4 August 2013

இந்தியா வறுமை தேசமா?



ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் மொத்த எண்ணிக்கையை விட, இந்தியாவின் 8 மாநிலங்களில் அதிக ஏழைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 41 கோடி பேர் கொடிய





வறுமையில் வாடுகின்றனர்.
இந்தியாவில் பீகார், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

.நா ஆதரவு பெற்ற 'ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சி' என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரம் சொல்லும் அதிர வைக்கும் உண்மை இது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வறுமை தொடர்பான அறிக்கையை இந்தியத் திட்டக் கமிஷன் வெளியிட்டது. அதன்படி கிராமப்புறங்களில் நாள் ஒன்றுக்கு 22.50 ரூபாய்க்கு கீழ் சம்பாதிப்பவர்களும், நகர்ப்புறத்தில் 28.50 க்கு கீழ் சம்பாதிப்பவர்களும் வறுமையில் உள்ளவர்கள் என சொன்னது அந்த அறிக்கை.

ஒவ்வொரு நாளும் விலைவாசி விஷம் போல் உயர்ந்து வரும் நிலையில் இந்த தொகையை வைத்து என்ன செய்ய முடியும்? இப்படி ‘25 ரூபாய்க்கு கீழ் சம்பாதிப்பவன்தான் ஏழைஎன்று வரையறுப்பதன் மூலம், இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதுதான் இவர்களின் நோக்கம்.

ஆனால் நடைமுறையில் இந்த காசை வைத்து ஒரு வேளை உணவைக்  கூட சாப்பிட முடியாது. இந்தியாவில் தினமும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் 32 கோடி பேர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உலக அளவில் தினமும் 14,900 குழந்தைகள் இறக்கின்றனர். அதில் இந்தியாவின் பங்கு தினமும் 7,000 குழந்தைகள்.
ஐந்து வயதுக்குட்பட்ட 47 சதவிகித இந்திய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது. ஆண்டுக்கு 25 லட்சம் பேர் இந்தியாவில் பசி, பட்டினியால் மடிந்து போகிறார்கள். இதை மத்திய உணவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பே சொல்கிறது. உண்மை நிலவரம் இதைவிட அதிகமாகவே இருக்கும்.

பட்டினியில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்திய மக்கள் நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் சோக அத்தியாயங்களாகவே இருக்கின்றன. மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தில் ஏழெட்டு பேர் இருந்தால் அதில் இருவர் மட்டும் சாப்பிடுவார்கள். இருக்கும் உணவை அந்த எட்டு பேருக்கும் சமமாகப் பிரித்துக்கொடுத்தால், ஒருவருக்கும் வயிறு நிரம்பாதுஇதனால்  இருவருக்கு மட்டும் திருப்தியாக  உணவு பரிமாறப்படும்.
சாப்பிட்ட அந்த இரண்டு பேரும் வெளியில் சென்று உற்சாகத்துடன் வேலைசெய்து இரவு பணத்தோடு வருவார்கள். அடுத்த நாள் இன்னும் இரண்டு பேருக்குச் சாப்பாடு. அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். நேற்று வயிறு முழுக்கச் சாப்பிட்டவர்கள் இன்று வேலைக்குப் போகவேண்டியிருக்காது என்பதால் அவர்கள் பட்டினி கிடப்பார்கள். இப்படி ஷிப்ட் முறையில் பட்டினிக் கிடக்க வேண்டிய அவலம் மகாராஷ்டிராவின் பெரும்பாலான குடும்பங்களில் நடக்கிறது.

ராஜஸ்தானில் உணவில்லா குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இன்றைக்கு யார் பட்டினி இருப்பது என்று முடிவு செய்து, தங்களுக்கிடையே சுழற்சி முறையில் மாற்றிக் கொள்கிறார்கள். இப்படி ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்  போன்ற மாநிலங்களும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஒடிசாவின் கிராமப்புறங்களில் 43% பேரும், பீகார் கிராமப்புறங்களில் 41% பேரும் வறுமையில் உள்ளனர்.

நாட்டில் ஒருபக்கம் ஒரு வேளை உணவுக்காக ஏழை, எளிய மக்கள் தவித்துக்கொண்டிருக்கையில், மறுபுறம் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 6.6 மில்லியன் டன் கோதுமை அழுகி சேதமடையும் அபாயம் இருப்பதாக பதைபதைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே உணவு தானியங்களை இருப்பு வைக்க இந்திய உணவுக்கிடங்குகளில் போதுமான இடமில்லாமல், திறந்தவெளியில் அவற்றைக் கொட்டிவைப்பதால் பல லட்சக்கணக்கான டன் உணவு தானியங்கள் வீணாகிறது. வீணாகும் உணவு தானியங்களை நலிந்த பிரிவினருக்கு இலவசமாகக் கொடுக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் கண்டிப்போடு கூறியும், மத்திய அரசு அதில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. தானியங்களைப் பாதுகாப்பதிலும் முனைப்பு காட்டவில்லை.

அரசுக்  கிடங்குகளில் வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உணவுத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 257 மில்லியன் டன் உணவு தானியங்களை இந்தியா அறுவடை செய்துள்ளது. எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு இந்த உணவு தானியங்கள் போதுமானது தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினால்தான் இந்தியா சுபிட்சம் அடைகிறது என்ற சித்தாந்தத்தைக் குறைந்தபட்ச சாத்தியங்களோடாவது ஏற்றுக்கொள்ள முடியும்.

சிறப்பு உரைகளில் மட்டும் 'வறுமையை ஒழிப்போம்' என்று முழக்கமிடும் மன்மோகன்சிங், அதற்குப்பிறகு மௌன குருவாக மட்டுமே இருக்கிறார். இப்படியே போனால் இன்னொரு ஹைதியாகவோ, சோமாலியாகவாவோ இந்தியா மாறிவிடக்கூடும் அபாயம் உள்ளது.

இந்த உண்மையை முகத்திலறைந்தார்போல், "உலகிலேயே ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியாதான்!" என சொல்கிறது உலக வங்கியின் ஆய்வறிக்கை. உலக நாடுகளில் 1.2 பில்லியன் ஏழைகள் வாழ்வதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை, இவர்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகை இந்தியாவில் வாழ்வதாகக் கூறியுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் ஏழ்மையை ஒழிக்கும் திட்டத்திற்காக உலக வங்கி நடத்திய ஆய்வின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவுடன் வல்லரசுக்கு போட்டி போடும்  இந்தியா, வறுமையை ஒழிக்கும் திட்டத்திலும் கவனம் செலுத்தினால்தான் 'வல்லரசு' க்கான வாசலையாவது நெருங்க முடியும்!



- .நாகப்பன்
********************************************************************************************



திருச்செந்தூர் முருகன் கோயில் மாத வருமானம் ரூ.1.75 கோடியை தாண்டியது... இதே விகடனில் வந்துள்ள செய்தி இது. அது ஒரு சின்ன கோவில், அப்படியானால் பெரிய கோவில்களின் வருமானங்களை யோசித்துக் கொள்ளலாம். இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது? அந்த காலத்தில் கோவில்கள் எல்லாம் மக்களுக்கு உதவும் இடங்களாக இருந்தன. இப்பொழுதோ கொள்ளைக்கூடங்களாக மாறிவிட்டன. எதற்கு எடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்லுவதை விட்டுவிட்டு (எந்த அரசாங்கம் வந்தாலும் வறுமை ஒழியாது என்பது கடந்த அறுபது ஆண்டு என்ன நடந்தது என்பதில் இருந்து தெரியும்.. காங்கிரஸ், ஜனதா, பிஜேபி, கம்யூனிஸ்ட், எல்லாம் ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள் தான்... சிலர் ஜாதி பாசத்தால் காவிகளுக்கு காவடி எடுக்கின்றனர், அவ்வளவு தான்) சமூக அளவில் மாறுதல்கள் கொண்டு வர வேண்டும். மக்கள் மன நிலை மாற வேண்டும். கோவில்களுக்கு கொட்டுவதை விட சிலருக்கு உணவு அளிப்பது மேல் என எண்ண வேண்டும். அப்பொழுது தான் நாடு உருப்பட ஆரம்பிக்கும்.
****************************************************************************


இந்தியாவில் இருந்த வளங்களை முடிந்த வரை இங்கிலாந்துகாரார்கள் கொள்ளையடித்தனர். மீதம் உள்ளவறை ####லியர்கள் கொள்ளையடிக்கின்றனர், இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் மத்திய ஆளும் கட்சிக்கு பெரும் பணம் லஞ்சமாக செல்கிறது.

உத்திரபிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சுதந்திரம் அடைந்தது முதல் பெரும்பான்மையாக காங்கிரஸ் ஆட்சிதான் நடந்தது. காங்கிரஸ் கட்சி திறமையில்லாத ஒரு ஊழல் கட்சி என்பதை "ஜால்ராக்கள் " ஏன் புரிந்து கொள்ள முன்வருதில்லை?

இந்தியா அணைத்து வளங்களையும் காங்கிரஸ்காரார்கள் தங்களை வளப்படுத்தி வலம் வருகின்றனர். அதிலும் வேட்டி கட்டிய அமைச்சரின் தொழில் உலக புகழ் பெற்றது. துவக்கத்தில் ஒரு மொழி பெயர்ப்பாளராக காங்கிரசிற்கு சென்றவர், ஆனால் இன்று....

இந்தியாவில் "காங்கிரஸ்" என்ற வறுமையை ஒழித்தால் இந்தியா வளமும்,வலிமையும், பெற்று வல்லரசாவதோடு ஒன்று பட்ட இந்தியாவை நாம் மீண்டும் கட்டி எழுப்ப முடியும்.
****************************************************************************************

ஏதோ காங்கிரஸால் தான் வறுமை வந்துவிட்ட மாதிரியும் காவிகள் வந்தால் வறுமை ஒரே நாளில் ஒழிந்துவிடும் போலவும் சிலர் பேசுவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. ஜனதா, பிஜேபி முதலான கட்சிகள் ஆட்சி செய்யவில்லையா அல்லது அப்பொழுது எல்லாம் நாடு செல்வ செழிப்பில் மிதந்ததா? இந்தியாவின் வறுமைக்கு முதல் காரணம் மக்கள் தொகை. அதை கட்டுப் படுத்தாமல் எதுவும் முன்னேற வழி இல்லை. மோடி வந்தால் மட்டும் மோடி வித்தை காட்டி வறுமை ஒழியாது, அது தான் நிதர்சனமான உண்மை. யோசிக்கத் தெரிந்த, அறிவுள்ள எல்லோருக்கும் புரியும் அது.
******************************************************************************

இந்தியா மனித வளம் அதிகம் உள்ள நாடு. மக்கள் கடுமையாக உழைக்க ரெடியாக இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்த ஒரு நல்ல புரஜெக்ட் லீடர் இல்லாததுதான் குறை. படித்தவர்களே திட்டம் தீட்டும் பொது எங்க எப்படி காசு அடிக்கலாம் என்று திட்டம் போடுவதுதான் எல்லாவற்றுக்கும் காரணம். வருடத்துக்கு 365 நாளில் 100 நாள் மக்கள் சாப்பிட்டால் போதும் என்று சூப்பர் திட்டம் போடும் அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு வல்லரசு கனவு காண்பது முட்டாள்தனம். இந்த திட்டத்தால் நாட்டில் விவசாய வேலை செய்ய ஆள் கிடைக்காமல்
விவசாயம் அழிந்ததுதான் அவ்ட்புட். விவசாயம் அழிந்ததால் வறுமை பின்னி எடுக்கிறது.

தமிழகம் என்னமோ சிங்கப்பூர் ஆகிவிட்டது போல் டவுன் பசங்க கருத்து போடுறாங்க. தமிழகத்தின் உள்ளார நல்ல போய் பாருங்க


***********************************************************************************

என்ன வளம் இல்லை இந்திய திரு நாட்டில்? பற்றாக் குறையோ, இல்லாக் குறையோ இல்லை. பகிராக் குறையே இந்த கோர வறுமைக்கு காரணம். இந்தியாவில் சுயநலம், பேராசை, இதனால், லஞ்சம், ஊழல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
*****************************************************************************


இந்தியா என்பது ஏதோ மூன்றாம் நாடு அல்ல அது நாம் வாழும் புண்ணிய பூமி. இந்தியாவில் ஏழ்மை உள்ளது ஆனால் அதை சரி செய்ய நாம் என்ன செய்தோம் ? எல்லாவற்றையும் அரசு மட்டுமே செய்ய வேண்டும் என்று நாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்து கொண்டு அது நொல்லை இது சொட்டை என்று வெட்டி கதை பேசிக்கொண்டு இருக்கிறோம்.

பீகார், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள மிக முக்கிய பிரச்சனை சரியான அரசு அமையவில்லை, மக்களால் தேர்ந்து எடுக்கபட்ட லல்லு போன்றவர்கள் தவறான அரசியல் செய்து மக்களுக்கு நன்மை செய்யவில்லை.

அதே போல் தென் மாநிலங்கள் தமிழகம், கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் வளர்ச்சி என்பது காமராஜர், எம்.ஜி.ஆர், அச்சுத மேனன் என்று பல அரசியல் தலைவர்களும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு கல்விக்கு முக்கியத்தும் அளித்து செயல்பட்டார்கள், அதே போல் மக்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி அளித்தார்கள், அரசும், அரசியல் தலைவர்களும், மக்களும் சேர்ந்து செயல்பட்டதால் இன்று தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் நல்ல நிலையில் வளர்ந்த மாநிலமாக நம் நாட்டிற்கே பெருமை சேர்க்கிறது.

அதே போல் வட மாநிலத்திலும் வறுமை ஒழிப்பு என்பது அரசு, அரசியல் தலைவர்கள், மக்கள் என்று அனைத்து தரப்பினரும் ஒன்று இணைய வேண்டும் அப்படி ஒன்றிணைத்து செயல்பட்டால் நிச்சயம் வறுமையை ஒழிக்கலாம்



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home