23 December 2013

அடுத்தவர் குடும்பத்தை கெடுப்பது எப்படி? 2013லும் பாடம் நடத்தும் டிவி சீரியல்கள்




தமிழ் தொலைக்காட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளாக நெடுந்தொடர்களின் ஆதிக்கம்தான் அதிகரித்துள்ளது. மாலை நேரங்களில் முன்பெல்லாம் மாலை நேரங்களில் மட்டுமே ஒளிபரப்பான இந்த தொடர்கள் இப்போது காலை 10 மணி தொடங்கி இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகிறது.
2013ம் ஆண்டில் பல புதிய தொடர்கள் புதிய சேனல்களிலும், பிரபல சேனல்களிலும் ஒளிபரப்பாகின. இதிலும் பெரும்பாலான கதை இருதார மணம், கள்ளத் தொடர்பு, குடும்பத்தைக் கெடுப்பது, குழந்தையை விஷம் வைத்துக் கொள்வது என ஒளிபரப்பாகிறது.
ஏன் இப்படி என்று கேட்டால் மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர். டி.ஆர்.பிக்காக நாங்கள் ஒளிபரப்புகிறோம் என்று பதில் சொல்லுகின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். 2013ல் ஒளிபரப்பான புதிய தொடர்களில் ஒருசில மட்டுமே விதி விலக்காக சுவாரஸ்யமாக அமைந்துவிடுகிறது. சின்னத்திரையின் புதிய தொடர்களைப் பற்றி கொஞ்சமே கொஞ்சம் உங்கள் பார்வைக்காக.
தெய்வமகள்
தந்தையை இழந்த மூன்று பெண்குழந்தைகள். திருமணம் நின்று போன பின்னர் குடும்பத்தை காப்பதற்காக போராடும் கதாநாயகி. அண்ணியிடம் இருந்து குடும்பத்தை மீட்கப் போராடும் கதாநாயகன். இருவரும் இணையும் போது ஏற்படும் சிக்கல்கள்தான் தெய்வமகள் தொடரின் கதை. சன் டிவியில் தினசரி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஆபிஸ்
அலுவலகத்தில் நடக்கும் காதல், நட்பு, அரசியல், காமெடி என நகர்கிறது ஆபிஸ் சீரியல் விஜய் டிவியில் இரவு பத்துமணிக்கு ரிலாக்ஸ் ஆக பார்ப்பவர்களுக்கு பிடித்தமான தொடராக மாறிவிட்டது.
வாணி ராணி
நடிகை ராதிகாவின் ராடான் டிவி நிறுவனம் தயாரித்துள்ள தொடர் வாணி ராணி. அக்கா, தங்கை என இரட்டை வேடத்தில் ராதிகா நடித்துள்ள இந்த தொடரில் முதலில் குடும்ப ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது. இப்போதோ, சொத்துக்காக குடும்பத்தை எப்படி பிரிப்பது என்று திட்டமிடும் கதையாக மாறிவிட்டது.
வைதேகி
ஜெயா தொலைக் காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் வைதேகி தொடர், குழந்தைகளின் மெல்லிய உணர்வுகளையும், குழந்தை இல்லாத தம்பதிகளின் வலிய உணர்வுகளையும் கதைக் களமாக கொண்டது. நடிகர் அப்பாஸ் ஹீரோவாக நடிக்கும் இந்த தொடரில், மீனு கார்த்திகா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். வைதேகி என்னும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருப்பது குழந்தை நட்சத்திரம் ஜெனோ.
தாயுமானவன்
மனைவியில்லாத ஒரு ஆண் தனது 5 பெண் குழந்தைகளை வளர்க்க படும் சிரமம். பெண்குழந்தைகளின் திருமணத்திற்காக சந்திக்கும் சவால்கள் என நகர்கிறது தாயுமானவன் கதை. விஜய் டிவியில் தினசரி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
வள்ளி
சன் டிவியில் மதிய நேரத்தில் இல்லத்தரசிகளின் குட்டித் தூக்கத்தை கெடுக்கும் சீரியல். மூன்று வில்லிகள், ஒரு ஹீரோயின் என சுவாரஸ்யமாகப் போகிறது.
புதுக்கவிதை
விஜய் டி.வியில் மாலை 6.30 மணிக்கு புத்தம் புதிதாக தொடங்கியிருக்கும் தொடர், ‘புதுக்கவிதை.இது ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் பயணிக்கும் காதல் தொடர்.புதுக்கவிதையான பெண்ணுக்கும், மரபுக்கவிதையான ஆணுக்கும் இடையே மலரும் காதல்தான் கதை.
பாசமலர்
தங்கைகளின் மீதான அண்ணனின் பாசம். திருமணத்தையும், குடும்பத்தையும் கெடுக்க நினைக்கும் அத்தை வீட்டார் என ஸ்டீரியோ டைப் கதைதான். நெல்லை மாவட்டத்தின் அழகை காட்டுவது சீரியலின் சிறப்பம்சம்.
ரெங்கவிலாஸ்
ஜெயா டிவியில் மிக அதிக அளவில் நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்து வரும் தொடர் ரெங்க விலாஸ். ஸ்ரீரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தொடரில் ராதாரவி, ஜெயசித்ரா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
மாமியார் தேவை
பொதுவாக மாமியார்கள் எல்லோரும் வீட்டிற்கு நல்ல மருமகள் தேவை என்று தேடுவார்கள். ஆனால் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் மாமியார் தேவை தொடரில் குடும்ப ஒற்றுமையைக் காக்க நல்ல மாமனாருக்கு ஏற்ற நல்ல மாமியாரைத் தேடுகிறாள் ஒரு மருமகள்.
உறவுகள் சங்கமம்
ராஜ் டி.வி.யில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ‘‘உறவுகள் சங்கமம்.அத்தை மகள் கங்காவுக்காக, தன் தம்பிக்கு பல வகையில் தொல்லை தரும் அண்ணன் அப்சர்., அண்ணனை பல இக்கட்டிலிருந்து காப்பாற்றும் தம்பி நேத்திரன்., இவனை உயிருக்கு உயிராய் காதலிக்கும் கங்கா., இவர்களுக்குள் நடக்கும் பாசப் போராட்டங்களே கதைக்களம்.
நல்ல நேரம்
தேவர் பிலிம்ஸ் நிறுவனம் முதன்முதலாக சின்னத்திரையில் தயாரித்துள்ள தொடர் நல்ல நேரம். யானையும் சிறுவனும்தான் கதையின் முக்கிய அம்சங்கள். வில்லத்தனம் செய்யும் குடும்பத்தினரிடம் இருந்து ஊரைக்காக்கும் யானைதான் சீரியலின் முக்கிய கரு.
வம்சம்
சொந்தங்களைத் தேடி ஒரு பயணம் என்றுதான் சொன்னார் ரம்யா கிருஷ்ணன். விஜயகுமார், வடிவுக்கரசி, ரம்யா கிருஷ்ணன் என மிகப்பெரிய நடிகர்கள் நடித்துள்ள இந்த தொடரின் கதையும் சொத்துக்காக சொந்த உடன்பிறப்பையே கொல்லும் கதையாக நகர்கிறது.
சித்திரம் பேசுதடி
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் சித்திரம் பேசுதடி. குந்தவை, தமயந்தி, தேன்மொழி, மணிமேகலை, கயல்விழி இவர்கள் ஐவரும் தாயை இழந்த ஐந்து சகோதரிகள். இவர்களின் தந்தை ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழ்வாணன். திருமணத்திற்கு முன்பாக இந்த பெண்களிடம் இருக்கும் கனவுகள், தேடல்கள் எல்லாமே திருமணத்திற்கு பின்பாகவும் உயிர்ப்போடு இருக்கிறதா, அதை அடைகிறார்களா அல்லது மறைந்து போகிறதா? இன்றைய இளம்பெண்களின் வாழ்க்கை தட பதிவுகளை மிக யதார்த்தமாக பேசுகிறது சித்திரம் பேசுதடி.
தேன்நிலவு
சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தேனிலவு. இந்த தொடர் காமெடி, திரில்லர் தொடர் திருமுருகனின் திரு பிக்சர்ஸ் நிறுவனம் இந்த தொடரை தயாரிக்கிறது. தேனிலவு சென்ற 5 ஜோடிகள் சந்திக்கும் பிரச்சினைதான் தொடரின் கதை.
அக்னிப்பறவை
தமிழ் சினிமாவிலும் சீரியல்களில் யாரும் செய்திராத புதுமையான புரட்சிகரமான வேடத்தில் நடிக்க முன்வந்திருக்கிறார் நடிகை சிம்ரன். அக்னிப் பறவைத் தொடர் ஒரு உண்மைக் கதை. புதுயுகம் தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
உணர்வுகள்
குடும்ப உறவுகள் உணர்வுகளால் நிறைந்தது. அந்த உறவு, மற்றும் உணர்வுகள் சின்ன சின்ன விஷயங்களால் பிரிவதும், இணைவதும்தான் உணர்வுகள் சீரியலின் கதை. வீடு அர்ச்சனா இந்த தொடரில் நடிக்கிறார்.
மல்லி
சிறுவர்களுக்கான தொடர் என்றாலே சாகசம், அமானுஷ்யம், த்ரில், மேஜிக் என்றுதான் நகரும். ஆனால் முதன்முதலாக சிறுவர்களின் நிஜமான வாழ்க்கையைச் சொல்லும் கதைதான் மல்லி. புதுயுகம் சேனலில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் முதன் முதலாக நடிக்கிறார்.
பொன்னூஞ்சல்
மதிய உணவு நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் திருமணமான ஹீரோவிடம் இருந்து மனைவியை விரட்டியடித்து விட்டு மறுமணம் செய்து கொள்ள நினைக்கும் வில்லியின் அரதப்பழசான ஐடியாதான் கதை.
தேவதை
அன்பான மகள், காதலர்களை சேர்த்துவைக்கும் புதுமைப் பெண், மலிவு விலை மெஸ் நடத்தும் பெண் என மூன்று முகங்களைக் கொண்ட கதாநாயகி தேவதை பூரணி. காதல் திருமணத்தை நடத்தி வைப்பதால் சந்திக்கும் சிக்கல்கள்தான் தொடரின் கதை. சன் டிவியில் தினசரி மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
செல்லக்கிளி
ஒரு பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்யும் ஆணின் கதைதான் செல்லக்கிளி தொடரின் கதை. இதிலும் ஒரு குடும்பத்தைக் கெடுக்கும் கதைதான்.
ராஜகுமாரி
தங்கம் தொடரின் முடிவுக்குப் பின்னர் ரம்யா கிருஷ்ணன் நடித்த தொடர் ராஜகுமாரி. கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் 100 எபிசோடிலேயே முடித்துவிட்டனர்.

அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home