28 October 2013

நாம் சாப்பிடும் உணவு எப்போது விசம் ஆகிறது….



சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்…?
பதில்                சொல்கிறார்                 டயட்டீஷியன் புவனேஸ்வரி.

இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிறது.

புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும்.

மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும். கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது.

அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள். எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.

ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது, சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக்கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள்


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home