7 March 2013

"மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு உலகில் 2-வது இடம்!

"மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு உலகில் 2-வது இடம்!


7 Mar 2013

புதுடெல்லி:வேத காலத்தில் பசுக்களை வெட்டி விழுங்கிவிட்டு தற்போது பசுநேசர்களாக உலா வந்து மாட்டிறைச்சிக்கு தடைகோரி சங்க்பரிவாரத்தினர் கூக்குரலிடும் வேளையில் இந்தியாவுக்கு அதிக வருமானம் தரக்கூடியதாக மாட்டிறைச்சி மாறியுள்ளது.

உலகின் முன்னணி பால் உற்பத்தியாளர் என்ற நிலையை பல ஆண்டுகளாக தக்க வைத்துள்ள இந்தியா தற்போது மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தை எட்டியுள்ளது. எருமை இறைச்சி உற்பத்தில் ஏற்பட்டுள்ள பெருக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் முதல் இடத்தை பிரேசிலிடமிருந்து அது தட்டிப் பறிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் புள்ளிவிபரங்களின் படி 2012 ஆம் ஆண்டில் பிரேசில் 1.52 மில்லியன் டன்கள் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்தது. இந்தியாவோ 1.45 மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு உலகச் சந்தையில் வெறும் 8 சதவீதம் என்ற அளவில் இருந்த இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி நடப்பு ஆண்டில், 2 மில்லியன் டன்களைத் தாண்டும் உலகச் சந்தையில் 29 சதவீதத்தை இந்தியா பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த அபார வளர்ச்சிக்கு எகிப்து, மலேசியா போன்ற புதிய சந்தைகள் முக்கியக் காரணம் என்கிறார் வட இந்தியாவில் இருக்கும் எம் கே ஒவர்சீஸ் என்ற மாட்டிறைச்சி நிறுவனத்தின் இயக்குனர் ஷானவாஸ்.

இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையேயான இடைவெளி எடையைப் பொறுத்தவரை சிறிதென்றாலும் பண மதிப்பைப் பொறுத்தவரை கணிசமானது. கடந்த ஆண்டு பிரேசில் 5.7 பில்லியன் டாலர்களை சம்பாதித்து. இந்தியாவோ ஏற்றுமதி மூலம் 3 பில்லியன் டாலர்களைப் பெற்றது. பிரேசில், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இறைச்சிக்காகவே சிலவகை பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்தியாவிலோ கறவை நின்றுபோன எருமை மாடுகளும்ஆண் மாடுகளும்- காளைக் கன்றுகளும் வயதான காளை மாடுகளும் கசாப்புக் கடைக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதியாவதில்லை.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் கோமாரி நோயை தடுப்பு ஊசிகளைப் போடாமல் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்தியாவின் பல பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பு ஊசி போடுவதன் மூலம் ஒழிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் கூறும் காரணம் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. வேறு சில நாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டும் சில கட்டுப்பாடுகளோடு ஏற்றுமதி செய்கின்றன. நாங்களும் அந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்துகிறோம். எனவே எங்களது போட்டியாளர்களும் சில நாடுகள் தமது உள்ளூர் உற்பத்தியை பாதுகாக்க வேண்டும் என்ற கவலை காரணமாகவும் விலை குறைவான இந்திய ஏற்றுமதியைத் தடுக்க முனைகின்றனர்
என்கிறார் ஏபெடா எனப்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி தருண் பஜாஜ்.

அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் தனிநபர் இறைச்சி நுகர்வு ஆண்டுக்கு 100 கிலோவை விட அதிகம். இந்தியாவிலோ இது 5 கிலோ என்ற அளவில்தான் இருக்கிறது.

மாட்டிறைச்சியை உண்பது குறித்து ஒரு சாதியக் கண்ணோட்டம் கலந்த பார்வை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவுகிறது.

சமீபத்தில் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாட்டிறைச்சி திருவிழா வன்முறையில் முடிந்தது.

வட கிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருந்தாலும் பிற பகுதிகளில் அப்படியல்ல. எனவே நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாட்டிறைச்சியில் 50 சதவீதத்துக்கும் மேல் தற்போது ஏற்றுமதியாகிறது.

இந்த ஏற்றுமதி வளர்ச்சி மூன்று நான்கு மாடுகளை வைத்து கறவைத் தொழில் செய்வோருக்கு பெரும் லாபத்தை அளிப்பதாக கூறுகிறார் தமிழகத்தைச் சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளறான சையத் சுபாஹானி. உள்நாட்டில் மாட்டிறைச்சி விலை போகாவிட்டாலும், வெளிநாடுகளிலுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாக கறவை நின்று போன மாடுகளுக்குக் கூட 10 ஆயிரம் ரூபாய் விலை கிடைப்பதாக அவர் கூறுகிறார்.

இந்துக்களில் ஒரு பகுதியினர் பசுவை வணங்குவதாக கூறுகின்றனர். மறையோதும் வேதியர்கள் வேதகாலத்தில் பசு மாமிசத்தை சாப்பிட்டதாக வேதங்களிலேயே ஆதாரம் இருந்தாலும் பசு பாதுகாப்பு என்பது இந்துத்துவ அமைப்புக்களின் முக்கிய வேலைத் திட்டமாக மாறிவிட்டது.

இந்தியாவின் சில மாநிலங்களில் பசுவை வெட்ட தடை உள்ளது. இந் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா பசு இறைச்சியை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திட்டக் கமிஷன் முன் ஒரு யோசனை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

மாட்டிறைச்சி ஏற்றுமதி என்ற பெயரில் பசு இறைச்சி ஏற்றுமதி செய்யப்படக் கூடாது என்று கூறும் இந்து முன்னணியின் இராம கோபாலன், எருமை இறைச்சி மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும் என்பது உறுதி செய்யப்படுமானால் அது குறித்து யோசிக்கலாம் என்கிறார்.

மாட்டிறைச்சியை ஊக்குவிப்பதற்காக சில வரி சலுகைகளை இந்திய அரசு அளித்துள்ளது. இதன் காரணமாக நவீன இறைச்சிக் கூடங்களும் இறைச்சி பதப்படுத்தப்படும் நிலையங்களும் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இறைச்சி ஏற்றுமதியால் வரும் பணம் ரத்தம் தோய்ந்தது. இந்தியாவுக்கு இது தேவையில்லை என்கிறார் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் துணைத் தலைவர் சென்னி கிருஷ்ணா.

மாடுகள் வெட்டப்படுவதற்காக லாரிகளில் அடைத்துக் கொண்டு செல்லப்படுவதும் உரிய உணவும் நீரும் இன்றி பல நாட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுவதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ஏற்றுமதிக்காக கொண்டு செல்லப்படும் மாடுகள் விடயமே வேறு என்கிறார் இந்திய அரசு அதிகாரியான தருண் பஜாஜ்.

ஏற்றுமதிக்காக கொண்டுவரப்படும் மாடுகள், நாட்டில் அமலில் இருக்கும் சட்ட திட்டங்களின்படிதான் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. உள்ளூர் அதிகாரிகள் , விலங்குகள் நல விதிகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்கின்றனர். மாடுகள் கொடுரமாக நடத்தப்படவில்லை என்று என்னால் சொல்ல முடியும். ஏற்றுமதியாளர்கள் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இதுபோன்ற விடயங்களில் அவர்கள் பிரச்சனையைத் தேடிக் கொள்ள மாட்டாரகள்.என்றார் அவர்.

கடந்த நிதி ஆண்டில் இந்தியா 13,725 கோடி ரூபாய் மதிப்புள்ள எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த வியாபாரம் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலங்குகள் உரிமை, அகிம்சை மரபு என்று மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கு எதிராகக் குரல்கள் எழுந்தாலும் அந்தக் குரல்களுக்கு பெரிதாக பலன் இருக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.


தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home