26 October 2013

போலீஸ் பக்ருதீன் விவகாரம் இடியாப்ப சிக்கலை ஏற்படுத்துகிறது - கருணாநிதியின் இரண்டாம் கட்ட அறிவிப்பு....!!



கேள்வி :- போலீஸ் பக்ருதீன் கைது விவகாரம் பெரிதாகிக் கொண்டு போகிறதே?

பதில்:- அதைப்பற்றி நான் முன்பே விரிவாக எழுதியிருக்கிறேன். கொலைக் குற்றவாளிகள் போலீஸ் பக்ருதீன் குழுவினரா? அல்லது ஏற்கனவே டி.ஜி.பி. அறிக்கையில் தெரிவித்திருந்த நபர்களா? பக்ருதீன் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார் ? கைது செய்த போலீஸ் அதிகாரி யார் ? என்பதற்கான விளக்கங்களையெல்லாம் அரசு தெளிவுபடுத்தவேண்டுமென்று எழுதியிருந்தேன்.

ஆனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களைப் போக்கிடும் வகையில் அரசு அதைப் பற்றி விளக்கமளிக்கவில்லை.

இதற்கிடையே வேலூரில் செய்தியாளர்களிடம் போலீஸ் பக்ருதீன்...

தான் கொலையாளி அல்ல என்றும், அவ்வாறு சொல்லக் காவல் துறையினர் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ. அப்துல் ரகிம் தாக்கல் செய்த மனுவில், பக்ருதீன் தனது நண்பர் என்றும், அவரைப் போலீசார் சுட்டுக் கொன்று விடுவார்களோ என்று அச்சமாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் அவருடைய வழக்கறிஞர் நேற்றையதினம் நீதிமன்றத்தில் வாதாடும்போது, பக்ருதீனின் கைது குறிப்பாணையின் நகலை வேலூர் கோர்ட்டிலிருந்து வாங்கிப் பார்த்ததாகவும், அதில் பக்ருதீனை கைது செய்ததாகக் கூறி, திருவண்ணாமலை சி.பி., சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கே.அண்ணாதுரை கையெழுத்திட்டிருப்பதாகவும், ஆனால் 15-10-2013 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பக்ருதீனைக் கைது செய்த காவல்துறையினரான லெட்சுமணன், ரவீந்திரன் மற்றும் வீரகுமார் ஆகியோருக்கு பரிசு வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அது உண்மையென்றால் வேலூர் நீதிமன்றத்தில் பக்ருதீனை கே. அண்ணாதுரை கைது செய்ததாகக் குறிப்பிடும் குறிப்பாணை தவறானது என்று தெரிய வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பக்ருதீனை எந்த இடத்தில் எப்போது கைது செய்தனர் என்பதை உறுதி செய்வதற்காக அருகிலே உள்ள சாட்சிகளிடம் கையெழுத்து வாங்க வேண்டும்; ஆனால் அப்படிப்பட்ட சாட்சிக் கையெழுத்து எதுவும் கைதுக் குறிப்பாணையில் காணப்படவில்லை என்றும், பக்ருதீனை கைது செய்தது குறித்து அவருடைய தாயாருக்கு தகவலை காவல் துறையினர் அனுப்பியதாகத் தெரிவித்தபோதிலும், அந்தத் தகவலைக் கொடுத்ததற்கான ஆதாரம் எதையும் அரசு தாக்கல் செய்யவில்லை என்றும், ஒருவரைக் கைது செய்யும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு, டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வரையறுத்த விதிகளை மீறி பக்ருதீனைக் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு-மென்றும் அப்துல் ரகிம் அவர்களின் வழக்கறிஞர் கோரியிருக்கிறார்.

வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போலீஸ் பக்ருதீன் கைது விவகாரம் இடியாப்பச் சிக்கலாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஜெயலலிதாவும், காவல்துறைத் தலைவரும் விளக்கமேதும் தராமலிருப்பது விந்தையாக இருக்கிறது!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home