4 September 2013

ஒரு நாள் ஓட்டுநர்!!!!!!!............



ஆட்சிபுரிபவர் மாறுவேடத்தில் வந்து பொதுமக்களின் நிலையை நேரில் கண்டறிந்து
அவர்களுக்கு தேவையானதை சட்டமாக இயற்றுதல் மற்றும் நலத்திட்டங்கள் வழங்குதல் ஆகிய அரசியல் நிகழ்வுகளை நாம் வரலாறுகளில் படித்திருப்போம்.

இன்று வாக்கு பெறுவதற்கு மட்டும் நட்சத்திரமாக மக்கள்முன் பவனி வரும்அரசியலாளர்களைக் காணும் போதும், ஆட்சியில் அமர்ந்தபின் ஐந்தாண்டுகளுக்கு மக்களோடு எந்த ஒட்டும் உறவுமில்லாமல் இருக்கும் இவர்களைப் பார்த்துப் பழகிப் போன நம் கண்களுக்கும் சிந்தனைக்கும் மேற்சொன்ன உண்மை நிகழ்வுகள் அதிசயமாய்க்கூடத் தோன்றும்.

ஆச்சர்யம், அப்படியொரு அதிசயம் உண்மையில் இப்பொழுது நடந்திருக்கிறது. நடந்தது நம்நாட்டில் இல்லை. பல அதிசய ஆச்சர்யங்களை உள்ளடக்கிய நார்வே என்றொரு நாட்டில்
இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

உலகிலேயே அமைதியான சில நாடுகளில் முதன்மை பெறும் நாடு நார்வே.
உலகிலேயே மகிழ்ச்சியாக வாழும் மக்கள் கொண்ட நாடுகளில் முதன்மை பெறும் நாடு நார்வே.
உலகிலேயே அதிகமாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நார்வே உள்ளது.
உலகிலேயே அதிக GDP Per capita ( மொத்த உள்நாட்டு உற்பத்தி - தனிநபர் வருவாய்) கொண்டு பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கும் சில நாடுகளி நார்வேயும் ஒன்றாகும்.
நீண்ட கடற்கரையினைக் கொண்ட நாடுகளில் நார்வேயும் ஒன்றாகும்.

இப்படி பல அதிசயங்களைக் கொண்ட நார்வே, 1905ம் ஆண்டுவரையிலும் ஸ்வீடன் ஐக்கிய கூட்டமைப்பின் ஒர் அங்கமாக இருந்து பிறகு சுதந்திரமடைந்து தனிநாடானது. சுதந்திரமடைந்தும் நாட்டின் தலைமை பொறுப்பு மன்னரிடமும் அரசின் பொறுப்பு பிரதம மந்திரியிடமும் இருந்து ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. தற்போது நாட்டின் மன்னராக ஐந்தாம் ஹெரால்டும், பிரதமந்திரியாக இயென்சு ஸ்டோல்ட்டர்ன்பெர்க்கும் இருக்கிறார்கள்.

54
வயதே ஆன இயென்சு ஸ்டோல்ட்டர்ன்பெர்க் 2005ம் ஆண்டிலிருந்து நார்வேயின் பிரதமராக இருந்து வருகிறார். இவருக்கு தன்நாட்டு மக்கள் மட்டுமன்றி சுற்றுலாவரும் பிறநாட்டு மக்களும் நார்வே பற்றி என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள், நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் எதிர்பார்ப்பது என்ன? என்று பற்றி அறிய நினைத்த பொழுது பிரதமர் தேர்ந்தெடுத்தது கருத்துக்கணிப்பை அல்ல மாறாக தன்னை ஒரு வாடகை கார் ஓட்டுநராக மாற்றிக்கொண்டார்.

சீருடை, கறுப்புக்கண்ணாடி அணிந்து கொண்டு ரகசிய கேமிரா பொறுத்தப்பட்ட ஒரு வாடகை காரை எடுத்து தலைநகர் ஒஸ்லோவின் வீதிகளில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டத் தொடங்கிவிட்டார் பிரதமர். தன்னை சிலர் அடையாளம் கண்டு கொண்டதாகவும், வெகுபலர் பிரதமர் போல தோன்றம் கொண்டிருக்கிறீர்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள். தான் நினைத்தது போலவே மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கும், அவர்கள் இந்த நாட்டின் மீது வைத்திருக்கும் பார்வையினை தெரிந்துகொள்வதற்கும் இந்த முயற்சி பேருதவியாய் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் தன் இருபது ஆண்டு அரசியல் வாழ்வில் பலதுறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ :http://www.youtube.com/watch?v=j3bnYjGITh0

தகவல் உதவி - https://www.facebook.com/yesrafi

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home