23 September 2013

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது ?




கர்ப்பம் தரித்த எல்லா கர்ப்பங்களும் ஒன்பது மாதங்கள் (40 வாரங்கள்) முடிவுற்று அதன் விளைவாக குழந்தை பிறப்பதில்லை.
சில நேரங்களில் கர்ப்ப காலத்திற்குள்ளேயே தானாக கலைந்து விடுகிறது. இதனை கருச்சிதைவு என்கிறோம். இது தானாக ஏற்படும் கருச்சிதைவு ஆகும்.
பொதுவாக இந்த கருச்சிதைவு 26 வாரங்களுக்கு முன்னதாகவே ஏற்படும்.
கருவில் குழந்தை உயிர்வாழும் சாத்தியம் இல்லாதபோதுதான் கருச்சிதைவு ஏற்படுகிறது.
பெரும்பாலும் கருவுற்ற முட்டையில் கோளாறு இருப்பின் கருச்சிதைவு ஏற்படுகிறது. ஒரு சில வேளைகளில் அவ்வாறு குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது உருக்குலைந்த அல்லது ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க நேரிடுகிறது. ஒரு வகையில் பார்த்தால் இதுபோன்ற பிறப்புகளை தடுக்கிறது கருச்சிதைவு என்று சொல்லலாம்.
மலேரியா, சிபிலிஸ், கர்ப்பவதி கீழே விழுவதினால், இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள பிரச்சினை போன்ற காரணங்களினாலும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
சில நேரங்களில் கருப்பையில் வளர வேண்டிய கரு, கருப்பையில் அல்லாமல், கருவகத்திற்குச் செல்லும் குழாயில் வளர்ச்சியடைவதால் ஒரு கட்டத்தில் அதன் இயக்கம் தடைபட்டு கருச்சிதைவு ஏற்படுகிறது.
கருப்பை அல்லாத பகுதிகளில் வளர்ச்சியடையும் கருமுட்டையினாலும் ஏற்படும் கர்ப்பமானது பாதியிலேயே கருச்சிதைவு ஆகிறது.
இந்த கருச்சிதைவு ஏற்படுவதற்கு இரண்டு அறிகுறிகள் உள்ளன. ஒன்று பெண் உறுப்பில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படுதல், மற்றொன்று அடிவயிற்றில் ஏற்படும் அதிகமான வலி. இரத்தப் போக்கு முதலில் குறைவாக இருக்கும். பின் அதிகரிக்கும். ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தால் ரத்தம் கட்டி கட்டியாக வெளிப்படும். ஆனால் கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும் கருச்சிதைவு, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போலத்தான் இருக்கும்.
கருப்பையில் உருவான கரு சிதைவடைந்து முழுமையாக வெளியேற்றப்பட்ட பின்னர்தான் ரத்தப்போக்கு நிற்கும். அதுவரை ரத்தப்போக்கு இருந்து கொண்டுதான் இருக்கும். இவ்வாறு கருச்சிதைவடைந்த பெண்கள், 2 முதல் 4 வாரங்களுக்கு கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது. இவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். இந்த நாட்களில் உடலுறவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
சிலருக்கு முழுமையாக கருச்சிதைவு ஆகாமல், சில திசுக்கள் கருப்பையிலேயே இருக்கும். இதனால் தொடர்ந்து ரத்தப்போக்கு, அடிவயிற்றில் வலி இருக்கும். அந்த சூழ்நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகி எஞ்சியுள்ள திசுக்களை வெளிக்கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய வேண்டும்.
கருச்சிதைவு முழுமை அடையாமல் தேங்கியிருக்கும் திசுக்களால், நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, கருக்குழாயில் பாதிப்புகள் ஏற்பட்டு எதிர்காலத்தில் கருவுறும் தன்மையையே இழக்கச் செய்யும் அளவிற்கு செல்லும்.
கருச்சிதைவு ஆன பெண்கள், அடுத்து கர்ப்பம் தரிப்பதற்கு சில மாதங்கள் காத்திருத்தல் அவசியம். இந்நாட்களில் கருவுருவதைத் தடுக்க, கருத்தடை முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஒரு சில பெண்களுக்கு கருச்சிதைவானது திரும்பத்திரும்ப ஏற்படும். ஒன்று அல்லது இரண்டு முறை ஆரம்பநிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டாம். ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு ஏற்படின், அடுத்த கர்ப்ப காலத்திற்குள் அந்த பெண், மருத்துவரின் முழுமையான பரிசோதனைக்குட்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டுமே கர்ப்பம் தரித்தல் நிகழ வேண்டும்.
இவை அல்லாமல் குண்டாக இருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே அதிக உடல் எடை கொண்ட பெண்களுக்கு, கர்ப்பம் தரித்த பின் ஏற்படும் பல்வேறு மாற்றங்களினால் இயற்கையாகவே கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே பெண்கள் தங்களது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியமாகிறது.
பொதுவாக கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்ததை அறிந்ததும் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது மிக மிக அவசியம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home