4 December 2013

எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பின் அறிகுறி அல்ல...



சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று எல்லோருக்கும் நெஞ்சு வலி வருகிறது. மற்ற வலிகளைக் கண்டு பயப்படுகிறோமோ இல்லையோ, நெஞ்சு வலி என்றால் துடித்துப் போகிறோம். காரணம், நெஞ்சுவலியை மக்கள் எப்போதும், மாரடைப்பின் அறிகுறியாகப் பார்ப்பதுதான். ‘‘எல்லா நெஞ்சு வலிகளும் மாரடைப்பின் அடையாளமில்லை...’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

‘‘
மாரடைப்பினால் வரும் நெஞ்சு வலியானது, முதலில் நெஞ்சின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கும். மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, வலி இடது கைக்குப் பரவுவது, நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்துகிற மாதிரியோ வலிப்பது, மூச்சுத் திணறல், அரிதாக சில நேரம் கழுத்திலும் வலி போன்றவை இருக்கும். ஆனால், மற்ற பிரச்னைகளின் காரணமாக வரக்கூடிய நெஞ்சு வலிக்கும், இதயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நெஞ்சு வலிக்கான முக்கிய காரணங்களில் கழுத்து மற்றும் முதுகெலும்பு பாதிப்பு, தோள்பட்டை வலி, முதுகின் மேல்புற தண்டுவட சவ்வு பாதிப்பு மற்றும் நெஞ்செலும்பு சந்திப்புகளில் உண்டாகிற தேய்மானம் போன்றவை அடக்கம். தவிர அக்கி எனப்படுகிற இன்ஃபெக்ஷனும் ஒரு காரணமாகலாம். வயதானவர்களுக்கு ஏற்படும் முதுகெலும்பு உடைவதன் காரணமாகவும் இந்த வலி வரலாம்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் நாள்பட இருக்கும். மயக்கம், படபடப்பு, மூச்சுத் திணறல் இருக்காது. எனவே வலி வந்ததும், இது ஆபத்தான இதய வலி இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கல்லீரல் பகுதியில் ஏற்படும் வலிகூட நெஞ்சு வலியாக உணரப்படலாம். எக்ஸ் ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் மருத்துவ ஆலோசனையின் மூலம் காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கேற்ப சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

அக்கி வலியாக இருந்தால், ஒருவித ஊசியின் மூலம் சரிசெய்யலாம். தோள்பட்டை வலியானால், தோள்பட்டை தேய்மானம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க, தோள்பட்டை சந்திப்பில் ஊசியின் மூலம் மருந்தைச் செலுத்தி, சில பயிற்சிகளும் பரிந்துரைக்கப்படும். நெஞ்செலும்பு சந்திப்புகளில் வயதானவர்களுக்கு வரும் வலிக்கு மாத்திரைகளும், பயிற்சிகளுமே தீர்வு. முதுகெலும்பு நொறுங்குவதால் வரும் வலி வயதானவர்களுக்கு சகஜம். 11 மற்றும் 12-வது எலும்புகளே இத்தகைய நொறுங்குதலுக்குக் காரணம்.

இது அடி படுவதாலோ, விபத்தினாலோ ஏற்படாமல், கால்சியம் குறைபாடு காரணமாக வரும். மருந்து, மாத்திரைகள் பெரியளவில் உதவாது. வெர்ட்டிப்ரோபிளாஸ்டி எனப்படுகிற ஒரு ஊசி, எலும்பைப் பலப்படுத்தும் சிமென்ட் போல செயல்பட்டு, எலும்பை பலப்படுத்தி, வலியைக் குறைக்க உதவும். இதைப் போல ஒவ்வொரு காரணத்துக்கான பின்னணியைக் கண்டறிந்து, சரியான சிகிச்சை கொடுத்தாலே நெஞ்சு வலியிலிருந்து மீண்டு நிம்மதியாக வாழலாம்...’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

 
தகவல்-தினகரன்

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home