29 April 2014

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?




எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும்  எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.

சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது நல்லதா? சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்டவுடன் குடிப்பது நல்லதா?

பொதுவாக தண்ணீர் குடிப்பது நல்லது. தண்ணீர் குடிப்பதற்கு முறையெல்லாம் இல்லை. எந்த நேரமும் குடிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்போசாப்பிடும்போதோ அதிகமாக தண்ணீர் குடித்தால் சாப்பிட முடியாது. வயிறு நிரம்பிவிடும். எனவே சாப்பிட்ட பிறகு குடித்தால் நல்லது.

எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளும்போது மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்குமா?

எண்டோஸ்கோபி பரிசோதனையின்போது மயக்கமருந்து ஸ்பிரே செய்து தொண்டைப்பகுதி மரத்துப்போக செய்தோ அல்லது மயக்கமருந்தின் மூலம்  உங்களை மயக்கமடையச் செய்தோ எண்டோஸ்கோபி கருவியை வாயின் வழியாக செலுத்தி பரிசோதனை செய்யப்படும். பெரும்பாலான நோயாளிகள்  பரிசோதனையின்போது உறங்கிவிடுவார்கள். எனவே மூச்சு விடுவதற்கு சிரமம் இருக்காது.

கொழுப்புள்ள உணவு உண்பது நல்லது. அது குடலின் உட்புற சுவரில் படிந்து அங்குள்ள புண்களுக்கு மருந்துபோல் செயல்படுகிறது என்கிறார்களே  சரியா?

குடலின் உட்சுவர் வழுவழுப்பாகவும் மெல்லியதாகவுமிருக்கும். எனவே நாம் சாப்பிடும் உணவுகள் அத்தனையும் சுற்றியுள்ள உட்சுவரில் ஒட்டாமல்  நேரடியாக உள்ளே சென்றுவிடும்.

எனது 3 வயது குழந்தை நாணயம் விழுங்கிவிட்டது. நான் வாழைப்பழம் உண்ணக்கொடுத்தேன். ஆனால் நாணயம் வெளிவரவில்லை. என்ன செய்வது?

குழந்தை விழுங்கிய நாணயத்தை எண்டோஸ்கோபி மூலம் எடுத்துவிடலாம். நாணயம் மட்டுமின்றி சிறிய விளையாட்டுப்பொருட்கள்உணவுப்பொருட்கள் போன்றவற்றை குழந்தைகள் விழுங்கி விட்டாலும் எண்டோஸ்கோபி மூலம் வெளியில் எடுத்துவிடலாம். சமீபத்தில் ஒரு சிறுவன்  சிறிய பூட்டை விழுங்கிவிட்டான். எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அது வயிற்றின் அடி பாகத்தில் கிடந்தது. அதை எண்டோஸ்கோபி மூலம்  வெளியிலெடுத்தேன். எனவே உடனே தாமதிக்காமல் எண்டோஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணரை அணுகி நாணயத்தை வெளியிலெடுப்பது நல்லது.

நான் சில நாட்களுக்கு முன்பு கோவையில் பிரபல நிறுவனம் அமைத்துள்ள வெரைட்டி சோடா ஒன்று குடித்தேன். பின்னர் மதுரைக்கு சென்று  இறங்கிய பின்னர் வாந்தி வந்தது. அதில் ரத்தத்துளிகள் இருந்தது. வாந்திக்கும் ரத்தத்துளிகளுக்கும் காரணம் என்ன? சோடா குடித்தது காரணமாக  இருக்குமோ?

சிலருக்கு பேரூந்தில் பயணம் செய்வது ஒவ்வாது. தலைசுற்று ஏற்பட்டு வாந்தி எடுத்துவிடுவார்கள். ஆனால் உங்களுக்கு வாந்தி ரத்தத் துளிகளுடன்  வந்தது என்று கூறுகிறீர்கள். ஒருவேளை நீங்கள் பருகின சோடா உங்களுக்கு வயிற்றில் அல்சர் போன்ற பிரச்னை ஏதேனுமிருப்பின் அதை  பாதித்திருக்கலாம். எனவே உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

வெயில் காலத்தில் வயிறு கலக்கிக்கொண்டு மலம் செல்கிறது. இதற்கு உடல் சூடு காரணமா?

வெயில் காலத்தில் தண்ணீரில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் துரித உணவு, பழைய எண்ணெயில் செய்த உணவை  உண்டிருந்தீர்களானால் அதனாலும் வயிற்றுபோக்கு ஏற்பட்டிருக்கலாம்.

நமது உடல் குடலமைப்பு, உள்ளுறுப்புகளின் செயல்பாட்டிற்கு ஏற்றது சைவ உணவா? அசைவ உணவா? இயற்கை உணவா? சமைத்த உணவா?

நமது வயிறு செத்த உணவை புதைப்பதற்கு சுடுகாடு அல்ல. வயிறே உன்னை ஆராதிக்கிறேன் என்று கூறுவதைப்போல நமது வயிறை பாதுகாப்பாக  வைத்துக்கொள்ள வேண்டும். சிறந்தது சைவ உணவு தான். அதிலும் சிறந்தது இயற்கை உணவுதான்.

தூங்கும் போது என் மகள் பல்லை நறநறவென்று கடிக்கிறாள். இது எதனால் ஏற்படுகிறது?

ஒரு வேளை வயிற்றில் பூச்சி இருக்கலாம். அல்லது பல்லில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம். மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது.




-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home