எது பெஸ்ட்? டீசல் டமாக்கா!
ஏற்கெனவே ஒரு டஜன் கார்கள் போட்டி
போடும் சின்ன ஹேட்ச்பேக் மார்க்கெட்டில்,
மேலும் ஒரு காராக ஹூண்டாயின் கிராண்ட் ஐ10 களம் இறங்கியிருக்கிறது. இது,
போட்டியை இன்னும்
கடினமாக்கியிருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குத்தான் சவாலே தவிர, வாடிக்கையாளர்களுக்கு
இது நல்ல செய்திதான். கார்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதால், தேவைக்கு ஏற்ற சிறந்த காரைத் தேர்ந்தெடுக்கலாம்.
டீசல் கார்களின் விற்பனை
அதிகரித்திருப்பதால், ஹூண்டாயும் கிராண்ட் ஐ10
காரை டீசல் இன்ஜினுடன் களம்
இறக்கியிருக்கிறது.
டீசல் இன்ஜின்கொண்ட கார்தான் அதிக
மைலேஜ் கொடுக்கும். அதனால், டீசல் காரையே வாங்கலாம் என முடிவெடுக்க முடியாது. இட வசதி, ஸ்டைல், அதிக சிறப்பம்சங்கள்
மற்றும் மைலேஜ் என அனைத்தும் சரிசமமாகக் கலந்த கார்தான், சிறந்த காராக இருக்க
முடியும்.
டீசல் இன்ஜின் கொண்ட சின்ன ஹேட்ச்பேக்
கார்களில், தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள கார், ஃபோர்டு ஃபிகோ.
டொயோட்டா எட்டியோஸ் லிவா, பட்ஜெட் காராக இந்த
செக்மென்ட்டில் அதிகம் விற்பனையாகும் கார். அதேபோல்,
மாருதியின் பலங்களோடு மோதும் ரிட்ஸ் காரும், இந்த செக்மென்ட்டில்
அதிகம் விற்பனையாகும் கார்தான். ஆனால்,
இந்த கார்களுடன் ஒப்பிடும்
போது அதிக இட வசதி, அதிக சிறப்பம்சங்கள்,
அதிக மைலேஜ் என விலைக்கேற்ற
மதிப்பு கொண்டதாக கிராண்ட் ஐ10 காரை வடிவமைத்திருப்பதாகச் சொல்கிறது ஹுண்டாய்.
ஹூண்டாய் சொல்வது உண்மையா? எது சிறந்த கார்? 5 - 7 லட்ச
ரூபாய் பட்ஜெட்டில், எந்த டீசல் காரை நம்பி வாங்கலாம்?
ஸ்டைல்
ஸ்டைலாக,
எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக ஒரு
காரை வடிவமைத்துவிட்டாலே,
பாதி மார்க்கெட்டிங் வேலை
முடிந்துவிட்டது என்பதை உணர்ந்துவிட்டது ஹூண்டாய். ஐ10,
ஐ20,
வெர்னா,
எலான்ட்ரா என ஹூண்டாயின் சமீபத்திய கார்களின் வெற்றிக்கு,
முக்கியமான காரணங்களில் ஒன்று, இதன் ஸ்டைல். அதனால்,
கிராண்ட் ஐ10 காரையும் மிகவும்
ஸ்டைலான காராக வடிவமைத்திருக்கிறது
ஹூண்டாய். ஐ10 காருக்கு அண்ணன் போல கொஞ்சம் பெரிய சைஸில் இருக்கிறது கிராண்ட் ஐ10. ஸ்டைலான பின் பக்க விளக்குகள்,
கொஞ்சம் ஸ்போர்ட்டியான கார் போன்ற
தோற்றத்தைத் தருகிறது.
கிராண்ட் ஐ10 காரின்
வெளித்தோற்றத்தோடு ஒப்பிடும்போது
ஃபிகோ,
ரிட்ஸ்,
லிவா ஆகிய மூன்று கார்களுமே கொஞ்சம்
அவுட்-டேட்டட் கார்கள்தான். கடந்த ஆண்டுதான் முன் பக்க கிரில், புதிய பம்ப்பர், ஹெட்லைட் மற்றும் அலாய் வீல்களை ஃபோர்டு மாற்றியிருந்தாலும் முற்றிலும்
புதிய கார் போன்ற தோற்றத்தைத் தரவில்லை ஃபிகோ. மேலும், இது பழைய ஃபியஸ்டா தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் கார்
என்பதால், ஸ்டைலில் பெரிய முன்னேற்றங்கள் இல்லை.
ஸ்டைல் மற்றும் டிசைனில் டொயோட்டா கார்கள்
எப்போதுமே முதல் இடம் பிடித்தது இல்லை. அந்த வரிசையில் எட்டியோஸ்
லிவாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மேலும்,
இது டொயோட்டாவின் தரத்தைவிடவும்
வெகு சுமாராகவே டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும்
ஸ்டைலான பாடி ஸ்கர்ட்ஸ் மற்றும் அலாய் வீல்கூட டீசல் காரின் விலை உயர்ந்த
வேரியன்ட்டில் இல்லை.
கடந்த ஆண்டு ரிட்ஸில் சில மாற்றங்களைச்
செய்ததோடு மட்டுமல்லாமல்,
டீசல் மாடலில் விலை உயர்ந்த
வேரியன்ட்டையும் புதிதாக வெளியிட்டது மாருதி. புதிய ஒன் பீஸ் கிரில், 'வி’ வடிவ பானெட்டுக்கு
மேலே எழும் ஃபெண்டர்கள்,
ஷார்ப் ஹெட்லைட்ஸ் என மாற்றங்கள், ரிட்ஸை முன்பைவிட இன்னும் அழகாக்கியிருக்கிறது.
உள்ளே...
கிராண்ட் ஐ10 காரின் உள்ளே
நுழைந்ததும், போட்டி கார்கள்
உள்பக்கத் தரத்தில் எவ்வளவு
பின்தங்கியிருக்கின்றன என்பது
புரிந்துவிடுகிறது. ஸ்டீயரிங் வீலில்
இருக்கும் லெதர் கவர், 'இது எலான்ட்ரா
காரில் இருக்க வேண்டியதாயிற்றே?’ என்ற எண்ணத்தை
ஏற்படுத்துகிறது. ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல் இருப்பதோடு, அடிக்கடி
பயன்படுத்தும் கன்ட்ரோல்களை இயக்குவதற்கு வசதியாக, பெரிதாக
வடிவமைத்துள்ளனர். டேஷ்போர்டின் மேல் பகுதி கறுப்பு வண்ண பிளாஸ்டிக்கிலும், கீழ்ப் பகுதி பீஜ் வண்ணத்திலும் டிசைன் செய்யப்பட்டிருப்பது, விலை உயர்ந்த கார்
போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஏ.சி கன்ட்ரோல்கள் பார்ப்பதற்கு அழகாக
இருந்தாலும், பயன்படுத்த சுலபமாக இல்லை. டேஷ்போர்டிலேயே இணைந்திருக்கும்
கியர் லீவர் தரத்தில் சிறப்பாக இருப்பதோடு,
இயக்குவதற்கும் சுலபமாக இருக்கிறது.
ஆனால், டேஷ்போர்டு உயரமாக இருக்கிறது. சீட்டுகள் உயரம் குறைவாக
இருப்பது, உயரமானவர்களுக்கே வசதியாக இருக்கும். உயரம் குறைவானவர்களுக்கு, சீட்டை உயர்த்தும் அட்ஜஸ்ட் வசதிகொண்ட மாடல்தான் சரியாக இருக்கும்.
கிராண்ட் ஐ10 காரின் பின்
பக்கத்திலும் இட வசதி அதிகம்.
ஐ10
காரைவிட,
கிராண்ட் ஐ10 காரின் வீல்பேஸ் 40 மிமீ அதிகரிக்கப்பட்டிருப்பதோடு,
கால்களை நீட்டி மடக்கி உட்கார்வதற்கான
இடமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த செக்மென்ட்டிலேயே
முதன்முறையாக இந்த காரில் மட்டும்தான் பின் பக்கமும் ஏ.சி வென்ட்
வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் இருந்து காற்றுதான் வர மறுக்கிறது. அதனால், இது சிறப்பம்சம் என்பதைவிட, 'இதுவும் இருக்கிறது’
என்று சொல்லி ஈர்ப்பதற்காகச் சேர்க்கப்பட்ட அம்சம்போலவே தோன்றுகிறது. பின் பக்கம் மூன்று
பேர் வசதியாக உட்கார முடியாது என்பதோடு,
ஏ.சி வென்ட் மூன்றாவது நபருக்கு மேலும் நெருக்கடியைத் தருகிறது.
பழைய எட்டியோஸ் லிவா காரைவிட இப்போது
புதிய லிவாவில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. காருக்குள் அதிக
இடம் இருப்பதோடு காபி கப்,
தண்ணீர் பாட்டில்கள் வைக்க அதிக இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருக்கைகளும் பயணிப்பதற்கு வசதியாகவே இருக்கின்றன. இருக்கைகளைப் பொறுத்தவரை எட்டியோஸ் லிவாதான்
சொகுசான கார். மேலும், அகலம் 1695 மிமீ என்பதால்,
பின் பக்க இருக்கைகளில் மூன்று பேர் தாராளமாக உட்கார முடியும். ஆனால், எட்டியோஸ் லிவா
காரின் உள்பக்கத்தை இன்ஜினீயரிங் டிசைனர்தான் டிசைன் செய்தாரா என்று சந்தேகப்படும்
அளவுக்கு, ஏகப்பட்ட சிக்கன நடவடிக்கைகள். இதில் ஸ்டீயரிங் வீல் ஆடியோ
கன்ட்ரோல் இல்லை என்பதோடு, பல முக்கிய வசதிகள் மிஸ்ஸிங்!
ஃபிகோவின் உள்பக்கம், வயதாகிப்போனதால்
பொலிவு இழந்துவிட்டது. டேஷ்போர்டு பிளாஸ்டிக் ஸ்ட்ராங்காக இருந்தாலும், விலை உயர்ந்ததாக இல்லை. ஆனால்,
டேஷ்போர்டு பயன்படுத்துவதற்கு மிகவும்
எளிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பின் பக்க இருக்கைகள் அகலமாகவும்
வசதியாகவும் இருந்தாலும், சீட் குஷன் போதுமானதாக இல்லை. மேலும், உயரமானவர்கள் தலையைக் கொஞ்சம் குனிந்தே உட்காரும் அளவுக்குப் பின் பக்க ஹெட் ரூம்
குறைவு. ஏ.சி ஃப்ளோ காருக்குள் அதிகமாக இருப்பதால், கேபின் எப்போதுமே
சில்லென இருக்கிறது. ஆனால்,
ஃபிகோவின் மிகப் பெரிய முக்கியமான குறை, பின்பக்க கதவுகளில் பவர் விண்டோ வசதி இல்லை என்பதுதான்.
டால் பாய் டிசைன் என்பதால், காருக்கு உள்ளே
ஏறுவதும், இறங்குவதும் ரிட்ஸில் ஈஸியாக இருக்கிறது. இரட்டை வண்ண
டேஷ்போர்டு கேபினின் தரத்தை உயர்த்துவதாக இருக்கிறது. கறுப்பு - சிவப்பு கேபின்
பிடிக்கவில்லை என்றால், கறுப்பு - பழுப்பு வண்ண டேஷ்போர்டைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் ரிட்ஸில் உண்டு.
ரிட்ஸில் புதிதாக ஆடியோ சிஸ்டம்
பொருத்தப்பட்டுள்ளது. இதில் யுஎஸ்பி/பென் டிரைவ் இணைக்கும் வசதி உண்டு. ஆனால், ப்ளூடூத் இல்லை. ஸ்டீயரிங் ஆடியோ கன்ட்ரோல்,
சீட்டை உயர்த்தும் அட்ஜஸ்ட், கீ-லெஸ் என்ட்ரி, எலெக்ட்ரிக் மிரர்
அட்ஜஸ்ட் எனக் குறிப்பிடத்தக்க பல சிறப்பம்சங்கள் ரிட்ஸில் உள்ளன.
இருக்கைகள் உயரமாக இருப்பதால், முழுச் சாலையையும் பார்த்து ஓட்டுவதற்கு ஏற்ப டிரைவிங் பொசிஷனைக் கொண்டிருக்கிறது
ரிட்ஸ். ஆனால், இது ஃபிகோ அளவுக்கு இல்லை. ரிட்ஸின் மிகப் பெரிய குறை, இதன் பின்னிருக்கை இட வசதி. பின்னிருக்கைகளில் அமர்பவர்களுக்கு
கால்களை நீட்டி, மடக்கி உட்காரப் போதுமான இடம் இல்லை.
கிராண்ட் ஐ10, லிவா, ஃபிகோ, ரிட்ஸ் என நான்கு கார்களிலுமே ஸ்டீயரிங் வீலை அட்ஜஸ்ட் செய்யும் வசதி இருப்பதோடு, டிரைவர் இருக்கையின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் உள்ளன. ஆனால், எதிலுமே கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி வசதி இல்லை. அனைத்து கார்களிலுமே பென்
டிரைவ் இணைக்கும் வசதி இருக்கின்றன. ஆனால், ரிட்ஸிலும்
லிவாவிலும் ப்ளூ-டூத் வசதி
இல்லை. லிவா, ஃபிகோ, ரிட்ஸ் ஆகிய
கார்களின் விலை உயர்ந்த வேரியன்ட்டில்
ஏபிஎஸ் மற்றும் இரண்டு காற்றுப் பைகள்
ஸ்டாண்டர்டு வசதியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால்,
கிராண்ட் ஐ10 காரின் விலை உயர்ந்த வேரியன்ட்டில்கூட ஏபிஎஸ் வேண்டும் என்றால், ஆப்ஷனல் வசதியாக 4,000 ரூபாய் கொடுத்துத்தான் பெற வேண்டும். டிக்கியைப் பொறுத்தவரை, ஃபிகோ மட்டுமே கொஞ்சம் அதிகமாக 284
லிட்டர் கொள்ளளவுகொண்ட
டிக்கியைக்கொண்டுள்ளது.
இன்ஜின்
கிராண்ட் ஐ10 காரில் இருப்பது
ஹூண்டாயின் சின்ன டீசல் இன்ஜின். 1120 சிசி, 70 bhp சக்திகொண்ட இந்த இன்ஜின்,
3 சிலிண்டர்களைக் கொண்டது. ஹூண்டாய், இதைப் புதிய இன்ஜின்
என்றாலும் ஐ20 காரில் இருக்கும்
அதே இன்ஜினைத்தான் ஒரு சிலிண்டரைக்
குறைத்து கிராண்ட் ஐ10 காரில்
பொருத்தியிருக்கிறது. 3 சிலிண்டர் இன்ஜின்
என்றாலே, மைலேஜ் அதிகமாகக்
கிடைக்கும் அதேசமயத்தில், வேகமாகச்
செல்லும்போது அதிர்வுகளும் அதிகம்
இருக்கும். ஆனால், கிராண்ட் ஐ10 காரில் இன்ஜின்
ஐடிலிங்கில் இருக்கும்போது
இருக்கும் அதிர்வு, வேகம் செல்லச் செல்ல
மறைந்துவிடுகிறது. நகருக்குள்
பயணிக்க,
அதாவது 1,500
- 3,000 ஆர்பிஎம் வரையிலான வேகத்தில் சிறப்பாக இயங்குகிறது. ஆனால்,
4,000 ஆர்பிஎம் மேல் தாண்டிவிட்டால், இன்ஜின் சக்தி போதாமல் திணற ஆரம்பித்துவிடுகிறது. அதிக சக்திகொண்ட காராக இருந்தும் பெர்ஃபாமென்ஸில் பின்தங்கிவிடுகிறது கிராண்ட் ஐ10. வேகப் போட்டியில் 0 - 100 கி.மீ
வேகத்தைக் கடக்க மிகவும் பொறுமையாக 20.25
விநாடிகள் எடுத்துக்கொள்கிறது
கிராண்ட் ஐ10. நகருக்குள் பயணிப்பதற்கு ஏற்ற காராக இதை வடிவமைத்திருப்பதால், நெடுஞ்சாலையில் இதை
வைத்து ஓவர்டேக் வித்தைகள் காட்ட
முடியாது. நகருக்குள் சைலன்ட்டாகப்
பயணிப்பதற்கான கார் இது.
ஆரம்பம் மற்றும் மித வேகத்தில் இன்ஜின்
சிறப்பாகச் செயல்படுவதற்காக,
ஃபிகோவின் இன்ஜினில் சில மாற்றங்களைச்
செய்திருக்கிறது ஃபோர்டு. ஆனால்,
மாற்றங்கள் செய்திருப்பது இன்ஜினின் பெர்ஃபாமென்ஸில் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால், நான்கு கார்களில்
உற்சாகமான ஓட்டுதல் தரம் கொண்ட கார்,
ஃபிகோ மட்டுமே! ஆரம்பத்தில் டர்போ லேக்
இருந்தாலும், சட்டென பிக்-அப் எடுத்துவிடுகிறது. மித வேகமும் சிறப்பாகவே
இருக்கிறது. ஆனால், எல்லா சின்ன டீசல் இன்ஜின்களைப் போலவே, ஃபிகோவிலும் வேகம்
செல்லச் செல்ல இன்ஜினில் பவர் இல்லை. காமென் ரெயில் டீசல் இன்ஜினான
ஃபிகோவின் இன்ஜின்தான் அதிர்வுகள் குறைந்த,
சத்தம் குறைந்த இன்ஜின். அதிரடி வேகம் இல்லை என்பது மட்டுமே ஃபிகோவின் மைனஸ். 0 - 100 கி.மீ
வேகத்தைக் கடக்க, 16.33 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது ஃபோர்டு ஃபிகோ.
பெர்ஃபாமென்ஸ் டெஸ்ட்டில் சர்ப்ரைஸ்
வின்னர் ரிட்ஸ்தான். 0 - 100 கி.மீ வேகத்தை 15.18
விநாடிகளில் கடந்துவிடுகிறது ரிட்ஸ். ஸ்விஃப்ட்டில் இருக்கும் அதே இன்ஜின்தான் ரிட்ஸில்
இருக்கிறது. ஆனால், நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் பயணிக்க சிறப்பான காராக
இருக்கும் இதன் பெர்ஃபாமென்ஸ்,
நகருக்குள் திண்டாடுகிறது. 2,000 ஆர்பிஎம்
வரை டர்போ லேக் அதிகமாக இருப்பதால்,
நகருக்குள் டிராஃபிக் நெருக்கடிகளில்
ஓட்டும்போது மிகவும் கடுப்பான காராக இருக்கிறது ரிட்ஸ். அடிக்கடி கியர்களை
மாற்றி மாற்றி ஓட்டுவது,
ஒரு கட்டத்துக்குள் உடற்பயிற்சி போல்
மாறிவிடுகிறது.
டொயோட்டா எட்டியோஸ் லிவா, கிராண்ட் ஐ10 போலவே சிறந்த சிட்டி கார். பவர் வெளிப்பாடு கிராண்ட் ஐ10 காரைவிடவும் சிறப்பாக இருக்கிறது. லிவாவில் கிளட்ச் மற்றும் கியர்பாக்ஸும் ஸ்மூத்தாக
இருப்பதால், நகருக்குள் கியர்களை மாற்றி ஓட்டுவதற்கு ஈஸியாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இன்ஜின் சத்தம் குறைவாக இருந்தாலும், வேகம் செல்லச் செல்ல
சத்தம் அதிகரிக்கிறது. 1364
சிசி திறன்கொண்ட, 4 சிலிண்டர் இன்ஜின்
அதிகபட்சமாக 68 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 0
- 100 கி.மீ வேகத்தை 15.86 விநாடிகளில் தொட்டுவிடுகிறது லிவா.
ஓட்டுதல்
ஹூண்டாயின் பெரிய மைனஸ், ஓட்டுதல் மற்றும்
கையாளுமையில் கோட்டைவிடுவதுதான். வெர்னா,
ஐ20
கார்களைவிடவும் கிராண்ட் ஐ10 காரின் ஓட்டுதல் தரத்தில் முன்னேற்றம் தெரிகிறது. பெரிய மேடு
பள்ளங்களில் ஏறி இறங்கும்போது சஸ்பென்ஷன் தூக்கிப்போடுவதால், அலுங்கல்
குலுங்கல்களை காருக்குள் அதிகமாக உணர முடிகிறது. மேலும், பாடி ரோல் அதாவது
காரை வளைத்துத் திருப்பி ஓட்டும்போது,
காருக்குள் இருப்பவர்களையும் ஒரு
குலுக்கு குலுக்கிவிடுகிறது. ஸ்டீயரிங்கும் ஷார்ப்பாக இல்லை.
லிவாவின் ஓட்டுதல் தரம் ஓ.கே.வாக
இருந்தாலும், மோசமான
சாலைகளில் பயணிக்கும்போது குலுங்க
ஆரம்பித்து விடுகிறது. அதிக வேகத்தில்
பயணிக்கும் போது ஸ்டெபிளிட்டியில்
சிறந்த காராக இருக்கிறது லிவா.
நகருக்குள் வளைத்து நெளித்து
ஓட்டுவதற்கு ஏற்ற ஸ்டீயரிங் இதன் ப்ளஸ்.
டர்னிங் சர்க்கிள் ரேடியஸ் குறைவாக
இருப்பதால், யு-டர்ன் எடுக்க ஈஸியாக
இருக்கிறது.
ஓட்டுதல் மற்றும் கையாளுமையில் ரிட்ஸ்
சிறப்பான கார் இல்லை. ஆனால், கிராண்ட் ஐ10 காரைவிடவும் ரிட்ஸின் ஸ்டீயரிங் ஷார்ப்பாக இருக்கிறது. இதில்,
ஃபிகோதான் மிகச் சிறந்த கார். மேடு
பள்ளங்களை அலுங்கல் குலுங்கல்கள் இல்லாமல் கடப்பதிலும் சரி, ஓட்டுதல் தரத்திலும்
சரி, ஃபிகோதான் வின்னர். ரிவர்ஸ் மற்றும் பார்க்கிங் செய்யும்போது, ஃபிகோவின் ஹைட்ராலிக் ஸ்டீயரிங் கொஞ்சம் ஹெவியாக இருந்தாலும் வேகம்
செல்லச் செல்ல ஸ்டீயரிங்கின் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருக்கிறது. சட்டென காரை
நிறுத்த, பிரேக்கை பலமாக அழுத்தி மிதிக்க வேண்டியிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக சிறந்த ஓட்டுநர் கார் வேண்டும் என்றால்,
அதற்கு ஃபிகோதான் சிறந்த கார்.
மைலேஜ்
3 சிலிண்டர் இன்ஜின் மட்டுமே கொண்ட கிராண்ட் ஐ10தான் மைலேஜில் வின்னர். இது,
நகருக்குள் லிட்டருக்கு 15.4 கி.மீ, நெடுஞ்சாலையில் 19.6 கி.மீ
மைலேஜ் தருகிறது. மாருதி ரிட்ஸ் நகருக்குள் 14.6
கி.மீ,
நெடுஞ்சாலையில் 19.3 கி.மீ
மைலேஜ் தருகிறது. லிவாவுக்கும், ரிட்ஸுக்கும்
நெடுஞ்சாலை மைலேஜில் எந்த மாற்றமும்
இல்லை. ஆனால், நகருக்குள் டொயோட்டா
லிவா லிட்டருக்கு 14.5 கி.மீ
மைலேஜ் தருகிறது. மிகவும் குறைவான மைலேஜ்
தரும் கார் ஃபிகோதான். நகருக்குள் 14.1 கி.மீ, நெடுஞ்சாலையில் 18.5 கி.மீ மைலேஜ் தருகிறது ஃபிகோ.
மைலேஜ் மற்றும்
நம்பகத்தன்மையைப் பார்த்து கார் வாங்கிய
காலம், மலையேறிவிட்டது. ஸ்டைல்,
தேவையோ இல்லையோ... ஆனால், வரிசையாகப் பல அதிரடி
சிறப்பம்சங்கள், பவர்ஃபுல்
இன்ஜின்தான் இப்போது எல்லோரையும்
ஈர்க்கிறது. அதனால், 15 லட்சம் ரூபாய்
காரில் இருக்கும் வசதிகளை எல்லாம் 5 லட்சம் ரூபாய் காரில் கொண்டுவந்துவிட்டார்கள்.
மாருதி ரிட்ஸ், பெர்ஃபாமென்ஸில்
சிறந்த காராக இருக்கிறது. ஆனால்,
பின் பக்க இட வசதி மிகவும் குறைவு
என்பதோடு... ஏபிஎஸ், காற்றுப் பைகள் என அனைத்து வசதிகளும் கொண்ட விலை உயர்ந்த
வேரியன்ட்டின் சென்னை ஆன்-ரோடு விலை 7.70
லட்சம் ரூபாய். விலைக்கு ஏற்ற
மதிப்புள்ள காராக ரிட்ஸ் இல்லை.
புதிய மாற்றங்களுடன் வெளிவந்திருக்கும்
லிவாவில் இட வசதி அதிகம். இருக்கைகள் சொகுசாகவும் வசதியாகவும் இருக்கின்றன.
ஆனால், இதன் சென்னை விலை 7.86 லட்சம். விலைக்கேற்ற தரமான கேபினோடு இந்த கார் வடிவமைக்கப்படவில்லை. மேலும்,
பெட்ரோல் மாடலில் இருக்கும் சிறப்பம்சங்கள்கூட டீசல் மாடலில் மிஸ்ஸிங்.
விற்பனை உயர உயர ஃபோர்டு ஃபிகோவின்
விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இருப்பினும் நான்கு கார்களில் விலை
குறைவான கார் ஃபோர்டு ஃபிகோதான். இதன் சென்னை ஆன்-ரோடு விலை 7.36 லட்ச
ரூபாய். ஓட்டுதல் மற்றும் கையாளுமையில் ஃபிகோதான் பெஸ்ட். காருக்கு உள்ளேயும்
டிக்கியிலும் இடம் அதிகம். ஆனால்,
பின் பக்க பவர் விண்டோ வசதி இல்லை
என்பதோடு, மார்க்கெட்டில் பழைய காராக மாறிவிட்டது ஃபிகோ.
கிராண்ட் ஐ10 கார்தான் இங்கே
வெற்றியாளர். பெர்ஃபாமென்ஸில் பின்தங்கிவிடும் கார் என்றாலும் உள்பக்கத்
தரத்திலும் சிறப்பம்சங்களிலும் முதல் இடத்தில் இருக்கிறது கிராண்ட் ஐ10. நகருக்குள் பயன்படுத்தச் சிறப்பாக இருப்பதோடு, மைலேஜிலும் முன்
நிற்கிறது கிராண்ட் ஐ10. சென்னையில் 7.54 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இது, ஃபிகோவைவிட 18 ஆயிரம் ரூபாய்
அதிகம். ஆனால், கொடுக்கும் விலைக்கு ஏற்ற தரமான கார் கிராண்ட்
ஐ10.
தொகுப்பு: சார்லஸ்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home