6 December 2013

அட்லான்டிக் கடலில் 100 அடி ஆழத்தில் தவித்தவர் 72 மணி நேரத்துக்கு பின் உயிருடன் மீண்ட அதிசயம்



லாகோஸ், நைஜீரியா: தண்ணீர் உறைந்து கிடக்கும் அட்லான்டிக் கடலில் 100 அடி ஆழத்தில் 72 மணி நேரம் தவித்த கப்பலின் சமையல்காரர் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டார். கடந்த மே மாதம் 26ம் தேதி நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி சமீபத்தில் வீடியோ வெளியானது. இதைத் தொடர்ந்து தான் இந்த சம்பவத்தில் இப்படி ஒரு அதிசயம் நடந்து, சமையல்காரர் மீட்கப்பட்டார் என்பது தெரிந்தது. நைஜீரியாவை சேர்ந்த எண்ணெய் கப்பலை மூன்று இழுவை கப்பல்கள் கரைக்கு இழுத்துவந்து கொண்டிருந்தன. இழுவை கப்பலில் 10 பேர் இருந்தனர். சமையல்காரர் ஹாரிசன் ஆட்ஜெபோ ஒகின் மட்டும் வழக்கமா அதிகாலை எழுந்து விடுவார்.  

அன்றும் அப்படி தான் எழுந்தார்; நேராக டாய்லெட்டுக்கு சென்றார். அங்கிருந்தபோது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் ஏதோ ஒரு பெரிய ராட்சத குழாயில் செருகிக்கொண்டதை உணர்ந்தார். அப்போது தான் அவருக்கு கப்பல் கவிழ்ந்ததை உணர்ந்தார். உடனே, இருட்டில் தடவித்தடவி சென்று வெளிச்சம் வந்த பகுதிக்கு சென்றார். அது சிறிய ஓட்டை போல இருந்தது.

அதில் இருந்து காலை வெளியே விட்டு பார்த்தால் மங்கலான வெளிச்சம் காணப்பட்டது.  அந்த பகுதியில் ப்ளாஷ் லைட்கள் இரண்டு கையில் சிக்கின. ஆக்சிஜன் பையும் கிடைத்தது. அதை  எடுத்து கொண்டு ஆக்சிஜன் முகமூடியை அணிந்து கொண்டார். அடுத்த மணி நேரங்கள் எப்படி கழிந்தன என்றே தெரியவில்லை. அவர் இன்னும் கடலின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.  சில மணி நேரம் வரை ஒரே கோக் பாட்டிலை வைத்து  சமாளித்தார்.

  தன்னுடன் இருந்த 10 ஊழியர்கள் கதி என்னவானதோ என்று கலங்கினார். மனதுக்குள் தன் தாய், தந்தை , மனைவியை எண்ணி கண்ணீர் விட்டார்.  அடுத்த சில மணி நேரத்தில் அவர் உறையும் நிலைக்கு வந்தார். கை கால்கள் அசைக்க முடியாத அளவுக்கு உறைந்தன. இதனிடையே எண்ணெய் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஹாலந்து நாட்டு மீட்பு நிறுவனத்தை சேர்ந்த டைவர்கள் சிலருக்கு தகவல் போனது. டோனி வாக்கர் தலைமையில் டைவர்கள் கடலுக்குள் மூழ்கி தேடினர்.

நான்கு பேரின் உடல்கள் சிக்கின. இவர்களின் மீட்பு நடவடிக்கைகளை எல்லாம் வெளியே தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் கம்ப்யூட்டர் உதவியுடன் அதிகாரிகள் கண்காணித்து கொண்டிருந்தனர். நான்கு பேர் உடலை மீட்டவுடன், ‘கப்பலின்  அடிப்பகுதியில் இன்னும் ஒருவர் கை நீட்டி கொண்டிருக்கிறது...பாருங்கள்என்று தரைக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் சொன்னவுடன், அந்த பகுதி நோக்கி டைவர்கள் விரைந்தனர்.

கையை பிடித்து உடலை வெளியே எடுக்கலாம் என்று நினைத்து கையை பிடித்த டைவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் கையை கெட்டியாக பற்றிக்கொண்டது அந்த கை. இறந்தவர் உடலா, இல்லை உயிருடன் யாராவது இருக்கிறாரா என்று பயந்து போன டைவர் அந்த கையை விடாமல் இழுத்தார். அப்புறம் தான் தெரிந்தது ஒருவர் தத்தளிப்பது.

உடனே, அவர் மீது வெந்நீரை பீச்சியடித்து அவரின் உறைந்த நிலையை சற்று மாற்றினர் டைவர்கள். அவருக்கு புதிதாக ஆக்சிஜன் பையை பொருத்தி, அவர் முகத்தில் செருகினர். அடுத்த சில நிமிடங்களில் அவர் வெளியே   எடுத்து வரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உயிருடன் மீட்கப்பட்டது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

அவர் அளித்த பேட்டியில், ‘நான் கடலில் மூழ்கிவிட்டபோது, என் மனைவி  கடவுளை பிரார்த்திப்பதாக மொபைலில் எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தாள்.  அதை சில நிமிடம் படித்திருப்பேன். அடுத்து  என்ன நடந்தது என்று தெரியாது. நான் பிழைத்தது அந்த ஆண்டவன் செயல் தான்என்றார்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home