14 March 2013

இன்று உலகம் முழுவதும் வெடிக்கும் பயங்கரவாதங்களுக்கு இஸ்லாமியர்கள் தான் காரணமென பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.




மற்ற மதங்களை விட உணர்ச்சிப்பூர்வமாகவும் இன்று உலகம் முழுவதும் வெடிக்கும் பயங்கரவாதங்களுக்கு இஸ்லாமியர்கள் தான் காரணமென பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்., கட்டுப்பாடாகவும், ஒரு இயக்கம் போலவும் இசுலாமிய மதம் பின்பற்றப்படுவது உண்மைதானென்றாலும், இந்தப் பலவீனத்தை முதலீட்டாக்கி அரசியல் சூதாட்டங்களுக்கும் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி இசுலாமிய நாடுகளிலிருக்கும் மக்களை மதத்தின் பெயரால் ஆளும்வர்க்கங்கள் சுரண்டிக் கொழுப்பதற்குக் காரணகர்த்தா அமெரிக்கா தான்.

வளைகுடா நாடுகளில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து பாலைவனமான அப்பகுதி ஏகாதிபத்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இந்தப் பாலைவன நாடுகளின் அரசியல் திசைவழியை ஏகாதிபத்திய நாடுகள் தமது நலனுக்கேற்ப அமைத்துக் கொண்டன. குறிப்பாக இங்கிலாந்தும், பின்னர் அமெரிக்காவும் அரபு நாடுகளின் எண்ணைய் தொழிலைக் கையிலெடுத்துக் கொண்டு அதற்குத் ஆதரவு தரும் பிற்போக்கு சக்திகளை நாடாள அனுமதித்தன.

அப்போது பரவி வந்த கம்யூனிச அபாயத்திற்குஎதிராகவும், தேசிய விடுதலைப் போராட்டங்களை திசை திருப்புவதற்கும் அரபு நாடுகளின் இசுலாமிய மதவாதிகளை அமெரிக்கா ஆதரித்தது. இன்று வரை அரபு நாடுகளில் மன்னராட்சி தொடர்வதற்கும் முழு நாடும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஷேக்குகளின் கையில் இருப்பதற்கும் அமெரிக்க ஆதரவு தான் அடிப்படை. இன்று உலகம் முழுவதும் ஜனநாயகம் பற்றி பாடம் நடத்தும் அமெரிக்கா சவுதி நாடுகளில் மட்டும் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியை சந்தர்ப்பவசமாக ஆதரிக்கிறது. இதற்கு நன்றிக்கடனாக ஷேக்குகள் பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் எண்ணெய் தொழில் நடத்துவதும், கிடைக்கும் அபரிதமான பணத்தை இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதும் என பரஸ்பரம் உறவு தொடர்கிறது.

உள்நாட்டில் எல்லாப் பிற்போக்குத்தனங்களையும் அமல் படுத்தும் ஷேக்குகள் சொந்த நாட்டு மக்களைச் சுரண்டுவதற்கு இசுலாத்தின் காவலர்களாக நடிக்கின்றனர். மதத்தின் உணர்ச்சியைக் கிளறிவிட்டு தமது செல்வத்தைக் காப்பாற்றும் இந்த ஷேக்குகள் உலகம் முழுவதும் இசுலாமிய மதவாத அமைப்புக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் புரவலர்களாகவும் இருக்கின்றனர். இசுலாமிய மதம் எந்த அளவுக்கு மக்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு இலாபமுண்டு என்பதை இவர்கள் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர். ஷேக்குகளின் கையிலிருக்கும் வரை அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை உறிஞ்சலாம் என்பதால் அமெரிக்காவும் இந்த அணுகுமுறையை அனுமதிக்கிறது.

இப்படித்தான் அரபுநாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் கம்யூனிஸ்ட்டுகளும், ஜனநாயக சக்திகளும், தேசிய வாதிகளும் கொடுராமாக ஒடுக்கப்பட்டனர். மக்களின் விடுதலைப் பெருமூச்சை எழுப்பி விட்ட இச்சக்திகள் ஒடுக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடம் மதவாதத்தால் நிரப்பப்பட்டது.

இஸ்லாமிய திவரவாதம் உருவான கதை 
----------------------------------------------------------------------

ஈராக்கில் இப்படித்தான் கம்யூனிஸ்டுகளைக் கொடுரமாக அழித்துவிட்டு சதாம் உசேனின் பாத் கட்சி ஆட்சிக்கு வந்தது. வளைகுடா நாடுகளில் ஈராக்கை ஒரு வட்டார அடியாளாக உருவாக்கும் பொருட்டு அமெரிக்கா சதாம் உசேனை எல்லா வகையிலும் ஆதரித்தது. அதே காலத்தில் ஈரானில் ஷா மன்னனது சர்வாதிகார ஆட்சியையும் அமெரிக்கா ஆதரித்தது. மற்ற கட்சிகளெல்லாம் பிராந்தியத்தில் தடைசெய்யப்பட்டதால் அமெரிக்க எதிர்ப்புக்கும் இசுலாமிய மதம் தான் பயன்படும் என்பதை கொமெனி புரிந்து கொண்டார். அப்படித்தான் ஈரானில் ஷா ஆட்சி தூக்கியெறியப்பட்டு கொமெனியின் தலைமையில் இசுலாமிய மதவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். இதனால் கொமெனியின் ஈரானைத் தாக்கி அழிக்க சதாம் உசேனை அமெரிக்கா பயன்படுத்தியது. அவருக்கு ஆயுத உதவியை அபரிதமாக வழங்கி ஈராக்- ஈரான் போரை அமெரிக்கா துவக்கியது. இருதரப்பிலும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட இந்தப் போர் சில ஆண்டுகள் நீடித்தது. 

அமெரிக்கா வழங்கிய ரசாயன வாயுவின் மூலம் பல ஈரானிய வீரர்கள் கொடுரமாகக் கொல்லப்பட்டதெல்லாம் பின்னாளில் அம்பலமாயின. அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட இசுலாமிய மதவாதம் ஈரானில் மட்டும் அமெரிக்காவை எதிர்ப்பதாகக் கருக்கொள்ள ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் இசுரேல் உருவாக்கப்பட்டது. பின்னாளில் யூதவெறி இசுரேல் அரசால் பாலஸ்தீன மக்கள் அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக மாறினர். மத்திய கிழக்கில் இசுரேலை ஒரு வலிமையான அடியாளாக உருவாக்குதற்கு தேவையான எல்லா உதவிகளையும் அமெரிக்கா அன்றும் செய்தது. இன்றும் செய்து வருகிறது. 

ஆரம்பத்தில் தமது தாயகத்திற்காக போராடத்துவங்கிய பாலஸ்தீன மக்களின் போராட்டத்தில் மதம் இருக்கவில்லை. பின்னாளில் துரோகமிழைத்த யாசர் அராபத்தின் பி.எல்.ஓ இயக்கம்கூட மதச்சார்பற்ற இயக்கமாகத்தான் அன்று போராடியது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை மதச்சார்பானதாக மாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயன்று வந்தது.

பாலஸ்தீன், ஈரான் இரண்டு நாடுகளிலும் மக்கள் மதத்தின் துணை கொண்டு அமெரிக்காவை எதிர்த்து வந்தாலும் மொத்தத்தில் இசுலாமிய மக்கள் மதத்தின் பால் கட்டுண்டு கிடப்பது அமெரிக்காவுக்கு சாதகமாகத்தான் இருந்த்து. மதத்தின் பெயரால் நடத்தப்படும் தேசிய விடுதலைப் போரட்டங்களையெல்லாம் தனிமைப் படுத்தி முடக்கவும், அதே மதம் பயன்படுகிறது என்பதால் மொத்தத்தில் அமெரிக்காவிற்கு இந்த மதவாத அணுகுமுறை ஆதாயமாகவே இருந்தது. அரபு ஷேக்குகளுடன் ஒரு புறமும், மறுபுறம் இசுரேல் எனவும் அமெரிக்காவின் மத்தியக் கிழக்கு கொள்கை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் சோவியத் யூனியன் என்ற சமூக ஏகாதிபத்தியம் ( சொல்லில் சோசலிசம், செயலில் ஏகாதிபத்தியம் ) 1979 இல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. அமெரிக்கா, சோவியத்யூனியன் இரண்டு நாடுகளும் அன்று கெடுபிடிப்போரின் உச்சத்தில் இருந்தன. உலக மேலாதிக்கத்திற்காக மறைவுக் கெடுபிடிப் போர்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டன. அன்று உலக நாடுகள் எந்தப் பிரச்சினையென்றாலும் இரண்டில் ஒன்றை சார்ந்து இருக்குமளவுக்கு பிரிந்திருந்தன. 

இப்படி ஆப்கானில் போலிக் கம்யூனிசம் நஜிபுல்லாவின் தலைமையில் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா சோவியத் யூனியனை அங்கிருந்து விரட்டுவதற்கு முயற்சிகளை ஆரம்பித்தது. பின்னர் 1989இல் சோவியத் யூனியன் ஆப்கானிலிருந்து வெளியேறும் வரை அமெரிக்கா தன் முயற்சிகளை விடவில்லை.

ஆப்கானில் நாத்திகர்களும் சாத்தானின் வாரிசுகளுமாகிய கம்யூனிஸ்ட்டுகள் ஆக்கிரமித்திருப்பதாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அமெரிக்கா அவர்களை விரட்டுவதற்கு புனிதப்போர் துவங்குமாறு இசுலாமிய மதவாதிகளை அணிதிரட்ட ஆரம்பித்தது. இன்றைக்கு அமெரிக்காவை எதிர்த்து புனிதப்போர் நடத்தும் பயங்கரவாதிகள் இப்படித்தான் தோற்றுவிக்கப்பட்டனர். முஜாகிதீன்களுக்கான ஆயத உதவி முதல் பணம் வரை எல்லாம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாயின. அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளின் ஆசிய வானொலிச் சேவைகள் இந்தப் புனிதப் போருக்கான மதப்பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டன. இசுலாமிய நாடுகளிலிருந்து போராளிகள் மதத்தைக் காப்பாற்றுவதற்கென்றே இறக்குமதி செய்யப்பட்டனர். இப்படித்தான் பின்னாளில் அல்கைய்தா ஆரம்பித்த பின்லேடன் சவுதியிலிருந்து ஆப்கானுக்கு இடம்பெயர்ந்தார்.

இதற்கான மையமாக பாக்கிஸ்தான் பயன்படுத்தப்பட்டது. பாக்கிஸ்தானின் எல்லா மாநிலங்களிலும் அமெரிக்கா அளித்த பிச்சைக்காசின் உதவியோடு நூற்றுக்கணக்கான மதரசாக்கள் திறக்கப்பட்டன. டாலரின் தயவில் குர்ஆன் வியந்தோதப்பட்டது. இந்த மதரசாக்களின் மூலம் ஆயிரக்கணக்கான முஜாகிதீன்கள் உருவாக்கப்பட்டு ஆப்கானுக்கு அனுப்பப்பட்டனர். இந்த வேலைகளை பாக்கின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமெரிக்காவின் ஆணைக்கேற்ப ஒருங்கிணைத்தது. இந்த அடியாள் வேலைக்காகவே பாக்கின் இராணுவ சர்வாதிகார ஆட்சிகளை அமெரிக்கா முழுமனதுடன் ஆதரித்தது. இன்றைக்கும் பாக்கின் ஜனநாயக அரசாங்கம் உண்மையான அதிகாரமின்றி பொம்மை ஆட்சி நடத்துமளவுக்கு இராணுவமும், உளவுத் துறையும் சூத்திரதாரிகளாக இருக்கின்றனர் என்றால் அதற்குக் காரணம் அமெரிக்கவின் ஆசிதான்.

பின்னர் ஆப்கானில் சில ஆயிரம் வீரர்களை பலிகொடுத்து சோவியத் யூனியன் தன் படைகளை விலக்கிக் கொண்டது. ஆதரவின்றி தத்தளித்த நஜிபுல்லா முஜாகிதீன்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். போலி கம்யூனிஸ்டுகளின் ஆட்சியிலிருந்த ஆப்கானில் கல்வி, பெண்ணுரிமை, போன்ற நலத்திட்டங்களெல்லாம் அமல்படுத்தப்பட்ட போது அவை இசுலாத்திற்கு விரோதமென அமெரிக்காவால் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 

இதன் விளைவாக கடுங்கோட்பாட்டுவாதிகளான தாலிபான்கள் அமெரிக்க ஆசியுடன் களத்தில் இறங்கினர். ஆப்கானில் இத்தகைய முட்டாள் மதவாதிகள் ஆட்சியிலிருப்பது தனக்குப் பல விதங்களில் உதவியாக இருக்குமென எதிர்பார்த்த அமெரிக்காவும் இதற்குத் துணைபுரிந்தது. மேலும் மத்திய ஆசியாவின் கனிம வளத்தை குறிப்பாக எண்ணெய் எரிவாயுவை குழாய் மூலம் ஆப்கான், பாக் வழியாக துறைமுகங்களுக்கு கொண்டு செல்லும் தேவையை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் உணர்ந்திருந்தன. அந்த வகையில் ஆப்கானின் இருப்பிடம் செயல்தந்திர ரீதீயாக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது.

ஆப்கானில் புகுந்த தாலிபான்கள் நஜிபுல்லாவைக் கொன்று தெருவில் தொங்கவிட்டனர். காட்டுமிரண்டித்தனமான ஒழுங்குகளெல்லாம் இசுலாத்தின் பெயரில் அமல்படுத்தப்பட்டன. பர்தா அணியாத பெண்கள், கல்வி கற்ற பெண்கள், எல்லோருக்கும் கல்லடி கிடைத்தது. புரதான பெருமை வாய்ந்த புத்தர் சிலையும் இடிக்கப்பட்டது. அப்போதெல்லாம் அமெரிக்கா தாலிபானை கைவிடவில்லை என்பது இங்கே முக்கியம்.தாலிபானின் ஆட்சியை உலகநாடுகள் அங்கீகரிக்கவில்லையெனினும் அமெரிக்காவின் கூட்டாளிகளான சவுதி, பாக்கிஸ்தான் நாடுகள் மட்டும் அங்கீகரித்தன. இயற்கை எரிவாயுக் குழாய் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக தாலிபான் பிரதிநிதிகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு அழைத்து வந்தன. ஆரம்பத்தில் முஜாகிதீன்களின் வருவாய்க்காக கஞ்சா உற்பத்தியை பெரும் பரப்பளவில் பயிரிடுவதற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனம் உதவியிருந்தது. ஏழை நாடான ஆப்கானில் தாலிபானின் முக்கிய வருவாயாக கஞ்சா உற்பத்தி திகழ்ந்தது. இதை மேற்குலகின் சந்தைக்கு கொண்டு செல்லத் தேவையான வழிகளையும் சி.ஐ.ஏ ஏற்படுத்திக் கொடுத்தது.

இக்காலத்தில் ருமைலா எண்ணெய் வயலின்மூலம் தனது எண்ணெய் வளத்தை குவைத் நாடு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் உதவியோடு ஆக்கிரமிக்க முயன்றதால் சினமடைந்த சதாம் உசேன் குவைத் மீது போர் தொடுத்தார். தான் வளர்த்த ஒரு சர்வாதிகாரி தனக்கே எதிராகத் திரும்பியதைக் கண்ட அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்தது. சதாம் உசேனைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஒரு பொம்மை ஆட்சியைக் கொண்டு வர அமெரிக்கா முடிவு எடுத்தது. ஏற்கனவே பாலஸ்தீன், ஈரான் பிரச்சினைகளில் இருந்த இசுலாத்தின் அமெரிக்க வெறுப்பு இப்போது ஈராக்கிற்கும் பரவியது. தான் உரமிட்டு வளர்த்த இசுலாமிய மதவாதம் தனக்கே எமனாகத் திரும்புமென அமெரிக்கா அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை. சில அசட்டு மதவாதிகள் என்ன செய்துவிட முடியுமென மேற்குலகம் மெத்தனமாக இருந்தது.

சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த வரை அமெரிக்காவால் தோற்றுவித்து வளர்க்கப்பட்ட இசுலாமிய மதவாதம் அமெரிக்காவை இரட்சகனாகக் கருதிவந்தது. சோவியத் யூனியன் வெளியேறிய பிறகு இருவரும் தமது நலன்களால் பிரிவுகொள்ளும் சூழ்நிலை வந்தது. முதல் வளைகுடாப் போரும், இசுரேலின் அடாவடித்தனங்களும் பொதுவில் இசுலாமிய மக்களை சினம் கொள்ள வைத்தது. இந்தப் பின்னணியில்தான் பின்லேடனின் அல்கைதா தனது முன்னாள் ஏஜமானனை எதிரியாக அறிவித்து 90களின் பிற்பகுதியில் சில நாடுகளிலிருந்த அமெரிக்க தூதரகங்களை குண்டுவைத்துத் தாக்கியது. அமெரிக்காவின் கட்டளையோடு பாக்கின் பங்களிப்போடு உருவான தாலிபான்களும் அல்கைதா பக்கம் சாயத்துவங்கினர்.

சன்னி பிரிவின் கடுங்கோட்பாட்டுவாதிகளான தாலிபான்களை பாக்கின் இராணுவ அதிகார வர்க்கம் ஆதரித்து வந்தாலும் அமெரிக்காவை எதிரியாகக் கருதும் தாலிபான்களை மாற்ற முடியாமல் திணற ஆரம்பித்தது.மதவாதிகளை அறிவுப்பூர்வமாக ஏமாற்ற முடியாமலும், உணர்ச்சிப் பூர்வமாக சமாளிக்க முடியாமலும் இருந்த நேரத்தில்தான் 2001 உலக வர்த்தக மையம் அல்கைதாவால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் அமெரிக்காவிற்கு தெரியாமல் நடந்திருக்க முடியுமா என்பதையும் உத்திரவாதம் செய்ய முடியாது. இதை தெரிந்து வேண்டுமென்றே நடக்கவிட்டு மக்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவுடன் ஆப்கானையும், ஈராக்கையும் ஆக்கிரமிப்பதற்கென்றே கூட இது அனுமதிக்கப்பட்டிருக்கலாம். 

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என அறிவித்து இருநாடுகளையும் பின்னாளில் ஆக்கிரமித்த அமெரிக்கா இன்றுவரை இராணுவ பலத்தை அந்நாடுகளில் அதிகரித்து வருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இன்னொரு கோணத்தில் டாலரால் ஊட்டி வளர்க்கப்பட்ட இசுலாமியத் தீவிரவாதம் தனது தர்க்கபூர்வமான வளர்ச்சியில் சுயேச்சையாக அமெரிக்காவை எதிர்க்கும் இயல்பான நிலைக்கு வந்ததையும் மறுக்க முடியாது. அதே சமயம் இந்த இரண்டு முரண்பட்ட நிலைகளையும் அமெரிக்கா தனது நலனுக்காக பயன்படுத்துகிறது என்பதுதான் எல்லவற்றையும் விட முக்கியமானது.

பாகிஸ்தானின் இன்றைய நிலை 
-------------------------------------------------------

இந்தியாவைப் போல அல்லது இன்னமும் அதிகமாக ஏழை நாடாக இருக்கும் பாக்கிஸ்தான் அமெரிக்காவின் சூதாட்டத்தில் ஏராளமாக இழந்திருக்கிறது. முதல்பலி ஜனநாயகம். பாக்கின் இராணுவ சர்வாதிகாரிகளை அமெரிக்கா நிபந்தனையின்றி ஆதரித்தற்கும் ஆப்கான் பிரச்சினை ஒரு முக்கியமான காரணமாகும். மேலும் முன்னர் இந்திரா காந்தி காலம் வரை இந்தியா சோவியத் முகாமில் இருந்ததால் அமெரிக்கா தனது இயல்பான கூட்டாளியாக பாக்கை மாற்றிவந்தது. சோவியத் ஆக்கிரமிப்பு இந்த உறவை உறுதி செய்தது. இதற்குப் பொருத்தமாக இராணுவ சர்வாதிகாரம் பாக்கில் நிலை கொண்டது. இராணுவ அதிகார வர்க்கமே பாக்கில் சொத்துக்களையும், தொழில்களையும் கையில் வைத்திருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான தேசபக்த உணர்ச்சியில் மக்களை மூழ்கடித்துவிட்டு இந்த இராணுவ சர்வாதிகாரிகள் செல்வத்தில் திளைத்தார்கள். பின்னர் முஜாகிதீன்களுக்காக மதரசாக்கள் ஆரம்பிக்கப்பட்டதும் இந்த ஏழை நாட்டின் மக்கள் மதவாத வெறிக்கும் பலியாகினர். இதற்கு முன்னர் இசுலாத்தில் மதவாதம் மட்டுமே இருந்தது என்றால் சி.ஐ.ஏ தயவில் உருவாக்கப்பட்ட இந்த மதரசாக்கள் இசுலாமிய கடுங்கோட்பாட்டு வாதத்தை முதன்முறையாக உருவாக்கின.

தாலிபான் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த மதரசாக்களுக்கான அமெரிக்க, சவுதி புரவலர்கள் கையை விரித்தாலும் மதவாதம் வீறு கொண்டு எழும் வண்ணம் ஈராக், செசன்யா, காஷ்மீர், பாலஸ்தீனம், லெபனான் என பல தீர்க்க முடியாத பிரச்சினைகள், ஏகாதிபத்தியங்களால் தீர்வு தடை செய்யப்பட்டிருக்கும் பிரச்சினைகள் உதவி செய்தன. மேலும் பாக்கின் ஐ.எஸ்.ஐ உளவுத் துறை தனது அமெரிக்கா எஜமானின் உதவியோடு இந்த வேலைகளை இதுவரை செய்து வந்தவர்கள் இப்போது அதே வேலைகளுக்கு எதிராக செய்ய வேண்டுமெனும்போது பிரச்சினை வருகிறது. ஐ.எஸ்.ஐ அமைப்பில் இப்பொது அமெரிக்க ஆதரவு, தாலிபான்-அல்கைதா ஆதரவு, அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட காஷ்மீர் அமைப்பு ஆதரவு என பல குழுக்கள் பல போக்குகள் இருக்கின்றன. இராணுவமும் அதே மனநிலையில்தான் இருக்கிறது. ஆப்கான் பாக் எல்லையில் அமெரிக்காவின் கட்டளைக்கேற்ப இசுலாமிய தீவிரவாதிகளுக்கெதிராக போரிடும் பாக் இராணுவம் இதுவரை 2000 வீரர்களை இழந்திருக்கிறது. இந்தப் போரை தொடரும் மனநிலையில் துருப்புக்கள் இல்லை என்பதும் முக்கியம். பாக்கின் சிவில் அரசாங்கம் அமெரிக்காவின் கட்டளையை முழுமனதுடன் ஆதரித்தாலும் இராணுவமும், உளவுத் துறை அமைப்பும் அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் இன்று பாக்கிஸ்தான் யார் கட்டுப்பாட்லும் இல்லை என்று சொன்னால் மிகையல்ல.

மதவாதத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட நாட்டில் இன்று அதே மதவாதத்தை எதிர்க்கவேண்டுமென்றால் எப்படிச் செய்வது? பாக்கின் ஆளும்வர்க்கம் அமெரிக்காவின் அடிவருடி என்பதால் அவர்களையும் இந்த மதத் தீவிரவாதிகள் தாக்கத்தான் செய்கிறார்கள். பெனாசிர் புட்டோ முதல் பலரும் அதில் பலியாயிருக்கிறார்கள். ஜூலை 2007 முதல் இன்று வரை பாக்கில் நடந்த நூற்றுக்கணக்கான தற்கொலைத் தாக்குதலில் 1200பேர் இறந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்தியாவை விட இசுலாமிய பயங்கரவாதத்தால் அதிகம் பேரை பலி கொடுத்திருப்பது பாக்கிஸ்தான்தான். இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் லஷ்கர் இ தொய்பா பாக்கிலும் தடை செய்யப்பட்ட இயக்கம்தான். இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்ளும் மசூரின் ஜெய்ஷி முகம்மது இயக்கம் பாக்கிலும் ஆட்சியாளர்களைக் குறிவைத்து பல தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறது. 

இன்று இந்தியா பாக் மீது போர் தொடுக்க வேண்டுமென சில தேசபக்தர்கள்வலியுறுத்துகிறார்கள். பாக்கிலிருக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளும் அப்படித்தான் விரும்புகிறார்கள். அப்படி ஒரு போர் வரும் பட்சத்தில் இருநாட்டு மக்களும் அடையப்போகும் அழிவிற்கு முன்னால் இது ஒரு அணு ஆயுத யுத்தமாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இன்று பாக்கிலிருக்கும் அணு ஆயுதத்தின் மீது யாருக்கு கட்டுப்பாடு இருக்கிறது என்பதை அறுதியிட முடியாது. எனவே பாக்கிஸ்தானை போரிலிருந்து தவிர்ப்பதற்கு யாரையும் விட இந்தியாவுக்குத்தான் அவசியம் அதிகமிருக்கிறது. 

இரு நாட்டு தேசபக்தி வெறியை கிளறி விட்டு இருநாடுகளுக்கும் ஆயுதம் விற்று இலாபம் பார்த்திருக்கும் அமெரிக்காவும் இத்தகைய போர் அபாயத்தை கட்டுப்படுத்தும் வழியை யோசிப்பதை விட அதனால் கிடைக்கும் ஆதாயத்தையே முதன்மையாக வைத்து செயல்படுகிறது. இந்தியாவின் பதட்டத்தை தணிப்பதும், பாக்கை கட்டுப்படுத்துவதும் அவர்கள் இதன் பொருட்டே செய்கிறார்கள். இந்த குழப்பமான நிலையை அமெரிக்க எதிர்ப்பிற்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதே இசுலாமிய தீவிரவாதிகளின் நிலை.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home