20 October 2013

சுத்தம்



தண்ணீரின் வகைகள்
சுத்தம் செய்து கொண்ட பின்புதான் தொழுகையை நிறைவேற்ற முடியும் என்ற நிலையை மார்க்கம் கடமையாக்கியுள்ளதால், சுத்தம் பற்றி முதலில் இங்கே கூறுகிறோம். அசுத்தத்தை நீக்குவதற்காகவே வானத்திலிருந்து தூய தண்ணீரை அல்லாஹ் இறக்கி வைத்துள்ளான். ஆகவே தண்ணீரின் வகைகள் பற்றி தெளிவாகத் தெரிந்து எந்நிலைகளில் அத்தண்ணீர் உபயோகிக்கத் தகுதி உடையதாக இருக்கிறது என்பதையும், எந்நிலையில் அத்தண்ணீர் உபயோகிக்கத் தகுதியற்றதாக ஆகிவிடுகிறது என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொள்வது கடமையென்பதால் தண்ணீரின் வகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1.
எந்தவித மாற்றமும் அடையாத தண்ணீர்
அதாவது சுத்தமாக இருந்து பிறரையும் மற்ற பொருள்களையும் சுத்தப் படுத்தும் தண்ணீர், இத்தண்ணீரால் உளூ, குளிப்பு, அசுத்தத்தை நீக்குதல் போன்றவற்றிற்கு உபயோகித்துக் கொள்ளலாம். கடல் தண்ணீர், மழைத்தண்ணீர், ஸம்ஸம் தண்ணீர் இவைகள் இந்த வகையைச் சேர்ந்ததே.
கடல் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதற்கு ஆதாரம்
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் கடலில் பிரயாணம் செய்கின்றோம் எங்களுடன் கொஞ்சம் தண்ணீரை எடுத்துச் செல்கின்றோம், அதைக்கொண்டு நாங்கள் உளூ செய்தால் தாகித்திருக்க வேண்டி வரும் கடல் தண்ணீரால் நாங்கள் உளூ செய்யலாமா? என ஒரு நபித்தோழர் கேட்டார். கடல் தண்ணீர் சுத்தமானது, அதில் செத்த பிராணிகள் ஹலாலானது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

மழைத் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதற்கு ஆதாரம்

உங்களை அதைக்கொண்டு தூய்மைப்படுத்துவதற்காகவும் அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல் அன்ஃபால், 8:11)
(
மனிதர்களே) நாம் தாம் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கியும் வைக்கிறோம். (அல்ஃபுர்கான், 25:48)

ஸம்ஸம் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதற்கு ஆதாரம்

ஸம்ஸம் தண்ணீர் உள்ள வாளியை எடுத்து வரும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பின்பு அதிலிருந்து குடித்துவிட்டு உளூவும் செய்தார்கள். (ஆதாரம் - அஹ்மத்)

2.
நீண்ட காலம் ஓரிடத்தில் தேங்கியதின் காரணமாக மாற்றமடைந்த தண்ணீர்
நீண்ட காலம் ஒரே இடத்தில் தண்ணீர் தேங்கிக் கிடப்பதால் அதில் பாசனம் ஏற்பட்டு, நிறம் மாறிவிடுகிறது. அத்தண்ணீரில் இலைகள் விழுந்து ஊறிப்போவதால், நிறமும் மாறி விடுகிறது. சில ஊர்களில் பள்ளியின் ஹவ்ளுகளில், கிணறுகளில், குளங்களில் இந்நிலையைக் காணமுடிகிறது. இவ்வாறு ஏற்பட்டு, அதன் நிறம் மாறுவதால், அது தண்ணீரில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இத்தண்ணீரும் சுத்தமானதே!

மூமினான மனிதன் குளித்த பின்னும், உளூச் செய்த பின்னும் உடலில் ஓடிக் கொண்டிருக்கும் நீர், சுத்தமானதே! அதை வைத்து ஒரு சுத்தத்தை நிறைவேற்ற முடியும் என்பதை கீழ்கண்ட சம்பவம் மூலம் அறியமுடிகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது கையில் ஓடிக் கொண்டிருந்த 'உளூ' வின் தண்ணீரைத் தொட்டு, தங்களது தலைக்கு 'மஸ்ஹு' செய்து கொண்டார்கள். (ஆதாரம் - அஹ்மத், அபூதாவூத்)

3.
சுத்தமான வஸ்தைக் (பொருளைக்) கொண்டு மாற்றமடைந்த தண்ணீர்
அதாவது தண்ணீர் என்ற பொதுவான பெயரை இழந்த தண்ணீர். (உதாரணமாக குங்குமம் கலந்த தண்ணீர், மாவு கலந்த தண்ணீர்) இந்த வகையான தண்ணீர் தன்னில் சுத்தமாக இருக்கும் பிறரையும், மற்ற பொருளையும் சுத்தப்படுத்தாது, இத்தண்ணீரை உளூ, குளிப்பு, அசுத்தத்தை நீக்குதல் போன்றவற்றிற்கு உபயோகிக்க கூடாது.

4.
அசுத்தமான தண்ணீர்
அதாவது அசுத்தமான வஸ்துக்கள் (பொருள்கள்) கலந்த தண்ணீர். இத்தண்ணீரை உபயோகிக்கவே கூடாது. இது தன்னிலும் சுத்தமானதல்ல, பிறரையும் மற்ற பொருள்களையும் சுத்தப்படுத்தாது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home