4 October 2013

கர்நாடகாவை கலக்கும் மினரல் வாட்டர் ஏ.டி.எம்.!



'தவிக்குதே.. தவிக்குதே...தொடரில் குறிப்பிட்டுள்ள, ஒரு ரூபாய்க்கு பத்து லிட்டர் மினரல் வாட்டர் வழங்கும் கர்நாடக மாநிலம் கனகபுரா தொகுதிக்கு சென்றோம்! 
பெங்களூருவில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் ராம்நகர் மாவட்டத்தில் இருக்கிறது கனகபுரா. இந்தத் தொகுதிக்கு உட்பட்ட பஞ்சாயத்துக்களில் மினரல் வாட்டர் ஏ.டி.எம். அமைத்திருக்கிறார்கள். ஒரு ரூபாய் நாணயத்தை இயந்திரத்துக்குள் போட்டால் 10 லிட்டர் மினரல் வாட் டர் வருகிறது. வாட்டரை பிடித்துச் செல்ல 20 லிட்டர் கேன் இலவசமாக வழங்கப்படுகிறது. ஏ.டி.எம். வாட்டர் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் டி.கே.எஸ். பிரதர்ஸ்.
யார் இந்த டி.கே.எஸ். பிரதர்ஸ்?
கனகபுரா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான டி.கே.சிவக்குமார், அவரது தம்பியும் பெங்களூரு புறநகர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.சுரேஷ் ஆகிய இருவரையும்தான் டி.கே.எஸ். பிரதர்ஸ் என்று அழைக்கிறார்கள். இவர்களது டி.கே.எஸ். டிரஸ்ட் மூலமாகத்தான் மினரல் வாட்டர் ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கனகபுரா தாலுக்கா, கல்லஹள்ளி என்ற ஊரில் மினரல் வாட்டர் ஏ.டி.எம். மையத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த சீத்தம்மா என்பவரிடம் பேசினோம். ''எங்க ஊருல எந்த இடத்தில் போர் போட்டாலும் உப்புத் தண்ணீர்தான் வரும். குடிக்கவே முடியாது. மழைக் காலங்களில் மழைநீரைப் பிடித்து சேகரித்துக்கூட குடித்திருக்கிறோம். இதனால் எங்கள் குழந்தைகள் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவார்கள். இந்த மையம் அமைத்த பிறகு நாங்க நல்ல தண்ணீர் குடிக்கிறோம். எங்க வீட்டில் மொத்தம் ஆறு பேர் இருக்கோம். ஒரு நாளைக்கு 2 ரூபாய்க்கு 20 லிட்டர் தண்ணீர் பிடித்தால் போதும். பக்கத்தில் உள்ள கல்லஹள்ளி, திகடரஹள்ளி, தாமசந்ரா என பல கிராமங்களில் இருந்து இங்கே வந்து தண்ணீர் பிடித்துச் செல்கிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் 20 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவுக்கு கேன் இலவசமாக கொடுத்திருக்காங்க. அவங்க நல்லா இருக்கணும்'' என்று வாழ்த்தினார்.
கிருஷ்ணப்பா என்பவரிடம் பேசி னோம். ''குடிநீரால்தான் பல வியா திகள் ஏற்படுகின்றன. நல்ல தண்ணீர் கிடைப்பதால் எங்க கிராம மக்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இந்த இயந்திரத்தைப் பராமரிக்க ஒருவரை நியமித்து இருக்கின்றனர். 24 மணிநேரமும் தண்ணீர் கிடைக்கிறது. தண்ணீர் பிடிக்க கூட்டமோ, அடிதடியோ கிடையாது. எல்லோருக்கும் தேவைக்கு ஏற்ப தண்ணீர் கிடைக்கிறது. இதிலிருந்து வீணாகும் தண்ணீரைச் சேமிக்க நிலத் தடிநீர் தொட்டிகள் கட்டி இருக்கிறார்கள். இதனால், எங்கள் ஊரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது'' என்று சந்தோஷமாகக் கூறுகிறார்.
வாட்டர் ஏ.டி.எம். அமைத்த  டி.கே.எஸ். பிரதர்ஸ்களில் ஒருவரான கனகபுரா தொகுதியின் எம்.எல்.ஏ. சிவக்குமாரிடம் பேசினோம். ''என்னுடைய நண்பர் ஒருவர் சமூக ஆர்வலர். அவர் தனது ஊரில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார். அதைப்பார்த்து நானும் என் தம்பியிடம் இது சம்பந்தமாகப் பேசினேன். எங்கள் தொகுதி மக்களுக்கு இதுபோன்ற நல்ல குடிநீர் வழங்கலாம் என திட்டமிட்டோம். ஒரு பிளான்ட் உருவாக்க 12 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரை செலவானது. தண்ணீரை காசுக்கு விற்பது எங்கள் நோக்கம் அல்ல. எந்தப் பொருளையும் இலவசமாகக் கொடுத்தால் மதிப்பு இருக்காது. அதனால்தான் 1 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தோம். என்னுடைய கனகபுரா தொகுதியில் 15 இடங்களில் இந்த ஏ.டி.எம். மையங்களைத் திறந்திருக்கிறோம். விரைவில், தொகுதி முழுக்க உள்ள கிராமங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறோம். கர்நாடக மாநிலம் முழுக்கவே இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக சட்டசபையிலும் பேசி இருக்கிறேன். நிச்சயம் நல்லது நடக்கும்'' என்றார் நம்பிக்கையோடு.
அவருடைய சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.சுரேஷ், ''எங்கள் தொகுதி மட்டுமல்ல... இந்தியா முழுக்கவே இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் என் ஆசை. இதைப்பற்றி நான் நாடாளுமன்றத்திலும் பேச இருக்கிறேன். தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பதைவிட சிறந்த மக்கள் தொண்டு எதுவும் இருக்க முடியாது. அதை நாங்கள் சரியாகச் செய்துவருகிறோம்'' என்றார்.
சேவையாக இருக்கும் வரை எல்லாம் சரிதான்... இதையே வியாபாரமாக மாற்றாமல் இருந்தால் நல்லது!
வீ.கே.ரமேஷ்

-ஜூனியர் விகடனிலிருந்து...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home