20 January 2014

வாரிசுரிமையை சரிபார்க்காமல் சொத்து வாங்காதீர்கள்!

சொத்தை பார்த்து பார்த்து வாங்கி பாதுகாத்து வந்தாலும் அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் அந்த சொத்துக்கு உரிமை கொண்டாட முடியும். அந்த ஆவணங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அது பிரச்சினைக்கு வழிவகுத்து விடும். அதனால் தான் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. வாரிசுரிமை சான்றிதழ் சரிபார்ப்பு புதிதாக ஒரு சொத்தை வாங்கும்போது மட்டுமல்லாமல் புழக்கத்தில் இருந்து வரும் சொத்துக்குரிய ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும் அந்த சொத்தை விற்பனை செய்ய முன்வருபவர்களுக்கு உள்ள அதிகாரம் பற்றிய அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். முக்கியமாக அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடும் வாரிசுகள் எத்தனை பேர்? அவர்களுக்கு அந்த சொத்தை விற்பனை செய்வதற்கு முழு சம்மதம் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சொத்தை விற்பனை செய்பவருக்கு வாரிசுகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை விசாரிப்பதோடு மட்டுமல்லாமல் அதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு வாரிசுரிமை சான்றிதழ் அவசியம். ஏனென்றால் வாரிசுரிமை சான்றிதழை வைத்து தான் வாரிசுதாரர்களை உறுதிப்படுத்த முடியும். இல்லையென்றால் வாரிசுதாரர்கள் பற்றிய முழு விவரமும் கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. சிக்கல் ஏற்படும் அதாவது சொத்தை விற்பனை செய்பவருக்கு நான்கு மகன்கள் இருக்கலாம். அவர்களில் ஒரு மகன் சிறுவயதிலேயே வீட்டை விட்டு எங்கோ போய் இருக்கலாம். அல்லது குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட விரக்தியில் சொத்து வேண்டாம் என்று சொல்லி விட்டு பிரிந்து போய் இருக்கலாம். அப்படி இருக்கும்போது சொத்தை விற்பனை செய்ய முன்வருபவர்கள், அவர் தான் ஏற்கனவே சொத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விட்டாரே என்று நினைத்து இன்னொரு மகன் பற்றிய விவரத்தை தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். அவர் சிறு வயதிலேயே சென்று இருந்தால் அது பற்றிய விவரம் நாம் விசாரிக்கும் நபர்களுக்கும் தெரியாமல் போய் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் சொத்து வாங்கியவர் வாரிசுரிமை சான்றிதழை பெற்று சரிபார்க்காவிட்டால் இன்னொரு மகன் இருக்கும் தகவல் தெரியாமலேயே போய் விடும். அந்த மகன் என்றாவது ஒருநாள் தனக்கு தந்தை சொத்தில் பங்கு வேண்டும் என்று வந்தால் வாங்கியவருக்கு சிக்கல் ஏற்பட்டு விடும். அனைவரும் கையெழுத்திட வேண்டும் ஆகவே வாரிசுரிமை சான்றிதழை சரி பார்த்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாரிசுகள் அனைவரும் சொத்தை விற்பதற்கு ஆட்சேபனை இல்லை என்று உறுதி அளிக்க வேண்டும். அத்துடன் சொத்து விற்பனை ஆவண பத்திரத்தில் வாரிசுகள் அனைவரும் கையெழுத்திட்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பின்னால் சிக்கல் எழாது. ஒருவேளை சொத்துக்கு உரிமையுடைய வாரிசுகளில் ஒருவர் சிறு வயதிலேயே காணாமல் போய் இருக்கும் விவரம் தெரியவந்தாலும் அவர் இனி வரவே மாட்டார் என்ற நம்பிக்கையில் சொத்தை வாங்கிவிட கூடாது. சொத்தை விற்பனை செய்பவர்கள் அந்த ஒரு வாரிசுதாரர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தால் கோர்ட்டை நாடி அவர் இறந்து விட்டதாக அறிவிக்குமாறு கேட்கலாம். நிதானமாக முடிவு எடுக்க வேண்டும் அப்போது அவர் காணாமல் போனது பற்றிய ஆதாரங்களை சமர்பிக்க வேண்டி இருக்கும். அதற்கு முதலில் போலீஸ் நிலையத்தில் காணாமல் போனது பற்றிய புகார் கொடுத்து, அது பற்றிய விவரத்தை பத்திரிகையில் விளம்பரம் செய்து அதன்பிறகு கோர்ட்டு விசாரித்து அந்த ஒரு வாரிசுதாரர் இறந்து விட்டதாக சான்றிதழ் விவரம் கொடுக்கும் பட்சத்தில் அவர் கையெழுத்து இல்லாமல் சொத்தை விற்கலாம். எனினும் சொத்து விற்கப்பட்ட பிறகு அந்த வாரிசுதாரர் உயிருடன் திரும்பி வந்து சொத்தில் பங்கு கேட்டால் மீண்டும் சிக்கல் உருவாகும். ஆகவே அப்படிப்பட்ட சொத்தை வாங்குவது பற்றி நன்கு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னாளில் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினை உருவாகலாம் என்பதால் முதலிலேயே நிதானமாக முடிவு எடுத்து செயல் படுவதே நல்லது.-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home