***** மறுவிலாதெழுந்த முழுமதி முஹம்மது ரஸூலுல்லாஹ் ...(நபிகளாரின் வாழ்க்கைத் தொடர்...சுருக்கமாக
***** மறுவிலாதெழுந்த முழுமதி
முஹம்மது ரஸூலுல்லாஹ்
...(நபிகளாரின் வாழ்க்கைத்
தொடர்...சுருக்கமாக ) ****
***** எட்டாம் பிறை *** பயணித்தார் ***** நீறு
பூத்த நெருப்பாக இருந்தது மக்கா! இஸ்லாத்தைத் தழுவியவர்கள் எல்லாம் ஈவிரக்கமில்லாமல் வேட்டையாடப்பட்டார்கள்! மக்கத்து குறைஷிகளின் கொலைவெறித் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆரம்பகால முஸ்லிம்கள் அபிசீநியாவுக்குச் சென்றனர். அதன்பிறகு யத்ரிபுக்குப் போனார்கள்.( யத்ரிப் இன்றைய மதீனா)
அதுவும் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் சென்றார்கள். அண்ணல் நபிகளைக் கொலை செய்ய உருவிய வாளோடு சென்று இறையருளால் இதயம் திருந்தி இஸ்லாத்தை ஏற்றவர் உமர்.
உமருக்கும் மக்காவில் இருக்க முடியவில்லை.அவரும் யத்ரிபுக்குப் பயணமானார்...ஆனால் மற்ற முஸ்லிம்களைபோல அல்லாமல் பகலிலேயே புறப்பட்டார்! உமர் ஒரு நாள் காபாவின் முன்னின்று கர்ஜித்தார்! தனது யத்ரிப் பயணத்தை குரைஷிகளுக்கு பறையறிவித்தார்! தாய்க்கு மகனும் தாரத்திற்குக் கணவனும் பிள்ளைக்குத் தகப்பனும் இல்லாமல் போக ஆசைப்படுபவன் தன்னைத் தடுக்கட்டும் என்று அறைகூவல் விடுத்தார்! உமரின் இடியோசையில் நடுநடுங்கிய குறைஷிப் புலிகள் தங்கள் கூடுகளில் ஒளிந்து கொண்டன! மக்காவின் வீதிகளில் வீரத்தை விதைத்தபடி தனி மனித ராணுவமாய் யத்ரிப் போகும் பாதையில் ராஜ நடை நடந்து சென்றார் உமர்! அண்ணல் நபிகளாரும் யத்ரிப் செல்வதற்கான ஆணையை அல்லாஹ்விடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்! " தாருல் நத்வா" மக்காவில் அமைந்திருந்த மைய மண்டபம். நபிகளுக்கு எதிரான சதிகள் தீட்டப்படும் சதி அரங்கம். அர்த்த ராத்திரியில் தூக்கத்தைத் தொலைத்த குறைஷித் தலைவர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை கூட்டியிருந்தனர். அங்கே
... நபிகள் ஊரை விட்டுச் செல்லும் செய்தி வதந்தியாய் பரவி இருந்தது! அபுலஹபும் அபுஜஹலும் ஆத்திர எண்ணெய் பூசிய அக்கினிப் பறவைகளாய் அரங்கத்தில் ஆரோகணித்திருந்தனர்! கூடியிருந்த கூட்டம், "மக்காவைத் தாண்டுவதற்குள் முஹம்மதை மண்ணறைக்குள் தள்ளி விட வேண்டும்" என்று தீர்மானித்தது. "முஹம்மதை கொலை செய்ய ஓரிருவர் வந்தால் ஆகாது..வீட்டுக்கொருவர் வாளோடு வரவேண்டும்..பல நூறு வாட்கள் ஒரு சேர அவர் நெஞ்சில் புக வேண்டும்" என்று குரூரமாக கட்டளையிட்டான் அபுஜஹல். குறைஷிகள் சூழ்ச்சி செய்த பொது ... சூழ்ச்சிகள் செய்வோரை நன்கறிபவன் இறைவனும் ஒரு சூழ்ச்சி செய்தான்! மக்காவை மறந்து விட்டு யத்ரிப் போகும் உத்தரவை அண்ணலுக்கு அனுப்பி வைத்தான்! அண்ணல் .. அலீயை அழைத்தார் அல்லாஹ்வின் ஆணையை உரைத்தார்! அலீ
... அபூதாலிபின் பிள்ளை! அச்சம் என்பது எப்போதும் அவர்க்கில்லை! அண்ணலின் படுக்கை அலீயை ஏற்றுக் கொண்டது! நபிகளின் பச்சைப் போர்வை அவரைப் போர்த்திக் கொண்டது! இரவு நேரங்களில் அயலார் வீடுகளில் அரபிகள் நுழைவதில்லை!அதனால் வைகறைத் தொழுகைக்கு நபிகளார் வாசலைத் திறந்து வரும்போது அவர்களைக் கொன்றுவிட எண்ணம் கொண்டு நபிகள் வீட்டு முற்றத்தில் உருவிய வாட்களோடு காத்திருந்தார்கள் கொடியவர்கள்! மரணம் வாசலில் காத்திருக்கும் வேளையில் நபிகளை யத்ரிபுக்குப் புறப்படச் சொல்லி இறைக் கட்டளை இரங்கி வந்தது! நபிகள் கதவைத் திறந்தார்! கைப்பிடி மண்ணெடுத்து திருமறை வசனங்கள் சில ஒதி ஊதிவிட்டார்! திறந்தவிழி திறந்திருக்க எதிரிகள் பார்க்கும் திறனை இழந்தார்கள்! உண்மையில் ஒளி இருண்டுபோன விழிகளின் நடுவே வெளிச்ச நடை போட்டு வெளியேறியது! தோழர் அபூபக்கரோடு சேர்ந்து பயணம் புறப்பட்ட நபிகள் தவ்ர் குகையில் மூன்று நாட்கள் தங்கி இருந்தார்கள். அண்ணல் சென்ற திசைத் தெரியாமல்... பாவிகள் திக்கெங்கும் திசைகெட்டலைந்தார்கள்! நபிகளைத் தேடி வந்த கொலைக் கூட்டம் தவ்ர் குகைக்கருகிலும் வந்தது! உள்ளே நுழைந்து பார்ப்போம் என்றான் ஒருவன்! அதை செவிமடுத்ததும் அண்ணலைப் பார்த்து அடிக்குரலில் அபூபக்கர் சொன்னார்... " நாமிருவர்தானே இருக்கிறோம்?" நண்பரின் கேள்வி நாயகத்தை நகைக்க வைத்து! நகைப்போடு நாதமாய் வந்தது நபி நாதர் சொல்
! " நாம் இருவரல்ல! மூவர்! நம்மோடு இறைவனும் இருக்கிறான்!" புன்னகையில் அரும்பிய பூமானின் பூவரிகள் அபூபக்கரின் ஈமானை ஆழப்படுத்தியது! நபிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் எதிரிகள் தோல்வியை தழுவிக் கொண்டனர்! நபி பெருமானார் தங்கள் ஐம்பதாவது வயதில் " கஸ்வா" என்னும் ஒட்டகையில் அமர்ந்து தோழர் அபூபக்கரோடு யத்ரிபை நோக்கி தங்களின் "ஹிஜ்ரத்"தை ஆரம்பித்தார்கள்! ***** ஒன்பதாம் பிறை
... இன்ஷா அல்லாஹ் ... நாளை வரும் ***** அபு ஹாஷிமா —-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home