எண்ணெய்: தண்ணீரில் கலக்காது ஆனால் அழிக்கும்.
பொடி வைத்திருக்கிறது என்று ஒரு பெரியவர் சொன்னார். ஒரு சமூகமே இப்படி ‘முடியாமல்’ போகும்போதுதான், ஏதாவது விஷ வாயு கசிந்து வெள்ளி விழாவெல்லாம் கொண்டாடிய பிறகும் ‘அந்த ஆளைப் பிடித்து ஜெயிலில் போட்டிருக்க வேண்டுமா, வேண்டாமா’ என்று இன்னும் விவாதித்துக் கொண்டிருப்போம்.
கடந்த வருடங்களில் நாம் திரும்பச் செய்த தப்பு, மெக்ஸிகோ வளைகுடாவில் எண்ணெய்க் கசிவு. பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP) நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருந்த ‘ஆழ்கடல் தொடுவானம்’ என்ற துரப்பண மேடையில் வெடி விபத்து ஏற்பட்டு ஐயாயிரம் அடிக் கடலில் முழுகி விட்டது. 11 பேரைக் காணவில்லை. ஏதோ பைப் புட்டுக்கொண்டு, உள்ளிருந்து தள்ளும் மீத்தேன் வாயுவின் அழுத்தமும் சேர்ந்துகொண்டு, ஒரு நாளைக்கு 60,000 பாரல் எண்ணெய் கடலில் கலக்கிறது. (அடப் பாவிகளா, இங்கே நான் கடைசிச் சொட்டு வரை ஸ்கூட்டரை சாய்த்துச் சாய்த்து உதைத்துக் கொண்டிருக்கிறேனே!)
வளைகுடா கடற்கரையில் மெக்ஸிகோ தேசத்தின் அத்தனை சலவைக்காரிகளும் திரண்டு வந்தாலும் சுத்தம் செய்ய முடியாத எண்ணெய்க் கறை. எத்தனையோ உயிரினங்களின் வீடான சதுப்பு நிலங்கள் நாசம். கரையோர இரால் பண்ணைகள் சேதம். நண்டு நத்தைகள், சிப்பிகள் மரணம். எண்ணெயில் குளித்த பெலிக்கன் பறவைகள் கருகிப் போன போண்டா மாதிரி உட்கார்ந்திருக்கின்றன. எனக்கென்னவோ இந்த விவகாரத்தில் உள்ள பொருளாதார, தொழில் நுட்ப, சுற்றுச்சூழல் கோணங்களை விட, சிந்திய எண்ணையைச் சுற்றி மனிதர்கள் எப்படியெல்லாம் நடனமாடினார்கள் என்பதுதான் சுவாரசியமாக இருக்கிறது. இதில் நாடு மொழிகளைக் கடந்த ஒரு அடிப்படை மனித இயல்பைப் பார்க்க முடிகிறது.
“என் கையில் அதிகாரம் இருந்தால் முதலில் அந்த ஆசாமிக்கு சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பி விட்டுத்தான் மறு வேலை!” என்று பொருமினார் ஒபாமா. பிபியின் தலைவரான டோனி ஹேவார்டைப் பற்றித்தான் இந்த காமெண்ட். உடனே தங்கள் ஜாதிக்காரனை எப்படித் திட்டலாம் என்று பிரிட்டிஷ்காரர்களுக்கு சுருசுருவென்று கோபம் வந்துவிட்டது. “நாங்கள் பிரிட்டிஷ் கம்பெனி என்பதால்தானே இப்படி அனத்துகிறீர்கள்? உங்கள் ஊரில் உள்ள எக்ஸான், என்ரான், கார்பைட் எல்லாருடைய லட்சணமும் தெரியாதா?” என்று பத்திரிகைகள்தோறும் பச்சை மிளகாய்த் தலையங்கம்.
பிபி நிறுவனம் பாதுகாப்பில் சிக்கனம் பிடித்ததுதான் காரணம் என்று மற்ற போட்டிக் கம்பெனிகள் எல்லாம் அதைக் கண்டித்தன. பிறகு நிருபர்கள் தூண்டித் துருவியதில், எல்லோருமே ஒரே குட்டை மட்டைகள்தான் என்பது தெரிந்தது. உதாரணம் : எல்லா எண்ணைய்க் கம்பெனிகளுமே விபத்து நடந்தால் உடனே கூப்பிடுவதற்கென்று ஆழ்கடல் வல்லுநர் ஒருவருடைய போன் நம்பரை அச்சடித்து ஒட்டி வைத்திருக்கிறார்கள். ஒரே பிரச்னை, மேற்படி வல்லுநர் காலமாகி ஐந்து வருடம் ஆகிறது.
பிபியிலும் விபத்துக் காலங்களுக்காக ஒரு பாதுகாப்புக் கையேடு உண்டு. அதில், ஆயில் கொட்டிவிட்டால் உடனே வால்ரஸ் மிருகங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டிருக்கிறது. என்ன இது! மெக்ஸிகோ வளைகுடாவின் மண்டை காய்கிற வெயிலில் வால்ரஸாவது, பெங்குவினாவது ?.. ஏதோ துருவப் பிரதேசத்து எண்ணெய்க் கிணறின் பாதுகாப்புப் புத்தகத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வந்து அலமாரியில் வைத்திருக்கிறார்கள். அது படிக்கப்படவில்லை.
டோனி ஹேவார்ட் பதவி ஏற்ற புதிதில், “என்ன செலவானாலும் பரவாயில்லை; பாதுகாப்பை பலப்படுத்துவதுதான் என் முதல் வேலை” என்று உடைவாளின் மீது சபதம் எடுத்துக்கொண்டுதான் களத்தில் இறங்கினார். பிறகு பிபியின் பொருளாதாரப் பிரச்னைகளையும் தொழில் போட்டிகளையும் பார்த்தவுடன், செலவைக் குறைப்பதுதான் முதல் வேலை என்று கொள்கை மாறிவிட்டது. தொடர்ந்து சிறு சிறு விஷயங்களில் ஐந்தும் பத்துமாக சிக்கனம் பிடிக்கத் தொடங்கி, பாதுகாப்பு ஏற்பாடுகள் காற்றோடு போய், திரும்பத் திரும்பக் கிடைத்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, பிரச்னைகள் மூடி மறைக்கப்பட்டு, கடைசியில் ஒரு நாள் துரப்பண மேடையே எரிந்து ஐயாயிரம் அடிக் கடலில் மூழ்கியது.
முதலில் “இது ரொம்பச் சின்ன விபத்து. கவலையே வேண்டாம்” என்று சாதித்தார்கள். பிறகு கிணற்றிலிருந்து பத்து மைல் நீளம், மூன்று மைல் அகலத்தில் ராட்சச எண்ணை ஊற்று பீச்சி அடிக்க ஆரம்பித்தது. சேற்றையும் சிமெண்ட்டையும் கொட்டித் துளையை அடைக்கப் பார்த்தார்கள். பெரிய டப்பாவைக் கவிழ்த்து மூட முயற்சித்தார்கள். எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டு இரண்டு மாதமாக எண்ணெய் உற்சாகமாகக் கொப்பளிக்கிறது. இனி யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
“அமெரிக்க அரசாங்கம் அங்கே ஒரு அணு குண்டைப் போட்டால் கடலடிப் பாறைகள் உருகிக் கிணறு அடைத்துக் கொள்ளும்” என்று கூட ஒரு ஐடியா வந்தது. அடைத்துக் கொள்வதற்கு பதிலாக ஓட்டை இன்னும் பெரிசாகிவிட்டால் ? பிரிட்டிஷ் பெட்ரோலியம் தன் இமேஜை வளர்த்துக் கொள்வதற்காகக் கடந்த பத்து வருடத்தில் செலவழித்த தொகை அதிகம். தான்தான் சுற்றுச்சூழல் பாதுகாவலன் என்று அறிவித்துக்கொண்டு, கம்பெனி லோகோவையே பச்சை நிறத்தில் ராஜராஜேஸ்வரி சக்கரம் மாதிரி மாற்றிக்கொண்டது.
சொற்ப அளவில் சோலார் செல்கள் நிறுவிவிட்டு, பசுமைப் புரட்சி செய்துவிட்டோம் என்று முழக்கியது. ‘கார்பன் கால் சுவடு’ என்ற சொற்றொடரைப் பிரபலப்படுத்தியதே பிபிதான். இந்த விளம்பரங்களின் பயனாக பிபிக்கு தங்க எஃபி உள்படப் பல பசுமை விருதுகளும், அதன் தலைவருக்கு மகாத்மா பட்டமும் கிடைத்தன. அந்த லாபி செலவையெல்லாம் பாதுகாப்புக்குச் செலவிட்டிருந்தால், இன்றைக்கு வளைகுடா கடற்கரை தன் இயல்பான மரகதப் பச்சையில் ஜொலித்துக் கொண்டிருக்கும்; இப்படி பிளாக் அண்ட் ஒயிட் படமாகியிருக்காது. (மேலும் விரிவாக வாசிக்க
அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home