18 February 2014

வால்வோ பஸ்களில் அவசர கால வழிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய விபரம்



வால்வோ பஸ்களில் இருக்கும் அவசர கால வழிகள் மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை பயணிகள் நலனை கருதி கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்(கேஎஸ்ஆர்டிசி) வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வால்வோ பஸ்கள் அடுத்தடுத்து தீ விபத்துக்களில் சிக்கி பல உயிர்களை காவு வாங்கின. இதைத்தொடர்ந்து, தற்போது பயணிகளில் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வால்வோ பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் தெரிந்து கொள்ளும் விதத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை கேஎஸ்ஆர்டிசி வெளியிட்டிருக்கிறது.










அவசர கால வழிகள்
*****************************

வால்வோ பஸ்களில் முக்கிய வழியை தவிர்த்து 6 அவசர கால பாதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வால்வோ பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அடுத்தடுத்து கொடுக்கப்பட்டுள்ளன

எங்கப்பா இருக்கு?
***************************

வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போன்று முக்கிய வழியை தவிர்த்து பக்கவாட்டில் 4 கண்ணாடி ஜன்னல்களில் அவசர வழிகள் உள்ளன. தவிர, மேற்கூரையில் 2 அவசர வழிகள் உள்ளன.

தீயணைப்பு கருவி
**********************************

பஸ்சின் இடது பக்க முன் இருக்கைக்கு முன்பாகவும், கடைசி வரிசை நடு இருக்கையின் கீழேயும் தலா ஒரு தீயணைப்பு உருளைகள் வைக்கப்பட்டுள்ளன.

அவசரத்திற்கு...
************************************

வால்வோ சிங்கிள் ஆக்சில் மற்றும் மல்டி ஆக்சில் பஸ்களில் கண்ணாடி ஜன்னல்களில் அவசர கால வழி குறித்த விபரம் எழுதப்பட்டிருக்கும். அத்துடன் அந்த கண்ணாடி ஜன்னல்களுக்கு அருகிலேயே சுத்தியலும் பொருத்தப்பட்டிருக்கும். அவசர சமயத்தில் சுத்தியலால் கண்ணாடியை உடைத்து கவனமாக வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தியல்
*********************************

அவசர பாதை அமைந்துள்ள கண்ணாடி ஜன்னலுக்கு மேலே சுத்தியல் பொருத்தப்பட்டிருப்பதை காட்டும் படம்

கதவை திறக்க
**********************************

முக்கிய கதவை திறக்கும் சுவிட்ச் டிரைவர் இருக்கையின் முன்புற டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கிறது. அதனை வலது புறம் திருப்பினால் கதவு திறந்து கொள்ளும்.

கூரையிலும் அவசர வழி
************************************

கூரையில் 2 அவசர வழி பாதைகள் உள்ளன. அவற்றை மேற்புறமாக தள்ளி திறந்து வெளியேற முடியும்.

சீட் பெல்ட்
****************************

முன் இருக்கைகளிலும், கடைசி வரிசையிலுள்ள நடு இருக்கையிலும் சீட் பெல்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பயணத்தின்போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாத்தியமா?
*****************************

பஸ்சின் நாலாபுறமும் அவசர கால வழிகள் இருந்தாலும், அதிலிருந்து எளிதாக வெளியேற முடியுமா என்பதில் இன்னமும் சிக்கல் இருக்கிறது. நடுநிசியில் விபத்து நிகழும்போது அதனை பயணிகள் ஊகித்து சுதாரிப்பதற்குள் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவது சமீபத்திய சம்பவங்கள் ஆதாரமாக நிற்கின்றன. முன்புறம் விபத்து நிகழும்போது வேண்டுமானால் இந்த வழிகள் கைகொடுக்கும். ஆனால், ஒரு சில நிமிடங்களில் பஸ் முழுவதுமாக தீப்பிடித்து எரியும்போது உள்ளே இருப்பவர்கள் அத்துனை துரிதமாக செயல்பட்டு வெளியேற முடியுமா என்பது இப்போதும் சந்தேகத்திற்கு இடமானதாகவே தெரிகிறது. மேலும், கண்ணாடி ஜன்னலை உடைத்து கீழே குதிக்கும்போதும் பெரிய அளவில் காயமடைவதற்கான வாய்ப்பும் இருப்பதோடு, பெண்கள் மற்றும் வயதானவர்கள் வெளியேறுவதில் பெரும் சிக்கல் இருக்கிறது.

தீர்வு
****************

அனைத்து வால்வோ பஸ்களிலும் சரியான உயரத்தில் எளிதாக வெளியேறும் வகையில் ஒரு அவசர கால வழி அமைப்பதே சிறந்த தீர்வாக இருக்கும். கர்நாடக அரசு போட்ட அதிரடி உத்தரவை பின்பற்றி, வால்வோ பஸ்களை இயக்கும் அனைத்து  டிராவல்ஸ் நிறுவனங்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இரண்டு இருக்கைகளின் வருவாய் பாதித்தாலும் பரவாயில்லை, பயணிகளின் உயிர் அதனைவிட முக்கியம் என்பதை மனதில் வைத்து, எளிதாக வெளியேறுவதற்கான அவசர வழி அமைத்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற மோசமான சம்பவங்களை தவிர்க்கலாம். தவிர, பஸ்சில் பயணிகள் அமர்ந்தவுடன் அவசர கால வழிகள் அமைந்துள்ள பகுதிகள் குறித்த தகவல்களை நடத்துனர் மூலம் பயணிகளுக்கு தெரிவிப்பதும் அவசியம்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home