவ்விதத்தில் பொறுப்பு ஏற்கும்?

புர்கா/ஹிஜாப் விஷயத்தில் மட்டும்தான் பெண்களின் நிலையை பார்ப்பதை கொஞ்சம் தூர ஒதுக்கிவிட்டு நிர்வாகத்தில், குடும்பத்தில், சமுதாயத்தில் ஏன் தனிமனித செயலிலும் கூட இக்காலத்திய பெண்களை போன்றே, எவ்வித அடக்குமுறைகளுக்கும் வழியில்லாது சம உரிமையுடன் வாழ்ந்த பெண்களை, அவர்களுக்கு அந்த சம உரிமையை கொடுத்த/ ஆண்களுக்கு நிகரான செயல்பாடுகளில் தலையிடாத இஸ்லாத்தை திறந்த மனதுடன் ஆராயலாமே.... எத்தனை காலத்துக்குத்தான் ஒருசார்பு ஊடகமும் போலி பெண்ணியவாதிகளும் சொல்வதையே கேட்டுக்கொண்டிருக்க போகிறோம்?

source: islamiyapenmani.com

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home