8 December 2013

குஜராத்தில் ஐந்து ஆண்டுகளில் 32 ஆயிரம் பேர் தற்கொலை அம்பலப்படும் `முன்மாதிரி’ மாநிலத்தின் உண்மையான வளர்ச்சி !



குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 32 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்மாநில உள்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் பாஜக பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி. தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தனியார்மயம், உலகமயம், அந்நியர் நுழைய தாராள அனுமதி, ஏழைகளின் மீது மேலும் மேலும் சுமையை அதிகரிப்பது, பெரும் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவது போன்ற நாசகரக் கொள்கைகளுக்கு மாற்றாக புதிய மக்கள் நலன் காக்கும் கொள்கைகளை எடுத்துக் கூறாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் மீது தனிப்பட்ட விமர்சனத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும், இந்திய மாநிலங்களுக்கெல்லாம், முன்னோடி மாநிலம், இதுபோன்றதொரு மாநிலத்தை இந்தியாவில் பார்க்க முடியாது, அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது குஜராத், எனவே, காங்கிரசுக்கு எவ்வித மாற்றும் இல்லாத தங்களிடம் நாட்டை ஒப்படைத்தால், நாட்டையே வளப்படுத்துவோம் என்று பொய்களை அடுக்கிக் கொண்டு வருகிறார்.கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியல் அமர்ந்து நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றமடையச் செய்திருக்க வேண்டிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கையாலாகாத் தனத்தை அறுவடை செய்யும் விதமாக, அக்கட்சிக்கு எதிராக மக்களிடம் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பலைகளை மையமாக வைத்து பாஜக பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கிறது.போலி கணக்குகள் மூலம் சமூக வலைதளங்களில் நரேந்திர மோடிக்கான ஆதரவு அதிகரிப்பதாகவும், மோடியின் கூட்டங்களிலெல்லாம் இஸ்லாமியர்கள் நிறைந்து வழிவதாகவும் பொய்த் தகவல்களை வெளியிட்டு பின்னர் அம்பலப்பட்டுபோகிறது பாஜக. குஜராத் முன்மாதிரி மாநிலம் என்பதை மட்டும் உரக்கச் சொல்லும் மோடி மற்றும் பாஜகவினர் அம்மாநிலத்தில் நிலவும் பல்வேறு அவலநிலைகளின் உண்மைகளை மறைத்து, மறந்து விடுகின்றனர். இதனை இடதுசாரிகள் உள்ள சமூகத்தின் மீது, நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளோர் மக்களிடம் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வளர்ச்சியடைந்த மாநிலத்தின் மற்றுமொரு வளர்ச்சியை அம்மாநில அரசே வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, குஜராத் மாநிலத்தில் கடந்த 2008-2012-ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட 5 ஆண்டுகளில் மட்டும் 32 ஆயிரத்து 20 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது அம்மாநில உள்துறையின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் அதிகமாக தற்கொலை நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் குஜராத் மூன்றாவது இடத்தைப் பிடித்திருகிறது.
இதில், 25.6 சதவிகிதத்தினர் குடும்பத் தகராறுகளாகும், 20.8 சதவிகிதம் பேர் நோயாலும், 3.3 சதவிகிதம் பேர் போதைப் பழக்கத்தினாலும், 3.2 சதவிகிதம் பேர் காதல் விவகாரங்களாலும், 1.6 சதவிகிதம் பேர் வரதட்சணைக் கொடுமையாலும், 2 சதவிகிதம் பேர் திவால் மற்றும் உடனடி பொருளாதார மாற்றத்தினாலும், 15.1 சதவிகிதம் பேர் தெரியாத காரணங்களாலும், 25.6 சதவிகிதம் பேர் இதர காரணங்களாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், அம்மாநிலத்தில் 1.9 சதவிகிதம் பேர் வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதுதான்.இதேபோன்று பல்வேறு அவலநிலைகளும் குஜராத்தின் முன்மாதிரிக்குப் பின்னால் ஒழிந்து கிடக்கிறது. குஜராத்தில் தற்கொலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக மும்பையைச் சேர்ந்த வன்தெர்வலா என்ற தன்னார்வ அறக்கட்டளை நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவதற்கான வேலைகளில் மாநில அரசு இறங்கியுள்ளது.
இதற்காக உதவி எண்களும், காவல்துறையினருக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்கொலை செய்யும் எண்ணமுடைய ஒருவர் அல்லது தற்கொலை செய்வோரைக் காப்பாற்ற விரும்பும் ஒருவர் சம்பந்தப்பட்ட உதவி எண்ணிற்கு அழைத்தால், அதன்பின்னர் அவர்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home