எச்.ஐ.வி பரவலை முழுமையாக தடுக்க மருந்து
மனிதர்களிடம் எயிட்ஸ் நோயை
தோற்றுவிக்கும் எச்ஐவி வைரஸ் தொற்றை முற்றாக அழிக்கவல்ல சாத்தியக்கூற்றை தாங்கள்
கண்டறிந்திருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
மனிதர்களின் எச்ஐவி தொற்றுக்கு சமமான தொற்று
குரங்குகளிலும் காணப்படுகிறது. குரங்குகளிடம் காணப்படும் இந்த தொற்றை
எஸ்ஐவி தொற்று என்று மருத்துவ விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். மனிதர்களின் எச்ஐவி தொற்றைவிட
நூறுமடங்கு அதிக வீரியம் மிக்க வைரஸ் குரங்குகளிடம் இந்த எஸ்ஐவி தொற்றை
ஏற்படுத்துகிறது.
இப்படியான எஸ்ஐவி வைரஸ் தொற்றுக்கு
உள்ளான குரங்குகளிடம்
நடத்திய ஆய்வில், அந்த
குரங்குகளின் எஸ்ஐவி தொற்றை முழுமையாக இல்லாமல் செய்ய முடியும்
என்று அமெரிக்காவில் இருக்கும் ஓரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக
விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
நேச்சர் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும்
இந்த ஆய்வின் முடிவுகளின்படி, எஸ்ஐவி
வைரஸ் தொற்றுக்குள்ளான
16 குரங்குகளுக்கு இந்த
விஞ்ஞானிகள் தங்களின் புதிய தடுப்பு மருந்தை அளித்தார்கள். அதில்
ஒன்பது குரங்குகளிடம் இருந்த எஸ்ஐவி தொற்று முற்றாக இல்லாமல்
போய்விட்டதாகவும் மற்ற ஏழு குரங்குகளிடம் தங்களின் தடுப்பு மருந்து செயற்படவில்லை என்றும்
கூறும் இந்த விஞ்ஞானிகள், இதே முறையை
பயன்படுத்தி மனிதர்களின் எச்ஐவி தொற்றுக்கான தடுப்பு மருந்தையும் கண்டுபிடிக்க
முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மருத்துவ பேராசிரியர்
லூயிஸ் பிக்கர், குரங்குகளின்
எஸ்ஐவி தொற்றை முற்றாக குணப்படுத்தி விட்டோம் என்று உறுதியாக
மார்தட்டிக்கொள்ள முடியாது என்றாலும், இன்றைய நிலையில், பாதிக்கப்பட்ட 16 குரங்குகளில் ஒன்பது குரங்குகளின்
உடலில் எஸ்ஐவி வைரஸ் தொற்று முற்றாக இல்லாமல் போய்விட்டது என்றே எல்லாவிதமான மருத்துவ
பரிசோதனைகளும் தெரிவிக்கின்றன. இது ஒரு முக்கிய, நம்பிக்கையளிக்கக்கூடிய சாதனை என்றார்.
குரங்குகளை பாதிக்கும் இந்த எஸ்ஐவி
வைரஸ் மனிதர்களை
தாக்கும் எச்ஐவி வைரஸைவிட நூறுமடங்கு தீவிரமானது. இதன் பாதிப்புக்குள்ளான குரங்குகள் இரண்டே
ஆண்டுகளில் இறந்துவிடும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இவற்றால் உயிர்
பிழைக்க முடியாது.
இப்படிப்பட்ட மோசமான வைரஸை குணப்படுத்துவதற்கு
மருத்துவ ஆய்வாளர்கள் வேறொரு வைரஸின் உதவியைத் தான் நாடினார்கள் என்பது சுவாரஸ்யமான தகவல்.
பாலின நோய்களை தோற்றுவிக்கும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சிஎம்வி என்று
மருத்துவர்களால் அழைக்கப்படும் வைரஸை எடுத்துக்கொண்ட ஆய்வாளர்கள், இந்த வைரஸின் தீவிரமான பரவும் தன்மையை மட்டும்
விட்டுவிட்டு, அதன்
நோய் உண்டாக்கும் தன்மையை நீக்கிவிட்டார்கள்.
விளைவு, இந்த குறிப்பிட்ட தடுப்பு மருந்தை குரங்குகளின்
உடலில் செலுத்திய உடன், இந்த
சிஎம்வி வைரஸ்கள் குரங்குகளின் உடலில் தொற்றியிருந்த எஸ்ஐவி வைரஸை
தேடிப்போய் தாக்கி அழித்தன.
இந்த சிஎம்வி வைரஸானது, ராணுவ வீரனைப் போல
உடலின் ஒவ்வொரு
செல்லிலும் சென்று அங்கிருக்கும் எஸ் ஐ வி வைரஸை தாக்கி அழிக்கும் வேலையை செய்தது என்கிறார்
பேராசிரியர் பிக்கர்.
அதே சமயம், இந்த சிஎம்வி வைரஸ் சில குரங்குகளின்
உடலில் ஏன் செயற்படவில்லை என்பதற்கான விடை தங்களிடம் இல்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
எஸ்ஐவிக்கும் சிஎம்விக்கும் இடையிலான போரில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு சமயம்
சிஎம்வி வைரஸ் வெற்றி பெறுகிறது, அதேசமயம்
மூன்றில் ஒரு சமயம் எஸ்ஐவி வைரஸ் வெற்றி பெறுகிறது என்கிறார்
அவர்.
தமது ஆய்வின் முடிவுகள் எச் ஐ வி தொற்றை முற்றாக
குணப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதாக கூறும் பேராசிரியர்
பிக்கர், குரங்குகளிடம்
தாங்கள் கையாண்ட
அதே அணுகுமுறையை மனிதர்களின் எச் ஐ வி வைரஸ் தொற்றை குணப்படுத்தவும் கையாள முடியும் என்றும்
நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கான அமெரிக்க அரசின் ஒப்புதல் கிடைக்கும்
பட்சத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளின் மனிதர்களின் எச்ஐவி தொற்றுக்கான தடுப்பு மருந்தின்
பரிசோதனைகள் நடக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home