10 November 2013

100க்கு 4 மதிப்பெண் !



ஆசிரியர் தகுதி தேர்வில் 4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற செய்தியை கேட்டு மாணவர்கள்கூட மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த தேர்வுகளில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் பங்கேற்றனர். முதல் தாள் எழுதியவர்களில் 12,596 பேரும் (4.8 சதம்), இரண்டாம் தாள் எழுதியவர்களில் 12,496 பேரும் (3.62 சதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். 100க்கு 60 மதிப்பெண் வாங்கினால் தேர்ச்சி பெறலாம்.

தேர்வில் பங்கேற்றவர்களில் ஆறு லட்சம் பேருக்கு மேல் தமிழக பள்ளிகளில் ஆசிரியராக வேலை செய்ய தகுதியற்றவர்கள் என்ற உண்மை கடுமையாக கசக்கிறது. டிஇடி அல்லது டெட் என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் இந்த தேர்வில் பாஸ் ஆனால்தான் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற முடியும் என்று விதி இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் அதை ஊர்ஜிதம் செய்ததை தொடர்ந்து சென்ற ஆண்டுதான் முதல் தேர்வு நடந்தது. அதில் கலந்து கொண்டவர்களில் வெறும் 1 சதவீதம் பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

வினாக்கள் கடினம், வினாத்தாள் சிக்கல், விடைத்தாள் குழப்பம், நேரமின்மை என புகார்கள் எழுந்ததால் மறு தேர்வுக்கு அரசு ஆணையிட்டது. ஆனாலும் தேர்ச்சி 3 சதவீதத்தை தாண்டவில்லை. அந்த அடிப்படையில் இம்முறை முன்னேற்றம் என்று சிலர் ஆறுதல் கூறலாம். அது கண்துடைப்பு.

தேர்வு எழுதுபவர்களில் சில ஆயிரம் பேரை தவிர மற்றவர்கள் ஏற்கனவே ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர்கள். ஆங்கிலம் வராது என்பதால் தமிழ் படித்து பட்ட(ய)ம் பெற்ற வர்கள் இந்த தேர்வில் ஆங்கில இலக்கண கேள்விகளுக்கு விடையளிக்க நேர்வது தர்ம சங்கடம். அவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் போவதை அவர்களின் மாணவர்களும் கவனிக்கிறார்கள். 4 சதவீதம் தேர்ச்சி என்பதை 100க்கு 4 மதிப்பெண் எடுப்பதோடு ஒப்பிடுவார்கள். அதனால் எழக்கூடிய விமர்சனங்கள் பள்ளி வளாகங்களில் ஆரோக்யமான சூழலை உண்டாக்க உதவாது.

கட்டாயக் கல்வி சட்டத்தால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில், ஆசிரியர்கள் கிடைக்காமல் திண்டாடும் நிலைமை ஏற்படுவது சரியான முரண்பாடு. ஆசிரியர் தகுதி தேர்வு முறையை அரசு மறு ஆய்வு செய்வதை தவிர வேறு வழியில்லை.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home