கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை !
தமிழகத்தின் தலைநகரம் போதையின்
பிடியில் சிக்கியுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. கஞ்சா விற்பனை
தாராளமாக நடைபெறுவதால் பள்ளி, கல்லூரி
மாணவர்கள் எளிதில் போதைக்கு அடிமையாகிவிடுகின்றனர் என்று குற்றம்
சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இன்றைக்கு
மாணவர்களின் கைக்கு எளிதில் போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. இதனாலேயே கல்வி கற்க வேண்டிய கண்மணிகள்
கஞ்சாவின் புகைக்குள் சிக்கி காணாமல் போய்க்கொண்டிருக்கின்றனர்.ஒழுங்காக கற்றுத் தேர்ந்து பெற்றோர்களுக்கு பெயர் சம்பாதித்து தருவதற்கு பதில் ஒயிட்னரை நுகர்ந்து தன்னையே அழித்துக்கொண்டிருக்கின்றனர். அவற்றை தடுக்கவேண்டிய காவல்துறையே கண்டும் காணாமல் இருக்கின்றனர் என்பதும் சமூக ஆர்வலர்களின் புகாராகும்.
சென்னையில் கஞ்சாவுக்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கஞ்சா அதிகமாக விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. முன்பு மறைவாக விற்கப்பட்ட கஞ்சா இப்போது சென்னைக்குள் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது சென்னைக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கிடைக்கும் கஞ்சாவைவிட, ஆந்திரத்தில் இருந்து கொண்டு வரப்படும் கஞ்சா தரமானதாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் அங்கிருந்து கடத்தி வரப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் கஞ்சா தாராளமாக கிடைக்க காரணம் போலீசாரின் கண்டிப்பு இல்லாததே. இதனால்தான் சில பகுதிகளில் கஞ்சா வீடு தேடி வந்து கொடுக்கின்றனராம்.
ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மெரினா கடற்கரை, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகள், மேன்சன்களில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை தேடி வந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறுகின்றனர் குடியிருப்புவாசிகள். இதனால் நாளுக்கு நாள் இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது.
கல்லூரி வளாகங்களுக்குள்ளும் கஞ்சா விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதாக குமுறுகின்றனர் பேராசிரியர்கள். இது தொடர்பாக சிலர் காவல்துறையினரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவேதான் அச்சமின்றி கஞ்சா விற்பனை செய்கின்றனர் சமூக விரோதிகள். கண்துடைப்புக்காக சில விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதும் பேராசிரியர்களின் புகாராகும்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை நகரில் பள்ளிகள், கல்லூரிகள் அருகேயும், உள்ளேயும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சட்டசபையில் பாமக பகிரங்கமாக புகார் கூறியதையடுத்து 50தனிப்படைகள் அமைக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளில் கண்துடைப்புக்காக ரெய்டு நடைபெற்றது. இப்போது ஆட்சி மாறிய உடன் போலீசாரும் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதால் மீண்டும் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சென்னை மட்டுமல்லாது கோவையிலும் கஞ்சாவிற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. கம்பம், பழனி போன்ற பகுதிகளில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, இங்குள்ள மாணவர்களுக்கு சப்ளை செய்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற சோதனையில் கஞ்சாவியாபாரி ஒருவனை கைது செய்தது கோவை போலீஸ்.
கஞ்சாவை பொட்லமாக விற்பனை செய்தால் ரிஸ்க் என்று நினைத்து இப்போது சாக்லேட் வடிவில் பள்ளி, கல்லூர் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
கஞ்சாவை மாவாக அரைத்து அதில் தேவையான இனிப்பு சேர்த்து, கண்கவரும் வண்ணங்களை சேர்த்து அழகிய பேப்பரில் சுற்றி இளைஞர்களை கவருவதற்காகவே இதுபோன்ற போதை சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு சாக்லேட் 100 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த போதை சாக்லேட் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.
பள்ளி மாணவர்களிடையே மலிவான போதைப்பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர் பலவித பொருட்களை நுகர்ந்து போதை ஏற்றிக் கொள்கின்றனர். பள்ளி இடைவேளையின்போது, வெளியே வந்து, மூக்கால் ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு, பள்ளி முடியும் வரை போதையுடன் இருக்கின்றனர்.
இதே போல் நெயில்பாலீஸ், பெயின்ட் போன்றவற்றை நுகர்ந்தும், போதை ஏற்றுகின்றனர்.
இது ஆபத்தான பழக்கம் என்று கூறும் நரம்பியல் நிபுணர்கள், இதில் உள்ள காரீயம். நரம்பு செல்களை பாதிக்கிறது. தொடர்ந்து நுகரும் மாணவர்களுக்கு மூளை, தண்டுவடமும், மனநலமும் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.
பள்ளிக்குப் போகிறார்களா? படிக்கிறார்களா? என்று மட்டும் பார்க்காமல் அவர்களின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. தினசரி ஒரு மணிநேராமாவது பிள்ளைகளுடன் அமர்ந்து பேசவேண்டும். அவர்களின் கவலைகளையும், வருத்தங்களையும் கண்டுபிடித்து ஆறுதல் அளிக்கவேண்டும். அது கிடைக்காமல் போகும் பட்சத்தில்தான் அவர்களின் பாதை போதையை நோக்கி திரும்புகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home