23 April 2013

கூடா நட்பு கேடாய் முடியும்!


கூடா நட்பு கேடாய் முடியும்!





இஸ்ரேல் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு இல்லாத நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு, அப்பாவி குழந்தைகளை குறிவைத்து கொலை செய்வதில் வல்லவர்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய வரும் நிவாரண குழுக்களை சர்வதேச எல்லையில் வைத்து தாக்குபவர்கள் என பல விரும்பத்தகாத சிறப்புகளை கொண்ட நாடு. இந்த நாடு உருவாகிய விதமும் அதனை பாதுகாக்க இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளின் கடும் கண்டனத்தை சந்தித்து வருகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் மத்திய ஆசியாவின் கேன்சர் தான் இஸ்ரேல்.

ஃபலஸ்தீனியர்களுக்கு ஆதரவான நிலையைதான் இந்தியா பெரும்பாலும் எடுத்து வந்துள்ளது. இன்றும் ஃபலஸ்தீனியர்களுக்கான இந்தியாவின் உதவிகள் தொடரத்தான் செய்கின்றன. 1992 வரை இஸ்ரேலுடன் இந்தியா எவ்வித தூதரக உறவுகளையும் கொண்டிருக்கவில்லை. நரசிம்மராவ் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தி கொண்டது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பாஜக இதனை வலுப்படுத்தியது. பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இதனை தொடர்கிறது.

விவசாயம், பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு என பல துறைகளிலும் இரு நாடுகளுக்குமான உறவு வலுப்பெற்று வருகிறது. இஸ்ரேல் பயன்படுத்தி வரும் நவீன விஞ்ஞான முறைகள் தான் அந்நாட்டுடன் தாங்கள் நெருங்கிய உறவு வைத்திருக்க காரணம் என்று நமது அதிகாரிகள் பெரும்பாலும் கூறி வருகின்றனர். இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இராணுவ தளவாடங்கள் விற்பனையையும் தாண்டி தற்போது ஆராய்ச்சி துறையிலும் சேர்ந்து செயல்பட இரு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.

இத்துடன் இஸ்ரேலுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்கும் இந்தியா முயற்சித்து வருகிறது. 1992ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையேயான வியாபாரம் இருநூறு மில்லியன் டாலர்களாக இருந்தது. சென்ற வருடம் இது ஐந்து பில்லியன் டாலர் என்ற இலக்கை அடைந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் வர்த்தக தொகை இன்னும் அதிகரிக்கும்.

இந்தியாவின் முக்கியமான கூட்டாளி இஸ்ரேல்என்று இஸ்ரேலுக்கான இந்தியாவின் தூதர் நவ்தேஜ் சர்னா சமீபத்தில் கூறினார். உறவை மேலும் வலுப்படுத்த வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் தற்போது இஸ்ரேலுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு செல்லும் முதல் வெளியுறவு துறை அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 2000ல் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இஸ்ரேலுக்கு பயணத்தை மேற்கொண்டார். தூதரக உறவுகள் ஏற்பட்டு இருபது ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் இருநாடுகளுக்குமான உறவு இன்னும் பலமாகும் என்பதைதான் இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் நட்பு கொள்வதில் என்ன தவறு? இதனை ஏன் நாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டும்? முதலில் நாம் கூறிய வரிகளை மீண்டும் ஒரு முறை வாசித்தால் இதற்கான பதில் கிடைத்து விடும். அத்துடன் இஸ்ரேலுடன் நாம் கொண்டுள்ள உறவுக்கு நாம் அனுபவித்து வரும் பலனை தான் சமீப ஆண்டுகளில் கண்டு வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டு வெடிப்புகள் அதிக அளவில் நடைபெற்று வருவதை நாம் கண்டுவருகிறோம். இதற்கு காரணமானவர்களில் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பை வைத்து கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் முனைப்புடன் இருந்துள்ளனர் என்பதை விசாரணை தெரியப்படுத்துகிறது.(இவர்களின் குருநாதர்கள் 1970-களின் இறுதியிலேயே இஸ்ரேலுடன் கள்ள தொடர்பு கொண்டவர்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது). நாட்டின் ஸ்திரதன்மையையும் முன்னேற்றத்தையும் குலைப்பதற்கு இவர்கள் இஸ்ரேலுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர் என்பதைதான் இது காட்டுகிறது.

அத்துடன் நவம்பர் 2008 மும்பையில் நடைபெற்ற தாக்குதல்கள் நமக்கு ஏற்படுத்தும் சந்தேகங்கள். இதில் சந்தேகத்திற்கு இடமாகியுள்ள இஸ்ரேலின் தொடர்பு இன்னும் முழுமையாக விசாரிக்கப்படவில்லை. மும்பை நகரில் யூதர்கள் குடியிருக்கும் பகுதியில் நடைபெறும் விஷயங்கள் மர்மங்கள் நிறைந்ததாக இருப்பதை அப்பகுதி மக்களே கூறியுள்ளனர். நாட்டின் பாதுகாப்பை விலையாக கொடுத்து தான் இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பங்களை வாங்க வேண்டும் என்பதை மனசாட்சியுள்ள எந்த இந்தியனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

நமது நாட்டின் நிலை இதுவென்றால், அண்டை நாடான பாகிஸ்தானும் இதற்கு விதிவிலக்கில்லாமல் செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே அமெரிக்காவுடன் கொண்ட நட்பிற்கான விலையை அந்நாடு கொடுத்து வருகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை, தலைவர்களுக்கு கண்ணியம் இல்லை என்ற நிலைதான் அங்கு உள்ளது. இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் சமீபத்தில் கூறிய கருத்துக்களை கேட்டு சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை. இந்தியாவை எதிர்கொள்ள இஸ்ரேலுடன் நாம் நெருங்கிய உறவை கொள்ள வேண்டும்என்பதுதான் அவரது வாதம். அறிவுடைய எந்த மனிதனும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான். பாகிஸ்தானை அழிவின் பாதைக்கு இழுத்து செல்லும் வாக்காகவே இது நமக்கு படுகிறது. ஒருவரையொருவர் பகைத்து கொள்வதற்கு இவர்கள் இஸ்ரேலை நாடிச் செல்வது ஆச்சர்யமாக உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இஸ்ரேலுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளன. தங்களுக்கு சாதகமான ஆட்சியாளர்களை வைத்து கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் போட்டு வந்த ஆட்டங்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஆட்சிக்கு வந்திருப்பது இஸ்ரேலின் தூக்கத்தை கெடுத்துள்ளது. முபாரக்கை போன்று இவர்கள் தனக்கு தலையசைக்க மாட்டார்கள் என்பதை இஸ்ரேல் நன்றாகவே புரிந்துள்ளது.மற்ற நாடுகளிலும் இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியுடனான இஸ்ரேலின் உறவு ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். தங்கள் சகாக்களின் நிலையை கண்ட அரபுலக ஆட்சியாளர்கள் தற்போது சற்று அடக்கியே வாசிக்கின்றனர்.

தற்போது இஸ்ரேல் தனித்து விடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் தனக்கு நண்பர்களும் இல்லை, ஜால்ராக்களும் இல்லை. தன்னுடைய ஏகபோக அதிகாரத்தை இனியும் நடத்த முடியாது என்பதை அறிந்துள்ள இஸ்ரேல் புதிய நெருக்கமான உறவுகளை தேட ஆரம்பித்துள்ளது. இவர்களின் இந்த சூழ்ச்சிக்குதான் இந்தியாவும் பாகிஸ்தானும் பலியாகும் நிலையில் உள்ளன. இஸ்ரேல் உடனான உறவு துணை கண்டத்தில் அமைதியற்ற நிலையைதான் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வளரும் நாடுகள் பட்டியலில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் தற்போது இஸ்ரேலுக்கு எதிராகவே உள்ளன. இந்நிலையில் இஸ்ரேலுடன் நாம் உறவு கொண்டால் அது இந்நாடுகளுடான நமது உறவிலும் விரிசலை ஏற்படுத்தும்.

ஆக இஸ்ரேல் என்பது தற்போது மூழ்கி கொண்டிருக்கும் ஒரு கப்பல். அதில் நமது நாடு ஏறுவதை நம்மால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஆட்சியாளர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் பொதுமக்களும் இதில் உஷாராக இருக்க வேண்டும்.

அஷ்ரஃப் 



நன்றி : ஏர்வை ரியாஸ்.
















0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home