மிளகாய் நல்லதா? கெட்டதா?
மிளகாய் நல்லதா? கெட்டதா? அதிக காரம் சாப்பிட்டால் அல்சர் வருமா? அதிக மிளகாய் சேர்த்த
உணவு சூட்டைக் கிளப்புமா? இப்படி மிளகாயைப் பற்றிப் பரவலாக பலருக்கும் பல
கேள்விகள்...
- எந்த சமையலுக்கும் சுவைகூட்டும் முக்கியப் பொருளான மிளகாயில், நல்லதும் கெட்டதுமான அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன என்பதே உண்மை.பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், குடைமிளகாய் என மிளகாயில் பல வகைகள் உள்ளன. எல்லா மிளகாய்க்கும் குணங்கள் ஒன்றே. ஒரே ஒரு வித்தியாசம்... காய்ந்த மிளகாயில் மட்டும் கலோரியும், வைட்டமின் ஏ சத்தும் மற்றதைவிட சற்றே அதிகம்.
- கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம். தவறில்லை. எடைக் குறைக்கிற முயற்சியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைப் போல எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது. எந்த உணவையும் சுவைபட மாற்ற, அவர்கள் மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.
- நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும்கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற வைட்டமின் ஏ சத்தானது அதிகம். அதனால், விழித் திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது.
- வைட்டமின் சி சத்தும் அதிகம். அதனால் ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. மிளகாயில் ஃபைட்டோகெமிக்கல் அதிகம். சிணீஜீsணீவீநீவீஸீ என்கிற நிறமிதான் மிளகாயின் காரசார ருசிக்குக் காரணம். இந்த நிறமி அதிகமானால் மிளகாயில் காரம் அதிகரிக்கும். குறைந்தால் காரமும் குறையும்.
- நரம்புப் பிரச்னை உள்ளவர்களுக்கும், சொரியாசிஸ் என்கிற சரும நோய் உள்ளவர்களுக்கும் மிளகாய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
- மிளகாயில் உள்ளதாகச் சொன்ன Capsaicin பொருளானது, நம் உடலில் தோன்றும் வலியானது சருமத்திலிருந்து தண்டுவடத்துக்குப் போகாமல் காக்கிறது. அப்படி தண்டுவடத்துக்கு வலி இடம் பெயர்ந்தால், அது மூளையில் உணரப்படும். அடிபட்டவர்களுக்கும், வெட்டுக்காயம் பட்டவர்களுக்கும் காரமான உணவு கொடுக்கச் சொல்வதன் பின்னணி இதுதான்.மிளகாய் எடுத்துக் கொள்வதால், என்டார்ஃபின் எனப்படுகிற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.
அப்படி சாப்பிட்டால் குடல் பிரச்னை, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்னை, மூலநோய் போன்றவை வரலாம். மிகவும் காரமான உணவு உண்ணும் போது, அந்தக் காரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த மிதமான உணவுகளையும் எடுக்க வேண்டும். அதனால்தான் தயிர்சாதம் - ஊறுகாய் போன்ற காம்பினேஷன்களை நம் முன்னோர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்!
வயிற்றுப்புண் இருப்பவர்களும், அமிலச் சுரப்பு பிரச்னை உள்ளவர்களும் மிளகாயை எடுத்துக் கொண்டால் பிரச்னை தீவிரமடையும். குடைமிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம். அது புற்றுநோய்க்கு எதிராக போராடக் கூடியது என்பது உண்மை. ஆனாலும், அதையும் பச்சையாகவோ, அதிகமாகவோ எடுக்க வேண்டாம்.
என்ன இருக்கிறது? 100 கிராமில்...
காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் குடை மிளகாய்
ஆற்றல் 246 கிலோ கலோரி 29 கிலோ கலோரி 24 கிலோ கலோரி
புரதம் 15.9 கிராம் 2.9 கிராம் 1.3 கிராம்
கொழுப்பு 6.2 கிராம் 0.6 கிராம் 0.3 கிராம்
நார்ச்சத்து 30.3 கிராம் 6.8 கிராம் 1.0 கிராம்
இரும்பு 2.3 கிராம் 4.4 கிராம் 0.567 கிராம்
கால்சியம் 160 மி.கி. 30 மி.கி. 10 மி.கி.
வைட்டமின் சி 50 மி.கி. 111 மி.கி. 137 மி.கி.
வைட்டமின் ஏ 345 மியூஜி* 175 மியூஜி 427 மியூஜி
ஸ்பெஷல் ரெசிபி
குடை மிளகாய் சட்னி
என்னென்ன தேவை?
குடைமிளகாய் - 1, தக்காளி - 1, சாம்பார் வெங்காயம் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயம் - 1 சிட்டிகை, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - தாளிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் காய வைத்து, குடைமிளகாய் முதல் பெருங்காயம் வரையிலான அனைத்தையும் நன்கு வதக்கி, பிறகு அரைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்துப் பரிமாறவும்.
மிளகாய் சாதம்
என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, சீரகம் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி மற்றும் புதினா தழை - தலா 10 கிராம், எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
காய்ந்த மிளகாயை சிறிது தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், சீரகம் தாளிக்கவும். பிறகு அரைத்த மிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும். பிறகு அரிசியைச் சேர்த்துப் பிரட்டி, அளவாகத் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி, வேக விடவும். பாசுமதி அரிசிக்கு பதில் கைக்குத்தல் அரிசியிலும் இதே முறையில் செய்யலாம். தொட்டுக் கொள்ள காய்கறி குருமா நல்ல பொருத்தம்.
மிளகாய் - புளி ஊறுகாய்
என்னென்ன தேவை?
பச்சை மிளகாய் - 50 கிராம், இஞ்சி விழுது - 50 கிராம், புளி விழுது - 1 டேபிள்ஸ்பூன், வெல்லம் - 20 கிராம், நல்லெண்ணெய் - 30 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் காய வைத்து, இஞ்சி விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெல்லம், புளி விழுது சேர்த்து வதக்கிப் பரிமாறவும். தயிர் சாதம், இட்லி, தோசைக்கு பிரமாதமான சைட் டிஷ்!
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home