7 November 2013

இந்த வரிகள் படிக்கும் போது கண்களில் கண்ணீர் கசியாமல் இல்லை,



//நால்வரின் ஆடைகளையும் உருவி, உடம்பில் துண்டு துணியுமின்றி, அவர்களை ஊரின் மய்யப் பகுதிக்கு இழுத்து வந்து மிகக் கொடூரமாகத் தாக்கினர். சித்தார்த்தை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின், கயர்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் ஆண் பெண் பேதமின்றி, அனைவரும் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போதும் அவர்களின் ஆதிக்க வெறி அடங்கவில்லை.
ரோஷனையும் தங்கை பிரியங்காவையும் உடலுறவு கொள்ளச் சொல்லி துன்புறுத்தினர். மறுத்த ரோஷனையும் சுதிரையும் மிகக் கடுமையாகத் தாக்கியதோடு, அவர்களின் பிறப்புறுப்பு மீது அடித்து உதைத்து வெட்டி எறிந்தனர். இந்தக் கொடுமை ஒரு புறம் நடக்க, இன்னொருபுறம் தாய் சுரேகாவையும் மகள் பிரியங்காவையும் அனேகமாக அத்தனை ஆதிக்க சாதி ஆண்களும் வன்புணர்ச்சி செய்தனர். அதுவும் போதாதென, இரு உயிரும் பிரியும் வரை மாடு விரட்டப் பயன்படும் தொரட்டிக் குச்சியையும் மூங்கில் குச்சியையும் இருவரின் பிறப்புறுப்பிற்குள்ளும் குத்தினர்.
அடிபட்டு மயங்கிக் கிடந்த ரோஷனையும் சுதிரையும் பல முறை மேலே தூக்கியெறிந்து தரையில் விழச் செய்து சாகடித்தனர். மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடந்த இந்த வெறியாட்டத்துக்குப் பிறகு நான்கு உடல்களையும் கால்வாயில் வீசியெறிந்தனர்.//
நான்கு உயிர்கள். உறுப்புகள் சிதைக்கப்பட்ட அந்தக் கொடூரத்தைப் பார்க்கும் மனிதநேயமுள்ள எவருக்கும் மனச் சிதைவே மிஞ்சும்! உடல் கூசச் செய்யும், மனங்கொதிக்க வைக்கும் அந்தக் கொடூர ஜாதி வெறியாட்டத்தை நிகழ்த்தியவர்கள் மிருகங்கள் என்றால், மிருகங்கள் அசிங்கப்படும்.
உலகின் எந்த மூலையில் நடக்கும் செய்திகளையும் உடனுக்குடன் தருவதே தங்களின் பணியென தம்பட்டமடித்துக் கொள்ளும், வாரத்தின் ஏழு நாட்களும் நாளின் 24 மணி நேரமும் விடாது சுழலும் 24 X 7 ஊடகங்கள், தலித் மக்களுக்கெதிரான அநீதிகள் நிகழும்போது மட்டும் காந்தியின் குரங்குகளாய் பார்க்க மறுக்கின்றன; பேச மறுக்கின்றன, கேட்க மறுக்கின்றன. செயல்படத் திராணியற்றுப் பம்முகின்றன ஏன்? மலம் தின்ன வைப்பது, மூத்திரம் குடிக்க வைப்பது, பிறப்புறுப்பை சிதைப்பது, வன்புணர்ச்சி செய்வது இவையெல்லாம் அவற்றின் செய்தி அரிப்பிற்கேற்ற தீனியாக இல்லையா?
ஊடகங்கள் வன்கொடுமைகளை செய்தியாக்கத் தயங்குவதன் காரணம் ஒன்றுதான். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட வன்கொடுமைகள் பற்றிய விவாதம் சமூக அரங்கிற்கு, உலக அரங்கிறகு வரும்போது அவை கேள்விக்குள்ளாக்கப்படும், கண்டிக்கப்படும். தீர்வுகளை நோக்கிய போராட்டங்கள் வலுக்கும், சாதிக் கட்டமைப்பு ஆட்டங்காணும். இந்திய ஜனநாயகத்தின் மீது உலகமே காறி உமிழும். இந்து வெறியர்களின் கையில் இருக்கும் ஊடகம், அதை விரும்பவில்லை என்பதே பச்சை உண்மை.
கயர்லாஞ்சி கிராமத்தில் நடந்தேறிய கொடுமையையும், வழக்கம் போல் சமூக ஆர்வலர்களும் தலித் இயக்கங்களும்தான் வெளிக் கொண்டு வந்துள்ளன. ஆனாலும் அது பொது மக்கள் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை. 2006ல் நடந்த இந்த கொடூரத்துக்கு இது வரை நீதி கிடைக்கவில்லை,
வன்கொடுமையில் சமூக உரிமை மீறல் இல்லையா, தலித் பெண் மீதான வன்புணர்ச்சி, பெண்ணியப் பிரச்சனை இல்லையா? வன்கொடுமைச் சாவு மரண தண்டனை இல்லையா? நிர்வாணப்படுத்துவதும், உடலுறவு கொள்ளச் சொல்லித் துன்புறுத்துவதும், சுயமரியாதைக்கு இழுக்கில்லையா?
ஜாதியின் வேர் மிகவும் நுட்பமானது. எங்கோ யாருக்கோ நடக்கிறதென நாம் உணர்வற்றிருந்தால், அவ்வேர் வளர்ந்து நம் ஒவ்வொருவரின் குரல்வளையையும் நெறிக்கும். எல்லையின்றிப் பரவியிருக்கும் சாதி மற்றும் சாதி ஆதிக்கத்திற்கான எதிர்வினையும் எல்லையற்றதாக வலுவானதாக இருக்க வேண்டும். இல்லையெனில், பய்யாலாலின் குடும்பம் போல் மிகச் சாதாரணமாக வன்கொடுமைக்கு யார் வேண்டுமானாலும் இரையாக்கப்படலாம்.
திரண்டெழுந்த சமூகம் மட்டுமே அநீதிகளுக்கெதிரானத் தீர்வைக் காணும். நாம் திரண்டெழுவது எப்போது?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home