7 October 2013

சிசேரியனுக்கு பின் கவனிக்க வேண்டியவை




வலிக்குப் பயந்து கொண்டு நிறைய பெண்களும், பணத்துக்கும் ஆசைப்பட்டுக் கொண்டு மருத்துவர்களும் இப்போதெல்லாம் சுகப்பிரசவங்களை மறந்து, சிசேரியனையே விரும்புகிறார்கள் என்றொரு பொதுவான கருத்து உண்டு. ஆனால், பலரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல சிசேரியன் என்பது அத்தனை சுலபமானதல்ல. சிசேரியன் ஆன பிறகு, நீண்ட கால பாதிப்புகளாக சில பிரச்னைகள் தலைதூக்கலாம் என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
‘‘சிசேரியன் என்பது கர்ப்பப் பையின் கீழ் பகுதியிலிருந்து, வயிற்றைத் திறந்து, குழந்தையை வெளியே எடுக்கும் ஒரு முறை என்பதால், அது மிக மிக ஜாக்கிரதையாக செய்யப்பட வேண்டும். கர்ப்பப் பையைத் திறக்கும் போது, அது, சிறுநீர்ப் பையுடன் ஒட்டிக் கொள்ளலாம். சினைக்குழாயானது கர்ப்பப் பை அல்லது சினைப் பையுடன் ஒட்டிக் கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்த தழும்புடன் கூட ஒட்டிக் கொள்ளலாம்.

இப்படி எங்கே, எப்படி ஒட்டிக் கொள்கிறது என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பும் வேறுபடும். உதாரணத்துக்கு சிறுநீர் பையுடன் ஒட்டினால், மாதவிலக்கு நாள்களில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு, சிறுநீர் கழிப்பதில் சிரமங்கள் வரும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வோ, சிறுநீர் கழிக்கும் போது வலியோ வரலாம். கர்ப்பப் பையும், குடலும் கூட சில நேரங்களில் ஒட்டிக் கொள்ளலாம். அப்படி ஒட்டினால், சாப்பிட்டதும், வயிறு உப்பினமாதிரி தோன்றும்.
இயற்கை உபாதைகளை வெளியேற்ற பெரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியிருக்கலாம். கழிவறைக்குச் செல்வதற்கு முன்பும், சென்று வந்த பிறகும் சிரமம் இருக்கலாம். ஒரு பட்டை மாதிரி போய் குடலைச் சுற்றி ஒட்டிக் கொள்வதால், அடிக்கடி வாந்தி எடுக்கும் உணர்வு, வயிறு வீக்கம் போன்றவையும் சகஜமாக வரலாம். சினைக்குழாயும், கர்ப்பப் பை அல்லது சினைப்பையும் ஒட்டிக் கொள்வதால், அந்தப் பெண்ணுக்கு அடுத்த கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் இருக்கலாம்.
இன்டர்னல் ஹெர்னியா என்கிற பிரச்னைக்கும் இதெல்லாம் வழி வகுக்கலாம். அது அவசரகால சிகிச்சையாக கவனிக்கப்பட வேண்டியது. அறுவை சிகிச்சை ஒன்றுதான் அதற்கு வழி. முன்பெல்லாம் வயிற்றின் குறுக்கே நேர்க்கோடாகக் கிழித்துதான் சிசேரியன் செய்யப்பட்டது. அந்த மாதிரி அறுவை சிகிச்சைகளில் இந்தப் பிரச்னைகள் அதிகம் இருந்தன. இப்போது, வயிற்றின் அடிப்பகுதியில் கிழித்து செய்யப்படுகிற அறுவை சிகிச்சைதான் அதிகம்.
ஆனாலும் கிராமங்களிலும், மருத்துவ வசதி இல்லாத சிறிய ஊர்களிலும் இன்னமும் பழைய முறை பழக்கத்தில் இருக்கிறது. கர்ப்பப் பையே, வயிற்றுடன் ஒட்டிக் கொள்வது, அதன் விளைவாக வயிற்றைத் தொட்டாலே வலி ஏற்படுவது, தாம்பத்ய உறவின் போது வலி என பலவித சிக்கல்களுக்கு இது காரணமாகலாம். இந்தப் பிரச்னைகளை ஸ்கேன் உள்பட எந்த சோதனைகளின் மூலமும் அத்தனை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது.
பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் அறிகுறிகளை வைத்துதான் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி பிரச்னைகள் இருப்பது உறுதியானால்ஒட்டிக் கொண்ட பகுதிகளை லேப்ராஸ்கோப்பி மூலம் பார்த்து, சுத்தப்படுத்தி, மறுபடி ஒட்டாமலிருக்க செலுலோஸால் ஆன வலை மாதிரியான ஒன்றைத் தடையாகப் பொருத்தி விடுவோம். எனவே சிசேரியன் செய்தவர்கள், அதற்கு சம்பந்தமே இல்லாமல் இது போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
- ஆர்.வைதேகி
நன்றி வசந்தம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home