18 October 2013

சுப்பிரமணிய சிவாவும் முஸ்லீம்களும்


1884 ஆம் ஆண்டு வத்தலக்குண்டு அருகே உள்ள அய்யம்பாளையத்தில் பிறந்து வத்தலக்குண்டுவில் வாழ்ந்தவர் சுப்பிரமணிய சிவம் என்ற சுப்பிரமணிய சிவா.



பாரத மாதாவிற்கு கோயில் ஒன்றைக் கட்டி நான் ஒரு சன்யாசி. என் மதம் பாரதீயம் என்று கூறி, மக்களின் தேசியத்தை மதமாக்கியவர். அதன் பின்னர் ஊர் ஊராக ஆங்கில அரசிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து மக்களை திரட்டினார். அவருடைய பேச்சால் கவரப்பட்ட பக்தாதிலிருந்து வந்திருந்த சுல்தான் ஒருவர், தேசவெறி கொண்டவராகவே மாறி விட்டார்.

பின்னர் 1921 ஆம் ஆண்டு, சுப்பிரமணிய சிவா மதுரை வருவதற்கு முன்பு திருப்பத்தூரில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். அப்பொழுது நீதிபதி நீதிமன்றத்தில் கள்ளுக்கடை ஏலம் நடத்திக் கொண்டிருந்தார். கள்ளுக்கடை ஏலத்தில் கலந்து கொள்ள ஏராளமானோர் வந்திருந்தனர். கள்ளுக்கடை ஏலத்தை தடுத்த நிறுத்த விரும்பினார் சுப்பிரமணிய சிவா. அப்போது முகமதலி அம்பலம், சுப்பிரமணிய சிவா ஆகியோரின் முயற்சியின் விளைவாக ஏலம் தடுத்து நிறுத்தி ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் 1922 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கள்ளக்கடை மறியலுக்கு தலைவராக சுல்தான் பகுதாதி தலைமை தாங்கினார். மதுரை கொல்லம்பட்டறையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆங்கிலேய அரசு அப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் சிறையில் தள்ளியது. 1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற மறியலில் ஈசுப் சாகிப், முகையதீன் பீர், காதர் பிச்சை, அப்துல் காதர், வருசை முகையதீன், இப்ராகிம் இஸ்மாயில், அப்துல் ரகுமான், முகமது இப்ராகிம், சுல்தான் பகுதாதி உள்ளிட்ட பத்தொன்பது நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மறுநாள் நீதிமன்றம் முன் குற்றவாளிகள் அனைவரும் நிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தலா ஒரு வருட கடுங்காவல் தண்டனையும் 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை பெற்ற அனைவரும் திருச்சி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கள்ளுக்கடை மறியலில் பத்தொன்பது தொண்டர்கள் ஒரே நேரத்தில் சிறைபட்டது அது தான் முதல் முறை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

வடநாட்டில் தான் சுதந்திர போராட்ட இயக்கம் தீவிரமடைந்துள்ளது. தென்னாட்டில் இல்லை என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய சுதந்திர போராட்டம் குறித்து அறிக்கை வைத்த போது, "மதுரை கள்ளுக்கடை மறியிலில் கைதான பத்தொன்பது பற்றி என்ன கூறுகிறீர்கள்" என்று எதிர் கேள்வி கேட்க வைத்தது மதுரை முஸ்லீம் இளைஞர்களின் கள்ளுக்கடை மறியல்.

ஆதாரம்:

விடுதலைப்போரில் முஸ்லீம்களின் பங்கு, வி.என்.சாமி-மதுரை


மறைக்கப்பட்ட வரலாறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும், அனிஸ்தீன்,தேவதானப்பட்டி

தொகுப்பு : வைகை அனிஷ் (செல்:9715-795795)

இந்நேரம் இணையத்தளம் :
http://inneram.com/

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home