22 April 2013

காது கேளாதவர்களும் செல்போனை பயன் படுத்துவதற்கான கருவியைக் கண்டு பிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள் !!


காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.

இவர்களுக்கு இந்த ஐடியா எப்படி வந்தது?

எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு சரியாகக் காது கேட்காது. அவருக்காக நாம் ஒரு கருவி கண்டுபிடித்தால் என்ன என்ற யோசனையின் விளைவே இந்தக் கருவிஎன்கிற சிவனேஷ், “அரைமனசோட அவர் என் கருவியைப் பயன்படுத்தி செல்போன்ல பேசுனப்ப அவர் முகத்துல வெளிப்பட்ட சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லைஎன்கின்றபோது, சிவனேஷின் முகத்தில் சாதித்த பெருமிதம் அலையாடியது.

எப்படி இயங்குகிறது இந்தக் கருவி?

ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான் இருக்கிறது சங்கதி. ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப் பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு.

பொதுவாகவே மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான பல் இதற்கு உதவி செய்கிறது. ஹெட்போனில் இருக்கும் நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பல்லில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள் கேட்க உதவி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் பேசுவதைக் கேட்பதோடல் லாமல் பாடலையும் கேட்க முடியும்என்று சிவனேஷ் தங்கள் கருவியின் செயல்பாட்டைப் பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும் கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

பேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கருவியை எந்த செல்போனோடு வேண்டுமானாலும் இணைத்துப் பயன்படுத்த முடியும். தற்பொழுது பேடண்ட் வாங்க முயற்சித்து வருகிறார்கள். அது கிடைத்து, தொழிற் சாலையில் தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான விலைக்கே வழங்க முடியும் என்கிறார்கள்.

இவர்களின் செயலை பாராட்டுவோம்….


அஷ்ரஃப் 




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home