வாழும்போதே வானைத் தொடு!
வானம்… உயரங்களின் உதாரணம். காரணம், தொட முடியாத தொலைவு.
வானம்… பறந்து செல்லும் பறவைகளின் சுதந்திர
பூமி. நட்சத்திரப் பூக்கள் கண் சிமிட்டும் அழகிய நந்தவனம்.
வண்ணங்களின் ஏழடுக்காம் வானவில்லின் பிறப்பிடம்.
வெண்மையும், கருமையுமாய்
வளர்ந்து செல்லும் மேகக் கூட்டங்கள், கவிஞர்களுக்குக் கற்பனைச் சுரங்கம்.
அண்ணாந்து பார்க்கிறேன். போதிமரமாய்
வானம் புதுப்புதுச் சிந்தனைகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது.
மில்டன் ஆஸ்லன், பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர். ‘கூஸ்’ என்ற வாத்து இனத்தைச் சார்ந்த பறவையைப்
பற்றி அதிகம்
ஆராய்ந்தவர். இந்தப் பறவை ‘முட்டாள்
பறவை’ என்று
அழைக்கப்படுகிறது. எதற்காக இப்படி அழைத்தார்கள் என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
இந்தப் பறவைகள் கூட்டமாகப் பறக்கும்போது எப்போதும்
ஆங்கில ‘வி’
வடிவத்தில்தான்
பறக்கும். ஏனென்றால் தனித்தனியாகப் பறப்பதை விட ‘வி ‘ வடிவத்தில் பறக்கிறபோது பறவைக்
கூட்டத்தின் பறப்பு எல்லை அதிகமாகிறது.
பறக்கும்போது ஒரு பறவை தவறுதலாக வடிவமைப்பிலிருந்து
விலகிவிட்டால் அப்பறவை உடனடியாகத் தன்னுடைய பழைய இடத்துக்கு வராது. வடிவமைப்பின்
பின்னால் போய் விடும். முன்னால் பறக்கும் பறவைகளின் உந்துசக்தியால் ஈர்க்கப்பட்டு
இப்பறவையும் விரைவிலேயே வரிசைக்கு வந்து விடும்.
தலைவனாக முன்வரிசையில் பறக்கும் ‘கூஸ்’, எப்போதாவது சோர் வடைந்தால் கடைசி
வரிசைக்கு வந்துவிடும். உடனே இன்னொரு பறவை தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்.
கடைசி வரிசையில் பறக்கும் பறவைகள் அடிக்கடி ஆரவாரக் குரல் எழுப்பி மற்ற
பறவைகளுக்கு உற்சாகம் ஊட்டும்.
கூட்டத்தில் ஒரு பறவைக்குத் திடீரென உடல்நலம்
கெட்டுவிட்டாலோ அல்லது வேட்டையாடுபவர்களால் குண்டடி பட்டுவிட்டாலோ அது
வடிவமைப்பை விட்டுத் தன்னையறியாமலேயே விலக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
உடனே என்ன நடக்கும் தெரியுமா? யாராலும் நம்ப முடியாத ஆச்சரியம் அது. இரண்டு
பறவைகள் அந்த உடல்நலமற்ற குண்டடி பட்ட பறவையைப் பத்திரமாகக் கீழே தரைக்குக்
கூட்டிக் கொண்டு வரும். அதனுடனேயே இருந்து அதற்கு உணவு அளித்து அந்த
நோயாளியைப் பாதுகாக்கும். அந்தப் பறவையின் உடல்நிலை தேறும் வரை
காத்திருந்து அதைத் தங்களுடன் கூட்டிக் கொண்டு போகும். அப்பறவை உடல் நலம்
தேறாமல் இறந்து போனால் மறுபடியும் கூட்டத்துடன் அந்த இரண்டு பறவைகளும்
வந்து சேர்ந்து கொள்ளும். இப்படி வானத்திலிருந்தும், வானத்தில் பறந்து செல்லும்
பறவைகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்வதற்குக் கணக்கற்ற பாடங்கள்
உள்ளன.
மீண்டும் அண்ணாந்து பார்க்கிறேன். வானம்
அளவு உயர்ந்தவர்களின் வாழ்க்கை கண்களில் காட்சியாய்த் தெரிகிறது.
அப்துல் கலாம்… இந்தியாவின் மேல் கூரையில் விஞ்ஞானக்
கொடி ஏற்றியவர். உலகம் இந்தியாவைப் பார்த்து முதல் முறையாக மிரண்டது, அக்னி ஏவுகணை ஆகாயத்தைக் கிழித்தபோது.
உலகம் இந்தியாவை மரியாதையுடன் பார்த்தது, பொக்ரானில் ஒரு பேரொலி கேட்டபோது.
இந்த வெற்றிகளின் பிறப்பிடம்தான்
அப்துல்கலாம். அவருக்கு எப்படி இந்தச் சாதனை சாத்தியமாயிற்று? அவரே சொல்கிறார்-
‘நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே வானத்து
மாயாஜாலங்கள், வானவீதியில்
வட்டமடிக்கும் பறவைக் கூட்டங்களைப் பார்த்துப் பார்த்துப் பரவச மடைவேன்.
உச்சியில் பறக்கும் கொக்குகளையும், சீகல்
பறவைகளையும் அடிக்கடி கவனித்துப் பார்ப்பேன். நாமும் அதைப் போலப் பறந்தால்
நன்றாயிருக் குமே என்று ஏக்கமாக இருக்கும்.
சாதாரண நாட்டுப்புறத்துப் பையனாக இருந்தாலும்
நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன் என்று எனக்குள்ளே திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்வேன்.
ஆகாயத்தில் பறந்த ராமேஸ்வரத்தின் முதல் குழந்தை நானாகத்தான் இருப்பேன்…’
என்று தன் சுயசரிதைப்
புத்தகமான அக்னிச் சிறகுகளில் அச்சில் நேர்த்தியாகத் தன் வாழ்வியலைப் பதிவு
செய்துள்ளார் கலாம்.
‘வாழும் போதே வானைத் தொடு’ என்பதற்கு முன்னுதாரணம்
அப்துல்கலாம்தான். ஆம்! இன்று அவரது புகழ் வானளவு
உயர்ந்திருக்கிறது. காரணம், பள்ளியில்
படித்துக் கொண்டிருந்தபோதே
வானைத் தொட வேண்டும் என்ற அவரின் இலட்சியக் கனவுதான். அதுதான் விமானப் பொறியியல் படிப்பில்
அவரை ஈடுபடச் செய்தது.
இனிய இளையோரே! இந்த இடத்தில் ஒன்றை உங்களிடம்
பதிவு செய்தாக வேண்டும். அப்துல் கலாம் படித்து முடிந்தவுடன்
அவருக்கு வேலை
கிடைத்திருக்கும். அதனால் அவர் உயரத்திற்குச் சென்றிருக்கிறார் என்றுதான் உங்களது
மனம் நினைத்திருக்கும். உண்மையில், என்ன
நடந்தது தெரியுமா? அதையும்
கலாம் பதிவு செய்திருக்கிறார் தனது நூலில்.
‘ஒரு நேர்முகத் தேர்வுக்காக விண்ணப்பித்து அதற்கான
அழைப்புக் கடிதமும் கிடைக்கப் பெற்றேன். டேராடூனில் நடைபெற்ற
மிகக் கடுமையான நேர்
முகத் தேர்வு அது. உடல் அறிவுத் திறன் போன்ற அம்சங்களை அப்போட்டியில் சோதித்தார்கள். பனிரெண்டு
பேர் போட்டியாளர்கள். அவர்களில் பதினொரு பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீக்கப்பட்ட துரதிஷ்டசாலி நான்தான்’ என்கிறார்.
அடடா… இவருக்கா அந்தச் சோதனை என்று நீங்களும்
வியப்படைகின்றீர்களா? தேர்வில்
தோற்றுப்போன அவர், வானத்தில்
வலம் வந்தது எப்படி?
போர்க் களத்தில் கலங்கியிருந்த அர்ஜுனனுக்கு
கிருஷ்ணர் தமது விசுவரூப தரிசனத்தைக் காட்டி வழங்கிய அருளாணை, ‘தோல்வி மனப்பான்மையைத் தோற்கடி’ என்பதுதான்.
சிந்திய வியர்வையும், ஆற்றலும்தான் அப்துல்கலாமை தோல்வி மனப்பான்மையைத்
தோற்கடிக்கச் செய்து வானவீதியில் வலம் வரச் செய்தன. இளையோரே! மண்ணில் கால்
பதித்து விண்ணில் தன் புகழை எட்டச் செய்த அந்த மாமனிதர் அப்துல்கலாமுக்குச்
சலாம் செய்யுங்கள்.
அன்பானவர்களே!
‘நீங்களும் வானத்தைத் தொட நினைக்கின்றீர்களா?
வெற்றியை எட்டும்
நோக்கம் இருந்தால் ஒற்றைச் சிறகிலும் பறக்கலாம்’ என்பார் கவிஞர் தாராபாரதி. அந்த
வெற்றியை எட்ட ஆறு வகையான பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நேர்மை, நாணயம், நம்பிக்கை, கண்ணியம், அன்பு, விசுவாசம் இவைதான் அந்தப் பண்புகள்.
இந்த ஆறு படிகளை உங்கள் வாழ்க்கையிலும் எடுத்து வைத்துப்
பாருங்கள். வாழும்போதே வானைத் தொடுவீர்கள். ஒரு வேண்டுகோள்.
சிகரத்தைத் தொட படிக்கட்டுகளில் பயணத்தைத் தொடங்குங்கள். அதுவும் ஒரு சமயத்தில்
ஒரு படிக்கட்டு என்ற விகிதாச்சாரத்தில் இருக்கட்டும். ஆறு படிக்கட்டுகள்
உங்களுக்குள்ளேயே இருக்கின்றன. முயற்சிகளைத் தொடருங்கள். தொடங்கிவிட்டீர்களா?
இதோ கவிஞர் மு. மேத்தா
எழுதிய திரைப்படப் பாடல் என் செவிகளில் வந்து ஒரு சேதி சொல்லுகிறது-
நட்சத்திர ஜன்னலில்
வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் – நம்
உறவில் உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே
நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப் போடு புது
வாழ்வில் கீதம் பாடு.
வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் – நம்
உறவில் உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே
நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப் போடு புது
வாழ்வில் கீதம் பாடு.
இந்தப் பாடல் வரிகள் உங்களுக்குள்ளும்
தன்னம்பிக்கையை விதைக்கும். வானளவு வெற்றியை எட்ட வாழ்த்துகள்.
பேராசிரியர்
க. ராமச்சந்திரன்
க. ராமச்சந்திரன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home