27 November 2013

ஏன் வேண்டும் பான் கார்டு?



கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி அதிகம் பேசுவது நடுத்தர மக்கள்தான். லஞ்சம், கணக்கில் வராத வருவாய் இவையே கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்கள். இந்தப் பிரச்சினையை முற்றிலும் தடுக்க இயலாது எனினும் படிப்படியாக குறைக்க முடியும்.
இரண்டு வழிகளில் கருப்புப் பண பயன்பாட்டைக் குறைக்கலாம். ஒன்று, குறிப்பிட்டத் தொகைக்கு மேல் கொண்ட எல்லா பரிவர்த்தனைகளையும் Electronic payment மூலம் செய்ய வைக்கலாம்.
அதாவது, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துதல். அதனுடன் பான் கார்டு எண் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்குதல். அப்படிச் செய்தால் நமது அனைத்து பரிவர்த்தனைகளும் பான் கார்டு எண் மூலம் வருமான வரித் துறையால் கண்காணிக்கப்படும்.
அவ்வாறு கண்காணிக்கப்படும்போது, ஓர் ஆண்டில் நாம் செய்யும் செலவுகள், நாம் செலுத்தும் வருமான வரியைவிட அதிகமாக இருக்கிறது என்றால், கூடுதல் வரி செலுத்த வேண்டி வரும். இதற்கான விசாரணைகளில் கணக்கில் வராத வருவாய்களைக் கண்டறிவதன் மூலம் கருப்புப் பணம் களையப்படும்.
சரி, யாரெல்லாம் பான் கார்டு வாங்க வேண்டும்? ஆண்டுக்கு சராசரியாக இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும். அவர்களுக்கு பான் கார்டு அவசியம். மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் செலுத்தவோ எடுக்கவோ பான் கார்டு எண் கொடுக்க வேண்டும். பான் கார்டு இல்லாதவர்கள், தனக்கு வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லை அல்லது வரியை நானே கட்டிவிடுவேன் என்று உறுதி அளிக்க வேண்டும். இதற்கு சில படிவங்கள் வங்கிகளில் இருக்கும். அதைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் வாகனம், நிலம், வீடு போன்ற மதிப்புள்ள பொருட்களை வாங்கும்போதும் பான் கார்டு எண் அவசியம். தவிர, அரசு வேறு எதற்கெல்லாம் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வலியுறுத்துகிறதோ அற்கெல்லாம் கொடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஒருவர் பான் கார்டு வாங்கியதாலேயே அவர் வருமான வரி கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வருமானம் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போதுதான் வரி கட்ட வேண்டும். பான் கார்டு வைத்திருப்பதில் ஒரு நன்மை உண்டு. அதை அனைத்து அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் உங்கள் அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.
பான் கார்டு வாங்குவதும் மிக எளிது. புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று இருந்தாலே போதுமானது. இதற்கு 100 ரூபாய் வரை செலவாகும். இதற்கான முகவர்கள் எல்லா ஊர்களிலும் உள்ளனர்.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home