16 May 2014

கொந்தளிக்கும் பெற்றோர் பள்ளிகளில் கட்டண கொள்ளை!

தமிழகத்தில் மொத்தம் 10,934 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் அரசு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. கடந்த 2012ல் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான குழுவினர் கோவிந்தராஜன் தலைமையிலான கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட 15 சதவீதம் உயர்த்தியதுடன் 201415, 201516 ஆகிய ஆண்டுகளுக்கு தலா 10 சதவீதம் கட்டணத்தை உயாத்தினர். ஒவ்வொரு பள்ளியின் மாணவர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதியம், நிர்வாக பராமரிப்பு செலவு என பலவற்றை ஆய்வு செய்து அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தில் அதிகபட்சமாக 12ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கே ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாகத்தான் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் எல்.கே.ஜிக்கே லட்சக்கணக்கில் நன்கொடை என்ற பெயரில் வசூலித்து வருகின்றனர். நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள் வசூலிப்பதில்லை என்பதுதான் பெற்றோர்களின் குற்றச்சாட்டு. சரி... இதை தட்டிக்கேட்கலாம் என்று போனால், அதை வைத்தே குழந்தைகளை பழி வாங்கும் நடவடிக்கையில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபடுகின்றன. இதற்கு பயந்துதான் பெற்றோர்கள் பலரும் எதையும் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறப்பதற்கு முன்பும், அட்மிஷன் நடக்கும் சமயத்திலும் பள்ளியை பெற்றோர் முற்றுகையிடும் சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளன. சமீபத்தில் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளி கடந்தாண்டு கட்டணத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்து கட்டணம் நிர்ணயித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கெல்லாம் கல்வி அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தற்போது, 201415ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தமுறையாவது, கல்வித்துறை அதிகாரிகள் கல்வி கட்டணம் முறையாக வசூலிக்கப்படுகிறதா என்று இப்போதிருந்தே கண்காணிக்க வேண்டும், ஏற்கனவே அட்மிஷனை முடித்த பள்ளிகளிலும் முறையான விசாரணை நடத்த வேண்டுமென்பதே பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து பொது மக்கள் கூறியதாவது தனியார் பள்ளிகளில் எப்போது அட்மிஷன் நடக்கிறது என்பதையே ரகசியமாக வைத்திருக்கிறார்கள். நோட்டீஸ் போர்டில் கூட அறிவிப்பு வெளியிடுவதில்லை. இறுதி தேர்வு முடிந்த உடனேயே அவசர அவசரமாக அட்மிஷனை காதும் காதும் வைத்த மாதிரி நடத்துகிறார்கள். சில பள்ளிகளில் இரவு முழுவதும் வரிசையில் காத்திருந்தால்தான் அட்மிஷன் அப்ளிகேஷனே வாங்க முடிகிறது. இதற்கெல்லாம் காரணம், ஏரியாவிலேயே அந்த ஸ்கூல்தான் ரொம்ப பிரபலம் என்ற மாயை ஏற்படுத்துவதற்குதான். மேலும் அவசர அவசரமாக அட்மிஷன் நடத்துவது, அரசு ஏதாவது புது உத்தரவை போடுவதற்குள் அவர்கள் அட்மிஷன் முடித்து கட்டணம் வசூல் செய்வதற்காகத்தான்... இது, புரசைவாக்கம் தெருவை சேர்ந்த காயத்திரி அனுபவம்... எல்கேஜி படிக்கச் சேர்க்கும் குழந்தைகளுக்கு கூட டொனேஷனாக ஆயிரக்கணக்கில் கேட்கிறார்கள். அப்படி டொனேஷன் கொடுத்தால்தான் சீட்டே கிடைக்கிறது சில பள்ளிகளில். டொனேஷன் கொடுத்து விட்டு ஸ்கூல் பீஸைப் பார்த்தால் அதுவும் தலை சுற்றவைக்கிறது. எல்கேஜி குழந்தைக்கு லைப்ரரி, சுற்றுலா கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். எல்கேஜி குழந்தைக்கு எதுக்கு லைப்ரரி என்பது புரியவில்லை. அந்த மாதிரியான தேவையில்லாத வசதிகள் இருப்பதாக கூறி அதில் ஆயிரக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். மயிலாப்பூரை சேர்ந்த வைதியநாதன் அனுபவம் இது... தனியார் பள்ளிகளால் பெற்றோர் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அரசும், பல்வேறு கமிட்டி அமைத்து தனியார் பள்ளிகளின் அநியாய வசூலை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கிறது. ஆனாலும் அரசை காட்டிலும் தனியார் பள்ளிகள் மிக வேகமாக செயல்பட்டு அரசு உத்தரவு வருவதற்கு முன்பாகவே அநியாய கட்டணத்தை வசூலித்து முடிக்கிறார்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நம் பிள்ளைகளும் நுனி நாக்கில் இங்கிலிஷ் பேச வேண்டும், திறமையானவனாக எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பள்ளிகள், கல்வியை ஒரு வியாபாரமாக மாற்றியிருக்கிறார்கள். அண்ணா நகர் சுசிலாவின் ஆதங்கம் இது. ஜெயலெட்சுமி (மேற்குமாம்பலம்) : ஸ்கூல் பீஸ் கட்டும் போதே, வாகன வசதி, யூனிஃபார்ம் போன்றவற்றுக்கும் சேர்த்து 12ல் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை கறந்து விடுகிறார்கள். ஆனால், நாமே ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து பிள்ளை அனுப்பினாலும், நாமே யூனிஃபார்ம் எடுத்து தைத்தாலும் இந்த செலவில் பாதி கூட வராது. பல பள்ளிகளில் நாம் செலுத்தும் கட்டணத்திற்கு சரியான பில்லை தருவதில்லை. பில் கேட்டால் நாம் கட்டும் பில்லில் நான்கில் ஒரு மடங்கைத்தான் பில் கட்டணமாக தருகிறார்கள். சாதாரணக் கடையில் கூட சரியான பில் தருகிறார்கள் அப்படியிருக்க பள்ளிகள் பில் தர மறுக்கின்றன. பள்ளிகளில் நாம் கட்டும் கட்டணத்திற்கு முறையான பில் தரவேண்டும் என்று அரசு சட்டமியற்றவேண்டும்.

-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home