26 October 2013

மம்மீ கண்ணை மூடுங்கள்





நான் கடைத்தெருக்களுக்குச் செல்லும்போதெல்லாம் பெரும்பாலும்பாலும் பத்ரியுடன் செல்வதே இயல்பாக இருந்து வருகிறது. தீர்ந்துபோன பொருள்களை நினைவுபடுத்துவதிலும் பொருள்களையும் விலைகளையும் பற்றி கேட்டுத் துளைத்து ஆய்வு செய்வதிலும் அப்பொழுதுகளில் என்னோடு நேரம் செலவிடுவான். கடைத்தெரு சந்தைக்குச் செல்வது அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் சீக்கிரமாக சளிப்படைந்துவிடுவான். ஆனால் மறுபடியும் என்னுடன் வருவதற்கே அடம்பிடிப்பான். கடந்த இரண்டு மாதங்களாக என்றுதான் நினைக்கிறேன், அதாவது அவனது பிறந்தநாளுக்கு அடுத்தாற்போலிருந்து எனலாம்…. நான் பொருள்கொள்வனவு செய்கின்ற ஒவ்வொரு சமயமும் பில் கவுண்டருக்குப் பக்கத்தில் வந்து நின்றுவிடுவான். மிகுதித் தொகையாக வருகின்ற சில்லறைகளைத் தரும்படி கேட்பான். முதலில் நான் மறுத்தாலும் பிறகு கொடுத்துவிட நிர்ப்பந்திக்கின்ற விதமாகக் கெஞ்சி சாதித்துவிடுவான். இப்படியாக ஐம்பது சதத்திலிருந்து 1, 2, 5 என்று நாணயங்களைச் சேகரிக்க ஆரம்பித்தான். அவனது செய்கை எனக்குப் பிடித்துப்போகவே, நானாகவே நாணயங்களை அவனுக்குத் தரத் துவங்கிவிட்டேன். பழைய டிபன் பொக்ஸ் ஒன்றில்தான் இந்த நாணயச் சேமிப்பு நடந்து கொண்டிருந்தது. அது கிட்டத்தட்ட நிரம்புகின்ற தருவாயை அடைந்ததும் அவனால் பெருமிதம் தாங்கமுடியவில்லை. கூடவே பேராசையும். பத்து ரூபாய் 20 ரூபாய்த் தாள்களைக்கூடக் கேட்க ஆரம்பித்துவிட்டான். அவ்வப்போது எனது பர்ஸைச் சரிபார்த்து அதிலிருக்கும் 10 இருபது, 20 ரூபாய்த் தாள்களைக்கூட எடுக்கிற அளவு வேகம் வந்துவிட்டது. எனக்கு அவனது செய்கை புரியவே இல்லை. சும்மா ஒரு பாக்ஸில் போட்டு அடைத்துவைக்கவா இவ்வளவு பிரயத்தனம் செய்கிறான் என்று யோசனையாகவும் இது எதில் முடியும் என்று சற்று வருத்தமாகவும் இருந்தது.

இன்று காலை சில்லறைகளும் சில தாள்களும் நிரம்பிய அந்தப் பாக்ஸை எடுத்துக் கொண்டு வந்தான்.

மம்மீ கண்ணை மூடுங்கள்என்றான்.

எதையாவது வரைந்தாலோ அல்லது நான் பாராட்டுவேன் என்று அவன் ஊகிக்கும்படியாக எதையாவது செய்தாலோ பின்னால் மறைத்துக் கொண்டு இப்படிக் கேட்பது அவன் வழக்கமாகச் செய்கிற காரியம். அப்படியான தருணங்களில் நான் ஒருபோதும் குதர்க்கம் பண்ணுவது கிடையாது. எத்தகைய மனநிலையில் என்ன வேலையில் இருந்தாலும் அவன் கேட்டதும் கண்களை மூடிக்கொள்வேன்.
இன்றைய செய்கையில் எனக்கு பிடிபடாத ஒரு சந்தேகம் இருந்தது. நாணயங்கள் நிரம்பியிருக்கும் இந்த பாக்ஸில் எனக்குத் தெரியாத என்ன இருக்கிறதென்று கண்ணை மூடச்சொல்கிறான் என்று. இருந்தாலும் அவன் கேட்டுக்கொண்டபடி கண்களை மூடிக்கொண்டு அவன் திறக்கச் சொல்லும்வரைக் காத்துக் கொண்டிருந்தேன். அந்தச் சில்லறைகள் தரையில் கொட்டப்படுகின்ற சத்தம் எனக்குக் கேட்டது. ஆனால் சத்தம் எழாதவாறு கவனமாகத்தான் அவன் கவிழ்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
இப்ப கண்ணைத் திறங்கஎன்றான்.

””மம்மீ இதில எவ்வளவு இருக்கும் எண்ணிப் பாருங்கஎன்றான்.

நான் உட்கார்ந்து எண்ண ஆரம்பித்தேன். 20 ரூபாய்த்தாள்கள் மூன்றே மூன்றுதான் இருந்தன. 10 ரூபாய்த்தாள்கள் ஏழு. சில்லறைகளை 5, 2, 1 , 50 சதம் என்று வகை பிரித்து எண்ணினேன். மொத்தமாக 476 ரூபாய் 50 சதம் இருந்தது.

மம்மீ இது எல்லாமும் உங்களுக்குத்தான். உங்களுக்கு என்ன வேணுமோ வாங்குங்க.என்றான்.
எதுக்குடாஎன்றேன். உண்மையாகவே வியப்புடன் இப்படிக் கேட்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாணயத்தையும் என்னிடமிருந்து பெறும்போது அவன் கெஞ்சியதும் பேசிய வசனங்களும் என்னிடமே அவற்றைத் திரும்பத் தருவதற்கா என்பதிலுள்ள லாஜிக் புரியாமல் அப்படி கேட்டேன்.
அவன் சொன்னான்.
இது உங்கட பிறந்த நாளுக்கு மம்மீ. நான் சின்னப் பையன் கடைக்குத் தனியாப் போக முடியுமா? நீங்களே போய் உங்களுக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோங்க” – உங்களுக்கு என்ன வேணுமோ என்பதை அழுத்தி அழுத்திக் கூறினான்.

எனக்கு என்ன வேணும்?

இந்த அன்பு, கறையில்லாத அன்பு இதனை எனக்கு வாரி வாரித் தருகிற படியாக இருக்கிற இந்தச் சின்ன சீவனின் அன்பு..... இது போதாதா எனக்கு?

நான் நிராகரிக்கப்பட்டவளா? ஆசிர்வதிக்கப்பட்டவளா?
சந்தேகமில்லை…..

நான் நிராகரிக்கப்பட்டவள்தான். அதைவிடவும் அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டவள்.

-ஸர்மிளா செய்யத்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home