13 September 2013

அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறைகள்!



விபத்து மற்றும் அவசர காலங்களில் முதல் உதவி சிகிச்சை அளிக்கும் முறைகள் பற்றிய விளக்கங்கள். நோய்க்குறி அறிதல்:
1. விபத்து நடந்த இடத்தில் முதல் உதவியாளர் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டால் விபத்து எப்படி நிகழ்ந்தது என்ற விபரங்களை பாதிக்கப்பட்டவரோ அல்லது அதைப் பார்த்தவர்களோ சொல்லுவதாகும். விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள இரண்டு சக்கர வாகனம், உடைந்த தூண்கள், இடிபாடுகள் போன்றவைகளும் நடந்த சம்பவத்தை நமக்கு உணர்த்தும்.
2. அறிகுறிகள்: வலி, குளிரினால் நடுக்கம், மயக்கம் வரும் நிலை போன்ற உணர்ச்சிகளை பாதிக்கப்பட்டவரே முதல் உதவியாளரிடம் சொல்லுதல். வலி எடுக்குமிடம் பெரும்பாலும் பாதிப்புகளை வெளிப்படுத்தும்.
3. அடையாளங்கள்: முதல் உதவியாளரே கண்டும், உணர்ந்தும் அறிதல்- உதாரணமாக வெளுத்துப் போதல், வீக்கம், ரத்த ஒழுக்கு, முறிந்த எலும்புகள் உருமாறிப் போதல், சில்லிட்டுப் போதல் போன்றவைகள்.
பாதிக்கப்பட்டவரை சோதிப்பது எப்படி?
நோயாளியை சோதிக்கும் போது அவர் சுயநினைவோடு இருக்கின்றாரா? இல்லையா? என்பதை கண்டறிந்து, உயிரை பாதிக்கக்கூடிய பாதிப்புகள் இருக்கின்றனவா என்றும் கண்டுபிடிக்க வேண்டும். சோதிக்கும் போது:
1. தேவைக்கேற்ப அசைத்துப் பார்த்து- அதிக அசைவினால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள காயங்களுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது.
2. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முறையாக சோதித்துப் பார்க்க வேண்டும்.
3. உங்களின் புலன்களானபார்த்தல், உணருதல், கேட்டல், முகருதல் போன்றவைகளை முழுமையாக உபயோகிக்க வேண்டும்.
4. சோதனையின் போது அடிப்பட்ட பாகத்தை அடிபடாத பாகத்தோடு ஒப்பிட்டு- ஏற்பட்டுள்ள வீக்கம், அசாதாரண மாற்றங்களை கண்டு முதலுதவி செய்ய வேண்டும்.
குறிப்பு:
சோதனையின் போது சுவாசம்கள களஎன்ற சத்தத்துடனோ, சிரமமாகவோ காணப்பட்டால் உடனடியாக மீட்பு நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
சிகிச்சை:
சோதனையின் போது கண்டுபிடித்தவைகளுக்கு உரித்தான சிகிச்சைகளை கிரமமாகச் செய்யவும். அவருக்கு ஆதரவும் அன்பும் தரக்கூடிய வார்த்தைகளால் பேச வேண்டும். பொறுமையாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டும். ஏதாவது சொன்னாலோ, கேட்டுக் கொண்டாலோ, அவைகளை உடனடியாக கவனிக்க வேண்டும்.
அடிக்கடி கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. இது அவருக்கு தொல்லையாக இருப்பதோடு அல்லாமல், முதல் உதவியாளரின் திறமையை சந்தேகிக்க நேரிடும். சிகிச்சை அளித்த பின் நிலைமைக்கேற்ப அவரை கிடத்த வேண்டும். அதோடு உதவி வரும் வரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும். முதலுதவியாளர் தன் குறிக்கோள்களை மறந்து விடக்கூடாது.
1. உயிரைக் காக்க:
1. காற்றும் செல்லும் பாதையில், எந்த நிலையிலும் அடைப்பு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. சுவாசமும், இரத்த ஓட்டமும் இல்லையெனில் உடனடியாக செயற்கை சுவாசமும், வெளிப்புறமாக இருந்து மார்பில் இழுத்தி இருதயத்தை ஊக்குவித்தலும் தொடர்ந்து மருத்துவ வசதி கிடைக்கும் வரை செய்ய வேண்டும்.
3. வெளிப்புற இரத்த ஒழுக்கை நிறுத்த வேண்டும்.
2. நோயாளியின் நிலை மோசமாகாமல் இருக்க:
1. காயங்களுக்கு கட்டு போட வேண்டும்.
2. பெரிய காயங்களுக்கும்- எலும்பு முறிவுகளுக்கும் பாதிக்காமலிருக்க ஆதரவும் கட்டும் போட வேண்டும்.
3. பாதிப்புகளின் சிகிச்சைக்கு ஏற்றவாறு அவரை வசதியாக இருக்கையில் வைக்க வேண்டும்.
3.நோய் நீங்குதலை விரைவுபடுத்த:
1. என்ன நடக்குமோ என்ற அச்சம் நீங்க அவர்களுக்கு அன்பும், ஆதரவும் நிறைந்த வார்த்தைகளால் பேசி நம்பிக்கை உண்டாக்க வேண்டும்.
2. வலியிலிருந்தும் மற்ற உபாதைகளிலிருந்தும் மீட்க தொடர்ந்து செயல்பட வேண்டும்.
3. பொறுமையோடும், நிதானமாகவும் அவரை கையாள வேண்டும்.
4. குளிர்ந்து போகாமலும், ஈரமாக ஆகாமலும் நோயாளியை பார்த்து கொள்ள வேண்டும்.
முதல் உதவியின் கட்டங்கள்: மென்மையாகவும், துரிதமாகவும் செயல்பட வேண்டும்.
1. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றால் உயிரை பாதுகாக்க முடியும்.
2. அமைதியாகவும், முறையாகவும், விரைவாகவும் இவ்வாறு செயல்பட்டால் வலியும் மற்ற பாதிப்புகளும் குறையும். இதனால் உயிரும் காக்கப்படும். அறைகுறையாக பாதிக்கப்பட்டவரை கையாண்டால் அவரின் உடல் நலம் இன்னும் அதிகமாக பாதிக்கப்படும்.
3. சுவாசம் தடைபடுகிறதா? ரத்த ஒழுக்கு அதிகமாக இருக்கின்றதா? அவருக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி குறைவானதா, அதிகமானதா? என்பதை கவனிக்கவும்.
உடனடி சிகிச்சை
1.மேற்கண்டவற்றுக்கும் சுலபமாக தெரியக்கூடிய காயங்களுக்கும் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.
2. ஒவ்வொரு வினாடியும் முக்கியமானதால் சுவாசம் இழந்தவருக்கு உடனடியாக செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.
3. ரத்த ஒழுக்கு ஏற்படும் இடத்தில் பற்றுத்துணி, அணை வைத்து நேரிடையாக அதன் மேல் அழுத்தியோ அல்லது தமனிகளை உரிய இத்தில் அழுத்தியோ ரத்த ஒழுக்கை நிறுத்த வேண்டும்.
4.அதிர்ச்சிக்கு சிகிச்சை கொடுக்கவும்.
5. அனாவசியமாக பாதிக்கப்பட்டவரை அலைக்கழிக்காதே.
6. ரெயில் நிலையம், ரெயில் வண்டி, பேருந்துகளிலும் முதல் உதவி மருந்துப் பெட்டி இருக்கும். அவைகளிலிருந்து தேவையானவற்றை எடுத்து முதல் உதவி செய்யலாம். பல நேரங்களில் முதல் உதவி உபகரணங்கள் கிடைக்கவில்லை என்றால் அங்கு கிடைக்கும் பொருட்களை உபயோகித்து முதலுதவி செய்ய வேண்டும்.
7. விபத்து நடந்த இடத்தில் மின்சாரம், இடிபாடுகள், தீ, விஷ வாயுக்கள் ஓடும் இயந்திரங்களால் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் அப்புறப்படுத்த வேண்டும்.
8. கூட்டம் சேராமல் தடுத்து காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மருத்துவர் இருந்தால் அவர் சொல்படி செயல்பட வேண்டும். முதல் உதவியாளர் ஒருவர் இருந்தால் அவர் உதவியையும் எடுத்துக் கொண்டு, இல்லையெனில் பொது மக்களில் சிலரின் ஒத்துழைப்போடு சிகிச்சை அளிக்க வேண்டும்.
9. வானிலைக்கு ஏற்றவாறு பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்தி, குளிர், வெயில், காற்று இவைளிலிருந்தும் காக்க வேண்டும். தேவைப் பட்டால் குடை, விரித்தத் துணி, செய்தித்தாள் இவைகளையும் உபயோகிக்கலாம்.
10. மென்மையான வார்த்தைகளைப் பேசி அன்போடும், ஆதரவோடும் செயல்பட்டு அமைதியாக இருக்கச் சொல்ல வேண்டும்.
11. மருத்துவ வசதிக்கு அனுப்ப ஏற்பாடு செய். உறவினருக்கு செய்தி அனுப்ப வேண்டும்.
12. உயிரைப் பாதுகாக்கவும், நிலைமை மோசமாகாமல் தடுக்கவும் தேவையான சிகிச்சை அளித்தால் போதும். அதற்கு அதிகமாக சிகிச்சை கொடுப்பதை தவிர்க்கவும்.
குறிப்பு:
கீழ்கண்ட மூன்று அவசர நிலைமைகள் பாதிக்கப்பட்டவரின் உயிரிழப்புக்கு ஏதுவாகும்.
1.சுவாசமும் ரத்த ஓட்டமும் தடைபடுதல்
2.அதிக ரத்த ஒழுக்கு.
3.உணர்வு அற்றுப் போதல்.
உயிரைக்காக்க அடிப்படை ஆதார தேவைகளான காற்று செல்லும் பாதையை சீராக்குதல். தேவையான சுவாசமளித்தல். தேவையான இரத்த ஓட்டம் உண்டாக்குதல் போன்ற செயல்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு
ரத்த ஓட்டத்தை உண்டாக்க:
தரை, நாற்காலி, மேசை போன்ற உறுதியானவற்றின் மீது படுக்க வைக்கவும். கால்பக்கம் சிறிது உயர்த்தி வைத்தால் தலைக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். சுவாசம் தடைபட்டதை கண்ட றிந்து இரண்டு முறை வாயோடு வாய் வைத்து ஊதிய பின்பு வெளிப்புறமாக இருந்து இருதயத்தை அழுத்தி இரத்த ஓட்டத்தை உண்டாக்க வேண்டும்.
1. மார்பில் தெரியும் விலா எழும்பினை நடு விரலால் உணர்ந்து அது மார்பு எலும்போடு இணையும் இடத்தை அறியவும். அங்கிருந்து இரண்டு விரல் கனத்திற்கு அப்பால் உள்ளங்கையின் அடிப்பாகத்தை மார்பு எலும்பின் மீது வை.
2. மற்ற உள்ளங்கையின் அடிப்பாகத்தை முன் வைத்த கையின் மீது வைத்து, விரல்களை கோர்த்துப்பிடித்துக் கொள். முட்டி மீது நின்று, முழங்கையை மடக்காமல் நேராக வைத்து மார்பு எலும்பின் மீது 4 அல்லது 5 செ.மீ (1-2′) ஆழம் முதுகெலும்பை நோக்கி (கீழ்) செல்லும்படி அழுத்தவும். 30 முறை அழுத்தவும் (ஒரு நிமிடத்திற்கு 100 முறை).
3. பிறகு 2 முறை ஊதவும். மீண்டும் 30 முறை அழுத்தவும். இம்மாதிரி 5 முறை செய்யவும்.
4. 6-வது முறை தொடங்கும் முன் 10 வினாடிக்குள் மீண்டும் கழுத்துத்தமனியை அழுத்தி ரத்த ஓட்டமும் பிறகு தாடையை மூச்சு பாதிக்கப்பட்டவரின் முகத்திற்கு அருகில் கொண்டு சென்று சுவாசமும் உள்ளதா என்று கவனிக்கவும்.
5. இல்லையெனில் தொடர்ந்து செயற்கை சுவாசமும், மார்பு எலும்பை அழுத்தி இரத்த ஓட்டத்தையும் உண்டாக்க வேண்டும். மருத்துவ ஊர்தியில் அழைத்துச் செல்லும் போது தொடர்ந்து செயல்படவும்.
6. விலா எலும்புகள் மீது அல்லது மார்பெலும்பின் அடிபாக நுனியில் அழுத்தம் செய்யாமல் எச்சரிக்கையோடு செயல்படவும். சுவாசம் மட்டும் தடைபட்டால் ஒரு நிமிடத்திற்கு 12 முறை வாயின் மீது வாய் வைத்து ஊதவும். நன்றாக சுவாசிக்க ஆரம்பித்தவுடன் அல்லது ரத்த ஓட்டமும் சீரடைந்த பின், உணர்வற்று இருந்தால் அவரை மீட்பு நிலையில்படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
ரத்த ஓட்டம் ஆரம்பித்தால்:
1. மறுபடியும் உடல் நிறம் பழைய நிலைக்கு வரும்.
2.கண்மணிகள் சுருக்கமடைந்து பழைய நிலையை அடையும்.
3. கழுத்திலுள்ள தமனிகளில் நாடித்துடிப்பையும் காணலாம்.
அனுப்புதல்
மருத்துவரிடமோ, மருத்துவமனைக்கோ அனுப்பும் முன் பாதிக்கப்பட்டவரிடம் கண்டறிந்தவைகளை எழுத்தில் குறிப்பிட வேண்டும். எவ்வளவு விரைவில் பாதிக்கப்பட்டவர் மருத்து சிகிச்சைக்கு அனுப்பப்படுகிறாரோ அது அவருக்கு நல்லது.
உறவினர்களுக்கு சாதுரியமாக செய்தி அனுப்ப வேண்டும். அதோடு அவர் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்பதனையும் தெரிவிக்க வேண்டும். கூட்டத்தில் ஒருவரிடம் செய்தி சொல்லி அனுப்பலாம். இது விசயமாக காவலர் உதவியை நாடுவது நல்லது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home